Wednesday, February 16, 2011

வாழைமரங்கள்

வாழையடி வாழையாக வாழ்கவென
உங்களை உவமையாக வைத்து
எங்களை எங்கள் இனத்தவர்கள்
வாழ்த்துவதால்தானோ என்னவோ………….
ஒரு தலைமுறையின்
அறுவடையின் அழிவில்தான்
எங்களுக்கான மறுதலைமுறையின்
அறுவடைக்கான
மறுநடவு செய்யப்படுகிறது.

வெயில்தான் உனக்கு உணவு
அது போலவே
வறுமைதான் எங்களுக்கு வாழ்வு.

மலர்களோடு சேர்ந்ததால்
உன் நாரெனும் நரம்பும்
நறுமணம் பெறுகிறதாம்…………!
இப்படிச் சொல்லித்தான்
எங்களையும் ஏமாற்றினார்கள்.



நீங்கள் ஒரே வெட்டில்
வீழ்ந்துவிடும் வழுவில்லாதவர்கள்
ஆனால் எங்களில் பலரோ
வெட்டுவதற்கு முன்பே விழும்
தெளிவில்லாதவர்கள்……….!

உங்களுக்குள்ளே நீங்கள்
வெட்டிக்கொள்(ல்)வதில்லை
ஆனால்………….
நாங்கள் அதைச் செய்கிறோம்.


No comments:

Post a Comment