Thursday, November 29, 2012

கண்ணீரைப் பன்னீராய் மாற்றுவோம்


கண்ணீரைப் பன்னீராய் மாற்றுவோம்.
தோற்றுவிட்டோம் என்பதுவும் உண்மைதான்அதற்காக
துயர்கொண்டு துவண்டுமனம் வெம்பலாமா
போற்றும்படி நம்நிலைமை இல்லைதான்அதற்காக
தூற்றும்படி தரம்தாழ்ந்து போகலாமா
சாலைகள் சமைத்தோம் வீதிகள் அமைத்தோம்
விபத்துக்களே நமக்கு விதியாயினஇனி
பாலையில் விதைக்கும் பகுத்தறிவில்லா
பழக்கத்தை வழக்கத்தை புதைப்போம்.

இருள்சூழ்ந்த எதிர்காலம் உண்மைதான்அதற்காக
ஈசலா,நாம் இழிவாகச் சாவதற்கு
வறுமைநமை வாட்டுவதும் உண்மைதான்அதற்காக
மண்புழுவா வெந்தணலில் நோவதற்கு
காடுகள் திருத்தி தோட்டங்கள் செய்தோம்
கேடுகள்தான் நம்மைவந்து சேர்ந்தனஇன
சாடுவோம் நம்மை வீழ்த்திய விசைகளை
தேடுவோம் வெற்றியின் திசைகளை.

நாதியில்லை நமதுகுறை கேட்பதற்குஅதற்காக
நலம்கெட்டு தெருவோரம் வாடலாமா
நீதியில்லை நமதுநிலை மாற்றுதற்குஅதற்காக
நெறிதவறி முறைகெட்டு வாழலாமா
காலைமாலை இரவுபகல் உழைத்தும் நல்ல
வேலைவந்து சேராது களைத்தோம்இனி
நாளை நமதெனும் கனவை கலைத்து
இன்றெ நமதெனப் பாடுவோம்.

வாழ்க்கையிலே வளமில்லை உண்மைதான்அதற்காக
வழிமாறி தடம்புரண்டு வீழலாமா
ஏழ்மையிலே உழல்கின்றோம் உண்மைதான்அதற்காக
ஊழ்வினைதான் எனநம்பி ஓயலாமா
தன்னலம் துறந்து தளரா துழைத்தோம்
இன்னல்களே நம்மைவந்து சேர்ந்தனஇனி
கொண்டதே கோலமெனும் கோணலை அழிப்போம்
கண்ணீரைப் பன்னீராய் மாற்றுவோம்.



Wednesday, November 28, 2012

தமிழ்த்தாயின் தங்கை


                  தமிழ்த்தாயின் தங்கை

அறிவைப் பெருக்கிட
அன்பை வளர்த்திட
ஔவையின் பாடலப் பாரு – அது
அள்ளித்தரும் பல நூறு – பல
ஐயம்தரும் புதிர்
ஆய்ந்து தெளிந்திட
அருந்தமிழ் தந்த நற்பேறு – அந்த
அன்னையல்லாமல் வேறு யாரு !

கூனிக் குறுகிய
கோழைகள் மத்தியில்
கோபுர மாய்அவர் நின்றார் – மனக்
கூனல் நிமிர்த்தியே வெண்றார் – பலர்
கோடிப் பணத்தினில்
கூடிக் களிக்கையில்
கூழுக்கு மட்டுமே வாழ்ந்தார் – அவர்
கோன்வளர் கொள்அறம் போந்தார்.

சிந்தையை மூடிய
சிந்தியா மாந்தரை
சிந்திக்க செய்யுளைத் தந்தார் – அவர்
திங்களாய் தமிழ்மனம் நின்றார் _ இனம்
ஆடிக் களித்திட
ஆண்டு செழித்திட
ஔவையாய் அவனியில் வந்தார் – பல
ஆயிரம் தத்துவம் ஈந்தார் !

(சாதி இரண்டொழிய வேறில்லை எனும் ஔவையின் செய்யுளை
சாதி வெறியர்கள் கவனிக்கவும்)

தீ


                                             தீ
                 ----

சஞ்சி காலத்தில் அஞ்சி வாழ்ந்த
சஞ்சலம் இன்றும் தொடர்கிறது
நெஞ்சில் வீழ்ந்த பஞ்சத் தீயோ
நிதமும் பற்றி எரிகிறது.

