கரையேறாத கடல் ஆமைகள்
தோட்டப் புறங்களில் தொடங்கிய வாழ்க்கையில்
தொழில்வளம் சேர்த்துத் தந்தோம் – தேசம்
செழித்திடத் தோள்கள் கொடுத்தோம்
காட்டைத் திருத்தியே தோட்டங்கள் செய்தோம்
கடலளவு செல்வம் விளைத்தோம் – ஆனால்
கரையேற மறந்து விட்டோம்.
ஒற்றுமை இல்லாத இனமான தால்இங்கு
உரிமைகளை இழந்து விட்டோம் – நாங்கள்
ஓட்டாண்டி யாகி விட்டோம்.
கற்றது கையளவே யானாலும் அதன்படி
நிற்க மறந்து விட்டோம் – நியாயத்தில்
நிலைக்கத் தவறி விட்டோம்.
திருக்குறள் சொன்னதை திருமூலன் தந்ததை
தெருப்பலகை யாக்கி வைத்தோம் – முதுமக்கள்
தாழியில் பூட்டி வைத்தோம்
ஆரியன் காட்டிய அழிவான பாதையை
ஆகமம் வேதம் என்றோம் – இன
அழிவிற்கு வழி வகுத்தோம்.
கலைகலாச் சாரத்தில் சீரிய பண்பாட்டில்
பிழைகளை செழிக்க விட்டோம் – சினிமாக்
களைகளை தழைக்க விட்டோம்
மூளையை முடமாக்கி மோழையாய் நமைமாற்றும்
வழக்கத்தின் வழி நடந்தோம் – மூடப்
பழக்கத்தின் தடம் கிடந்தோம்.
நாளை நமதெனும் நம்பிக்கை விடுத்து
இன்றே நமதெனப் பாடுவோம் – நம்
இதயத்தில் புத்தொளி ஏற்றுவோம்
ஏழை சமூகமெனும் இழிவினைப் போக்குவோம்
ஏற்றம்தரும் ஒழுக்கங்கள் பேணுவோம் – நம்
இளையோர்க்கு நல்வழி காட்டுவோம்.
No comments:
Post a Comment