Wednesday, October 31, 2012

தோட்டப்புற ஆயாக்கொட்டகைகள்


தோட்டப்புற ஆயாக்கொட்டகைகள்.
--------------------------------------------------------------



இங்குதான்……………………!
அந்த சஞ்சிகாலத்திலிருந்து
இரப்பர் தோட்டங்கள்
செம்பனைத் தோட்டங்களாக
பரிணாம வளர்ச்சியடைந்த
கொஞ்சகாலத்திற்கு முன்பு வரை

பாட்டாளிகளுக்கு பிறந்துவிட்ட பாவத்திற்காக
தோட்டப்புறங்கள்தோறும் தோற்றுவிக்கப்பட்ட
குழந்தைகளுக்கான
சின்னச் சின்ன சிறைச்சாலைகள்.

எதிர்காலத் தமிழ்க் கூலிகளுக்கான விதைகள்
இந்த பாத்திகளில்தான்
மிகப் பத்திரமாகவும்
நாஜித்தன உத்திகளோடும்
பதியன் போடப்பட்டது.

இந்த முடைநாற்ற முழையில்தான்
ஒரு இனத்தின் எதிர்காலம்
முளையிலேயே கிள்ளியெறியப்பட்டு
முடமாக்கப்பட்டது.

சிலுவையில் அறையப்படாமலேயே
இந்த சின்னச் சின்ன யேசுக்கள்
சித்திரவதை செய்யப்பட்டு
செத்துச் செத்து
ஒவ்வொரு நாள் காலையிலும்
உயிர்த்தெழுந்தார்கள்.

‘’சொக்கரா’’ என்றழைக்கப் பட்ட
வருங்கால குழந்தைத் தொழிலாளர்களுக்காகவும்
எதிர்கால தோட்டப் பாட்டாளிகளுக்காகவுமான
அறுவடைக்கு
காலனித்துவ காலாடிகளும்
அவர்களுக்குப்பின்
உள்நாட்டுக் கில்லாடிகளும் தோற்றுவித்த
நாற்(ற)றுப் பண்ணைகள்.

இந்த கூட்டுக்குள் புகுந்த லார்வாக்கள்
பரிணாம வளர்ச்சியடைந்து
சிறகுகளோடு பட்டாம்பூச்சிகளாக
சுதந்திரமாக பறப்பதற்கு பதில்
கூட்டுப்புழுக்களாகவே
குறுகிப்போயின.

ஏய்க்கப்பட்ட ஏழைகளாகவும்
உரிமைகளை இழந்த கோழைகளாகவும்
வாழ்வதற்கான அடிப்படை பயிற்சிகள்
இந்த ‘நர்ஷரி’யில்தான்
பச்சைப் பாலகர்களுக்கு பயிற்றுவிக்கப் பட்டது

இரப்பர் தோட்ட முதலாளிகளின்
பகட்டிற்கும் பந்தாவிற்குமான
பட்டாடைகள் நெய்வதற்கான
பட்டுப்புழுக்களை இங்கே
தொட்டில் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள்.




No comments:

Post a Comment