Wednesday, February 23, 2011

பழிசுமக்கும் மாபலிகள்

பாவம் அவர்கள்………….!
அவர்களை
குறுகிய மனப்பான்மை உடையவர்களென்று
குறை சொல்லாதீர்கள்
அவர்கள்…………
மற்றவர்கள் நிறைவான வாழ்க்கையுடன்
நிமிர்ந்து நிற்க வேண்டுமென்பதற்காக
தங்களின் தன்னலமற்ற உழைப்பை
அவர்களுக்கு
தானமாகத் தாரைவார்த்துவிட்டு
அதற்கு காணிக்கையாக
அவர்கள் தந்த
சாபங்களையும் சோகங்களையும்
தங்களின் முதுகில் சுமந்து சுமந்தே
கூனர்களாகிப் போனவர்கள்.

தன்மானமற்றவர்கள் என்று அவர்களைத்
தவறாக எடைபோடாதீர்கள்.
வலிந்து தரப்பட்ட வறுமையெனும்
காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டோடும்போது
வேறுவழியின்றி
தங்களைத் தற்காத்துக்கொள்ள
தலைவணங்கும் நாணல்களைப் போல
பல தலைமுறைகளாக
சுரண்டப் பட்டு சுரண்டப்பட்டே
சூடுதாங்காமல் சுருண்டுபோனவர்கள்.

அவர்கள் தங்களுக்குள்
ஒற்றுமையில்லாதவர்கள் என்று
ஓலமிடாதீர்கள்.
அவர்கள்…….
தங்களுடைய கனவுகளையெல்லாம்
தங்களின் கண்களே
கவர்ந்து கொண்டதால்
தவறான தப்பெண்ணத்தால்
இமைகளின்மேல் கோபங்கொண்டு
இமைப்பதையே விட்டுவிட்டவர்கள்.

நண்டுகளை உவமை காட்டி
அவர்களை
நையாண்டி செய்யாதீர்கள்.
அவர்கள்…………
அவர்களை ஆளவேண்டுமென்று
ஆசைப்பட்டவர்களுக்கெல்லாம்
தங்களின் வேர்களையே
விழுதுகளாகத் தந்த விபீஷணர்கள்.

அவர்கள்…………
அசிங்கமானவர்கள் என்று
அருவருப்புக் கொள்ளாதீர்கள்.
அது அழுக்கல்ல…….!
அவர்களின் நிறம்.

No comments:

Post a Comment