பெரியோர்களே தாய்மார்களே மற்றும் எங்கள்
பேரன்புக் குரித்தான உடன்பிறப் புக்களே
சரியானசந் தர்ப்பங்களை யெல்லாம் நாட்டில்
பரிகொடுத்துப் புரியாது தலைசொறி யுமெங்கள்
அறிவார்ந்த தலைவர்களே; மேன்மை யூட்டும்
நெறிசார்ந்த போதனைகள் இருந்தும் மனதில்
வெறியூட்டும் பேதமைக்கு அவைக்களம் கூட்டும்
அன்பார்ந்த தோழர்களே வணக்கம் வாழ்க!
எப்படியோ வாழ்ந்தவர்கள் எல்லாம் நாட்டில்
‘’யம்மாடியோவ்‘’ எனத்திகைக்கும் வண்ணம் வாழ்வின்
உப்பரிகையில் நிற்கின்றார் ஆனால் நாமோ
உப்புமூட்டை சுமக்கின்றோம் கூலி களாக
தப்பெங்கே செய்தார்கள் நம்முன் னோர்கள்
தவறெங்கே நிகழ்ந்ததென்று சிந்திப்போமா……!
ஒப்பாரி வைத்திங்கே அழுவதை விட்டு
உட்கார்ந்து யோசிப்போம் இதயம் தொட்டு.
இளமையிலே வரும்வறுமை இதயம் தன்னில்
ஏக்கங்களை தேக்கிவைத்து எரிமலை யாக்கும்
இளமையிலே வரும்ஏழ்மை ஆழ்மனத் துள்ளே
இருள்தேக்கி அருள்நீக்கி பாலை யாக்கும்
இளையோரின் எதிர்காலம் செழித்தா லின்றி
இனத்திற்கு இந்நாட்டில் விடிவு இல்லை
இலவுகாத்த கிளியாக இனியும் வாழ்ந்தால்
இழவுநம்மைத் தேடிவரும் தொடரும் தொல்லை.
இளையோரின் எதிர்காலம் இருண்டு போனால்
இனமிங்கே பிழையாகும்; அதனால் நாட்டில்
கொலைகளவு குற்றங்கள் பெருத்துப் போகும்
குலப்பெருமை இந்நாட்டில் சிறுத்துப் போகும்
வளமில்லா வாழ்க்கைக்கு உழைக்கல மாகும்
வறுமைக்கும் வன்முறைக்கும் உறவு உண்டு
நலம்வேண்டும் பெரியோரிதை கருத்தில் கொண்டு
நம்மிளைஞர்க் குழைத்திட்டால் அதுதான் தொண்டு.
ஆண்டவனைப் போற்றுகின்ற நேரம் போக
ஆங்கிலத்துட விஞ்ஞானம் கணிதம் மற்றும்
வேண்டுகின்ற வரத்தையெல்லாம் அருளு கின்ற
விஞ்ஞானம் பெற்றெடுத்த கணிணி யோடு
மாண்புடனே இந்நாட்டில் வாழ்வ தற்கு
வாழ்க்கைநெறி போதிக்கும் வகுப்புக் களெல்லாம்
ஆண்டவனின் தொண்டாக கருதி இங்கே
ஆலயங்கள் தோறும்நாம் நிறுவ வேண்டும்.
சிங்கைத்தமிழ் இளையோர்கள் நலத்திற் காக
‘’சிண்டா’’வெனும் ஓரமைப்பு இருப்பதைப் போல
இங்கேயும் நமக்குஓர் அமைப்பு வேண்டும்
இருந்திட்டால் இனமிங்கே இழிவைத் தாண்டும்
மங்காத புகழோடு இனம்இந் நாட்டில்
மாண்புமரி யாதையுடன் வாழ்வதற்கே
பொங்குகின்ற மங்களமாய் கல்விச் செல்வம்
தங்கவேண்டும் நம்மவர்கள் இல்லம் தோறும்.
வேண்டுதல்வேண் டாதவனின் ஆலயம் தோறும்
வேண்டாத வினைகளைநாம் நிறுத்த வேண்டும்
வீண்வம்பு அடிதடிகள் அரட்டை மற்றும்
வேதனைகள் தருகின்ற விழாக்களை யெல்லாம்
ஆண்டவனின் புனிதத்தைக் காக்க வேண்டி
அவசியமாய் எதிர்ப்பின்றி தவிற்க வேண்டும்
சான்றோர்கள் ஒன்றுகூடி சபைகள் கூட்டி
சீலத்தை இளையோர்க்குப் புகட்ட வேண்டும்.
No comments:
Post a Comment