அம்மா.......
அம்மா……
அகரத்தில் துவங்கும் நீயே
என் ஆதிபகவன்
எனக்காகவே
உனக்குள் ஒரு
கிரகத்தை உருவாக்கினாய்
கருவாக்கி உருவாக்கி
மனிதன் எனும் நிறைவாக்கிய
கருவறை என்ற
கர்ப்பக்கிரகம்
ஆகவே............
நீதான் என்
கண்கண்ட கடவுள்
பிறக்கும்போதே
இறை என் நாக்கில்
எழுதிவைத்த மறை
அம்மா...
நீ எழுதிய
கவிதை நான்
பிறகு..............
கவிதையே
மூன்றே எழுத்தில் எழுதிய
முதல் கவிதை
அம்மா...
இந்தப் பிரபஞ்சத்தின்
பிரஜயாக என்னை நீ
பிரசவித்தபோது
நான் பாடிய தேசிய கீதம்
அம்மா...
தொப்புள் கொடியை
வெட்டிப் பிரிக்கும்வரை
நீ வேறு
நான் வேறு இல்லை
அப்போது............
நம் உறவைச் சொல்ல
உலகில் எந்த மொழியிலும்
வார்த்தைகள் இல்லை.
உன் மடியும் மார்பகமுமே
எனக்கு மட்டும் சொந்தமான
பிரபஞ்சமாக இருந்த காலம் தொட்டு
பிரமம் என்றார்கள்.................!
அகிலாண்டக்கோடி
பிரமாண்ட நாயகன் என்றார்கள்..............!
எனக்கென்ன தெரியும்...........
உன்னைத்தவிர................!
உன் மடியென்னும் சொர்க்கத்தை விட்டு
என் மறூஉலகத்திற்கு வந்தபோது
என் மனதிற்குள்
மனிதனாக இருந்த என்னை புனிதனாக்குவதற்காக
என் குருமார்கள் வந்தார்கள்.
பின் அவர்களின் கற்பனையில் உருவான
கடவுள்கள் வந்தார்கள்.
பின் சதிபதியாய் வாழ என் மறுபாதி கேட்டு
என் மனைவி வந்தாள்.
பின் அவளும் நானும் சேர்ந்து உருவாக்கிய
மக்கள் வந்தார்கள்.
ஆனால் அப்போதெல்லாம் என்னிலிருந்து
நீதான் இல்லாது போனாய்............!
!
பத்து மாதங்களாக
பத்தியம் இருந்து
இரவு பகலாக
உன் உயிரெனும் உளியால்
என் உடலைச் செதுக்கி
உன் ஆவியை என்னுள்
பத்திரமாய் பதுக்கி
மனிதனாய் என்னை
புனிதமான இந்த பூமிக்கு
அர்ப்பணித்த என் அம்மா.....
நீதான் என் பிரம்மா
அம்மா........
உன் மரணத்திற்குப் பிறகுதான்
மற்ற உறவுகளின்
பரிமாணம் தெரிந்தது
உன் உயிரில் விளைந்த
பயிர் நான் என்ற
பரிணாமம் புரிந்தது
ஆகவே.......
நீதான் நான்
என் மகள்தான் நீ.
அம்மா........
எனக்கு நினைவிருக்கிறது
எனக்காக நீ பாடிய
யாப்பிலக்கணத் தாலாட்டு
அந்த நீ சீராட்டிய ஆராட்டிலிருந்து
சிந்தியவைதான்
நான் இப்போதெல்லாம்
யாத்துப்பாடும் தமிழ்ப்பாட்டு.
நீ
என் உச்சி முகர்ந்தபோதுதான்
என்னுள் உறங்கிக்கிடந்த
சச்சிதானந்தம் உயிர்த்தெழுந்தது.
பத்துமாதச் சிலுவையிலிருந்து
நீயும் நானும் உயிர்த்தெழுந்தோம்.
அதன் பின் நான்
புன்னகைக்கவும்
அழவும் மட்டுமே தெரிந்த
சின்னஞ்சிறு புத்தனானேன்
நீ என் போதிமரமானாய்.
என்னுடைய அவதாரத்திற்காக
நீ கூட்டுப்புழுவானாய்
உன்னிளிருந்து நான்
பட்டாம்பூச்சியானேன்.
தேவதாருவாகிய
உன்னிள் துளிர்த்த
முதல் தளிர் நான்
உன் மூத்த மகன் நான்.
அன்று..........
உன் கைகளிலும் மடியிலும்
தவழ்ந்த
செல்லப்பிள்ளை நான்.
இன்று..........
காலக் காற்றின் உக்கிரத்தில்
தள்ளாடிக்கொண்டிருக்கும்
பழுத்த இலை.
காய்ந்த சருகாக இம்மண்ணில்
நான் விழுவதற்கு முன்
பத்து மாதத் தவணையில்
நான் வாழ்ந்த சொர்க்கமும்
அப்போது
எனக்கு மட்டும் சொந்தமாக இருந்த
என் மணோராஜ்ஜியத்தின் வாசலுமான
உன் மடியில் நான்
தலைசாய்க்க வேண்டும்
தாயே......
எனக்குச் சிறகுகள் முளைத்தபின்
உன் அரவணைப்பிலிருந்து அறுபட்டு
உன் நினைவே இல்லாமல்
பறந்து திரிந்த காலங்களில்
நான் தொலைத்து விட்டதாக எண்ணிய
என் சொர்க்கம்
உன் காலடிகள்தான் என்பதை
இப்போது உணர்கிறேன்
அம்மா......
No comments:
Post a Comment