நம்பு தமிழனே நம்பு........!
பஞ்ச வர்ணக் காக்கை ஒன்று
மஞ்சள் நிறப் பாடாக் குயிலுடன்
கூடி வாழ்ந்து குடும்பம் நடத்தி
பெங்குயின் பறவை ஒன்றை ஈன்றது
நம்பு தமிழனே நம்பு!
நாளைக் காலையில் உதிக்கும் சூரியன்
சதுர வடிவில் சந்தன நிறத்தில்
மேகம் இல்லா பச்சை வானில்
மேற்கே தோன்றி வடக்கே மறையும்
நம்பு தமிழனே நம்பு......!
பாலை வனத்தில் பதமாய்க் காய்ந்த
பக்குவ மான மணலைக் கொண்டு
களைப்பு இன்றி கால்களி னாலே
கலைநயத் துடனே கயிரு திரித்தேன்
நம்பு தமிழனே நம்பு!
அவித்த கடலையில் முளைத்த பயிரை
அனுதினம் மேய்ந்து கொழுத்துப் பெருத்த
காதல் செய்யாத எங்கள் வீட்டுக்
காளை மாடு கன்று ஈன்றது
நம்பு தமிழனே நம்பு!
உலகத் தமிழர்கள் ஒன்று கூடி
ஓரினம் நாமெனும் கொள்கையை நாடி
வளமாய் நம்மிடை வளர்ந்திடும் சாதியை
தமிழ்க்குலம் காத்திட தகர்த்தெறிந் தனரே
நம்பு தமிழனே நம்பு!
No comments:
Post a Comment