துஞ்சி எழுகிற மஞ்சம் நிலையாய்
துயரச் சந்ததி பெருக்கிறது
பிஞ்சில் பழுத்தே எங்கள் சந்ததி
பஞ்சப் பராரியாய் மடிகிறது

எஞ்சி யிருந்த கொஞ்சப் பெருமையும்
எரிசா ராயத்தில் அழிகிறது
இஞ்சியைத் தின்ற குரங்காய் நம்கதை
இந்த நாட்டில் தொடர்கிறது.

வஞ்சகம் என்று தெரிந்தே சதியில்
வழுக்கி வழுக்கி விழுகிறது
செஞ்சோற் றுக்கடன் தீர்ப்பதைப் போல
கஞ்சியைப் கெஞ்சிப் பெறுகிறது.

மறுபிறவி


                                மறுபிறவி
             -----------------

ஒவ்வொரு விடியலிலும்
விழித்தெழுகிறது
என் பிணம்.

தாஜ்மஹால்


                            தாஜ்மஹால்
           ----------------------

புதைக்க மனமில்லாமல்
ஷாஜஹான் விட்டுச் சென்ற
அழகிய பளிங்குச் சவப்பெட்டி.

இடுகாடு


                                      இடுகாடு

ஆறடி மனித விதைகளை
சடங்கு சம்பிரதாயத்தோடு புதைத்தும்
இது விளையாத பூமி.

உயிர் எனும் திரவத்தை
ஒழுகவிட்ட ஓடைப் பானைகளை
சேமிக்கும் கிடங்கு.

மனித உரிமைகள்


                          மனித உரிமைகள்
          --------------------------------

செடிக்குத் திரும்ப ஆசைப்பட்டு
தன் காயப்பட்ட காம்பைத் தேடி அலைகிறது
பறிக்கப்பட்ட பூ.

ஈமச்சடங்கு


                                ஈமச் சடங்கு
             ---------------------

எல்லாம் முடிந்த பிறகு
சினிமா பாணியில் போலீஸ் வருகிறது
ஐக்கிய நாட்டுச் சபை.

Tuesday, November 27, 2012

வயிற்றெரிச்சல்


                               வயிற்றெரிச்சல்

திருக்குறள் கண்டவன் தமிழ்மறை கொண்டவன்
திசைமாறிப் போகுதல் முறையா ?
அருந்தமிழ்த் தாயினை ஐயமுடன் நிந்தனை
செய்தலும் சிதைத்தலும் சரியா ?
தருவாகி உலகினில் தலைமாந்த னாகவே
தரணியில் பிறந்ததுன் இனமே
மருவான மாக்களாய் மாந்தரில் புழுக்களாய்
மயங்கியே மாய்வதேன் தினமே !

உலகெலாம் உதைவாங்கி உருவத்தில் பிழையாகி
ஒடுங்கிய ஆமைபோ லானாய்
பழைமையில் மூழ்கி வளமையில் தேய்ந்து
இனத்திற்கு பாரமாய் ஆனாய்
மலமெனத் திகழ்ந்தோரும் மாந்தாராய்க் கடைத்தேற
மறைபொரு ளோதிய தமிழா !
சிலந்தியின் வலையிலே சிறைபடத் தாவியுன்
சிறகினை விரிப்பது முறையா ?

அடிமையாய் வாழ்வதில் அடிதாங்கி யாவதில்
அடிமாட்டை நீ;வென்று விட்டாய்
குடிகார னாகியே குடிகெடுத் தழிவதில்
குக்கலாய் உருமாறிப் போனாய்
மடிதனில் ஏழ்மையை மாண்பெனத் தாங்கியே
மாண்டிடப் பிறந்தவன் நீயே
இடிதாங்கி போலவே மிடிமையில் வாழ்கிறாய்
ஏழ்மைதான் உனக்கு விதியா !



Sunday, November 25, 2012

ஐயா.... நான் சொல்வதெல்லாம் பொய்யா


                             ஐயா……….நான் சொல்றதெல்லாம் பொய்யா……..?

காடழிச்சி தோட்டம்போட்டு நாடுபூரா ரோடுபோட்டு
கருத்தோடு வாழலய்யே ஐயா – நாட்டில்
திட்டம்போட்டு வட்டம்போட்டு கொட்டகொட்ட குனிஞ்சதாலே
குட்டிச்சுவரா போயிட்டான்னா பொய்யா ?

அந்த நாயைப் பாத்தாக்கா இந்தநாயி உறுமுமே
அதைபோல பாக்குரானே ஐயா – இவன்
அடுத்தவனப் பாத்தாக்கா ஆய்……..பிரதர் எனச்சொல்லி
அஞ்சிவால சுருட்டுரான்னா பொய்யா ?

