Monday, October 22, 2012

அம்மா...........அம்மா.........அம்மா.




அம்மா.
அகரத்தில் துவங்கும் நீயே
என் ஆதிபகவன்.

எனக்காகவே உனக்குள் ஒரு
கிரகத்தை உருவாக்கினாய்.....!
கருவாக்கி உருவாக்கி
மனிதன் எனும் நிறைவாக்கிய
கருவறை என்ற கர்ப்பக்கிரகம்.
ஆகவே............
நீதான் என் கண்கண்ட தெய்வம்.

பிறக்கும் போதே
இறை என் நாக்கில்
எழுதி வைத்த மறை
" அம்மா "

நீ எழுதிய கவிதை நான்.
பிறகு.........!
கவிதையே மூன்றே எழுத்தில் எழுதிய
முதல் கவிதை
" அம்மா "

இந்தப் பிரபஞ்சத்தின் பிரஜையாக
என்னை நீ பிரசவித்த போது
நான் பாடிய தேசிய கீதம்
" அம்மா "

தொப்புள் கொடியை
வெட்டிப் பிரிக்கும் வரை
நீ வேறு நான் வேறு இல்லை.
அப்போது நம் உறவைச் சொல்ல
உலகில் எந்த மொழியிலும்
வார்த்தைகள் இல்லை..!

பத்து மாதங்களாக பத்தியம் இருந்து
இரவு பகலாக உன் உயிரெனும் உளியால்
என் உடலைச் செதுக்கி
உன் ஆவியை என்னுள்
பத்திரமாய் பதுக்கி
மனிதனாய் என்னை இந்த பூமிக்கு
அர்ப்பணித்த என் அம்மா.........
நீதான் என் பிரம்மா.

அம்மா..........
எனக்கு நினைவிருக்கிறது......!
எனக்காக நீ பாடிய
யாப்பிலக்கணத் தாலாட்டு.
என்னை நீ சீராட்டிப் பாராட்டிய
அந்த ஆராட்டிலிருந்து சிந்தியவைதான்
இன்று நான் யாத்துப் பாடும்
தமிழ்ப் பாட்டு.

நீ என் உச்சி முகர்ந்த போதுதான்
என்னுள் உறங்கிக் கிடந்த
சச்சிதானந்தம் உயிர்த்தெழுந்தது.

பத்து மாதச் சிலுவையிலிருந்து
நீயும் நானும் உயிர்த்தெழுந்தோம்.
அதன் பின் நான்
புன்னகைக்கவும் அழவும் மட்டுமே தெரிந்த
சின்னஞ்சிறு புத்தனானேன்.
நீ என் போதி மரமானாய்.

என்னுடைய அவதாரத்திற்காக
நீ கூட்டுப் புழுவானாய்.
உன்னிலிருந்து நான்
பட்டாம்பூச்சியானேன்.

No comments:

Post a Comment