Monday, October 22, 2012

ஆயாக்கொட்டகைகள் எனும் நரகக்குழிகள்


          

இங்குதான்……………
அந்த சஞ்சி காலத்திலிருந்து
இரப்பர் தோட்டங்கள்
செம்பனைத் தோட்டங்களாக
பரிணாம வளர்ச்சியடைந்த
கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை
நாடெங்கும் நாறிக்கொண்டிருந்தது
இந்த ஆயாக்கொட்டகைகள் எனும்
தோட்டப் பாட்டாளிகளின் குழந்தைகளுக்கான
குழந்தை வளர்ப்புப் பண்ணையான
நரகக் குழிகள்.

சிலுவையில் அறையப்படாமலேயே
சித்திரவதை செய்யப்பட்டு
ஒவ்வொரு நாளும் உயிர்த்தெழுந்தார்கள்
அந்த சின்ன சின்ன யேசுக்கள்.

அவை……..
கூலிகளுக்கு பிறந்துவிட்ட
குற்றத்திற்கான தண்டனைக்காக
தோட்டப்புறங்கள் தோறும் தோற்றுவிக்கப்பட்ட
குழந்தைகளுக்கான
சின்னச் சின்ன சிறைச்சாலைகள்.

“ சொக்கரா “ என்றழைக்கப்பட்ட
எதிர்கால குழந்தைத் தொழிலாளர்களுக்கான
அறுவடைக்காக
தோட்டங்கள் தோறும்
காலனித்துவ வெள்ளைக் காலாடிகளும்
அவர்களுக்குப்பின்
உள்நாட்டு சீனக் கில்லாடிகளும்
தோற்றுவித்த
நாற்(ற)றுப் பண்ணைகள்.

மலமூத்திர நாற்றத்தில்
கொசுக்களுக்கும் ஈக்களுக்கும் மத்தியில்
அவ்வப்போது
அன்பில்லாத ஆயாக்களின்
அதட்டல்களின் அதிர்ச்சியிலும்
அந்த வாடிய பூமொட்டுகள்
பூக்க முயன்று செத்துப் பிழைத்தன.
பல செத்தே போயின.

எதிர்கால கூலிகளுக்கான விதைகள்
இந்தப் பாத்திகளில்தான்
மிகப் பத்திரமாகவும்
நாஜித்தன உத்திகளோடு
பதியன் போடப்பட்டது.

இந்த முடைநாற்ற முழையில்தான்
ஒரு இனத்தின் எதிர்காலம்
முளையிலேயே கிள்ளியெறியப்பட்டு
முடமாக்கப்பட்டது.

இந்த கூட்டுக்குள் புகுந்த ‘’ லார்வாக்கள் ‘’
பட்டாம்பூச்சிகளாக பரிணாம வளர்ச்சியடைந்து
சுதந்திரமாக பறப்பதிற்கு பதில்
கூட்டுப் புழுக்களாகவே
தோட்டப்புற தொழுவங்களில்
குறுகிப் போயின.
ஏய்க்கப்பட்ட ஏழைகளாகவும்
உரிமைகளை இழந்த கோழைகளாகவும்
வாழ்வதற்கான அடிப்படை பாடங்கள்
இந்த ‘’ நெர்ஷரி ‘’ யில் தான்
அந்த பச்சைப் பாலகர்களுக்கு
பயிற்றுவிக்கப்பட்டது.

ஊட்டச்சத்து இல்லாத உணவில்
உயிர்வாழ்வது எப்படியென்றும்
சுத்திகரிப்பட்ட தண்ணீரில்லாமல்
அசுத்த ‘’ அல்லூர் ‘’ தண்ணீரை எப்படி
அள்ளிக் குடிப்பது என்றும்
மலக்கூடமில்லாததால் தோட்டக்காட்டில்
அம்மணத்தை மறைத்தவாறு
மலங்கழிப்பது எப்படியென்றும்
இங்கேதான் சொல்லிக் கொடுத்தார்கள்.

‘’ கிலிங் ‘’ என்றழைத்த கேலியையும்
வந்தேறிகளெனும் நிந்தனையையும்
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடு
தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை
இங்குதான் சொல்லிக் கொடுத்தார்கள்.


 





No comments:

Post a Comment