கண்ணீரைப் பன்னீராய் மாற்றுவோம்.
தோற்றுவிட்டோம் என்பதுவும் உண்மைதான் – அதற்காக
துயர்கொண்டு துவண்டுமனம் வெம்பலாமா
போற்றும்படி நம்நிலைமை இல்லைதான் – அதற்காக
தூற்றும்படி தரம்தாழ்ந்து போகலாமா
சாலைகள் சமைத்தோம் வீதிகள் அமைத்தோம்
விபத்துக்களே நமக்கு விதியாயின - இனி
பாலையில் விதைக்கும் பகுத்தறிவில்லா
பழக்கத்தை வழக்கத்தை புதைப்போம்.
இருள்சூழ்ந்த எதிர்காலம் உண்மைதான் – அதற்காக
ஈசலா,நாம் இழிவாகச் சாவதற்கு
வறுமைநமை வாட்டுவதும் உண்மைதான் – அதற்காக
மண்புழுவா வெந்தணலில் நோவதற்கு
காடுகள் திருத்தி தோட்டங்கள் செய்தோம்
கேடுகள்தான் நம்மைவந்து சேர்ந்தன – இன
சாடுவோம் நம்மை வீழ்த்திய விசைகளை
தேடுவோம் வெற்றியின் திசைகளை.
நாதியில்லை நமதுகுறை கேட்பதற்கு – அதற்காக
நலம்கெட்டு தெருவோரம் வாடலாமா
நீதியில்லை நமதுநிலை மாற்றுதற்கு – அதற்காக
நெறிதவறி முறைகெட்டு வாழலாமா
காலைமாலை இரவுபகல் உழைத்தும் நல்ல
வேலைவந்து சேராது களைத்தோம் – இனி
நாளை நமதெனும் கனவை கலைத்து
இன்றெ நமதெனப் பாடுவோம்.
வாழ்க்கையிலே வளமில்லை உண்மைதான் – அதற்காக
வழிமாறி தடம்புரண்டு வீழலாமா
ஏழ்மையிலே உழல்கின்றோம் உண்மைதான் – அதற்காக
ஊழ்வினைதான் எனநம்பி ஓயலாமா
தன்னலம் துறந்து தளரா துழைத்தோம்
இன்னல்களே நம்மைவந்து சேர்ந்தன – இனி
கொண்டதே கோலமெனும் கோணலை அழிப்போம்
கண்ணீரைப் பன்னீராய் மாற்றுவோம்.
No comments:
Post a Comment