ஒற்றுமையே பலமுன்னு மத்தவங்க புரிஞ்சிகிட்டு
ஒன்னுசேர நெனைக்கிராங்க ஐயா – இவன்
செத்துபோன சாதிக்கு சங்கங்கட்சி தொறந்துவெச்சி
அடிச்சிகிட்டு சாகிரான்னா பொய்யா ?

அணிஅணின்னு பிரிஞ்சிபோயி அநியாயமா கெட்டுப்போயி
அஞ்சடியில் வாழுறானே ஐயா – இவன்
அநியாயக் காரனுக்கு ஆளுயர மாலைப்போட்டு
அவன் எச்சியை நக்குறான்னா பொய்யா ?

சமுதாய சேவையின்னு  இயக்கங்கள அமைச்சிவெச்சி
சண்டைவம்பு போட்டுக்கிறானே ஐயா – இவன்
அமுதான தாய்மொழிக்கு அதிர்வேட்டு வெச்சிபுட்டு
அரிச்சந்ர னாகுறான்னா பொய்யா ?

நம்பபுள்ள பொண்டாட்டி நல்லா இருக்குணோன்னா
நமக்குஇவன் வம்புவழக்கு ஏய்யா – இந்த
கொம்பனுங்க கொழுப்படங்க காலம் வெகுதூரமில்லே
காசுபண்ணும் வழிபாப்போம் வாய்யா.

Tuesday, November 20, 2012

நண்டு


                                                    நண்டு
                     ---------

இருநூறு ஆண்டுகள் வரலாறாம் நமக்கு – நாட்டில்
இருபது இலட்சம் இதுவரை கணக்கு
எருமைபோல் எதிர்கால இலக்கினில் பொறுப்பு _ காச
இருமலாய் நமக்குள்ளே எத்தனை பிணக்கு.!

ஆயிரக் கணக்கான ஆலயங்கள் இங்கே – அவை
ஊட்டிய நன்னெறி ஒழுக்கங்கள் எங்கே.?
கோவின் இல்லம் கேளிக்கைக் கூடமானது – இனம்
கூனலாகி இந்த நாட்டில் ஊனமானது.

இனம்மொழி நலம்காக்க சங்கங்கள் கண்டோம் – சாதி
சனம்குலம் கோத்திரம் அவற்றிலும் கொண்டோம்
குணம்தவிர பணம்பகட்டு அங்கேயும் உண்டு – தனி
மனிதவழி பாட்டிற்கு துதிபாடும் தொண்டு.

வீழ்ச்சியுற்ற இனம்நிமிர கனல்தெரிக்கும் கூட்டங்கள் – அதன்
விரைவான மீட்சிக்கு தீர்வுகளாய் திட்டங்கள்
வாழ்க்கையின் தரம்உயர வரியோரின் வேட்டல்கள் – வாரி
வழங்கியவர் வயிறெரிய காட்டுவதோ நட்டங்கள்.

நெடுஞ்சாலை நிறுத்தங்களில் பளிங்குக் கழிவறைகள் – நாட்டில்
நெடிந்துயர்ந்த கோபுரங்களாய் வியாபாரக் கருவறைகள்
ஏழ்மையைத் தந்துஓய்ந்த தோட்டப்புறத் தொழிற்துறைகள் – அங்கு
இனத்தைப்போல் பொலிவிழந்த வாரிசுகளின் வகுப்பறைகள்.

ஆதரவும் அறிவுரையும் இல்லாத படிப்பு – அதனால்
ஆக்கமான துறைகளிலே இல்லைஒரு பிடிப்பு
சாதனைகள் இல்லாத தலைமுறையின் நொடிப்பு – இதை
அறிந்திருந்தும் அரசியலில் நம்மவர்களின் நடிப்பு.

தேர்ந்தெடுத்து வைப்பதற்குமுன் தரத்தைப்பாரு – பின்
தேராதவன் என்றுணர்ந்தால் குறைகளைக் கூறு
தெரிந்தும் அறியாதவன்போல் இருந்தாய் இங்கு – அதனால்
பறிபோன காக்கையின் வடையானது உன்பங்கு.

ஒற்றுமையே மற்றவரின் பலம்இந்த நாட்டில் – நம்மின
ஊடல்களும் உரசல்களும் ‘ நாறுது’ தினம் ஏட்டில்
மற்றவர்களின் மாண்புக்கு சான்றுகள் பலஉண்டு – இங்கு
நம்மினத்திற் குவமையோ காண்டா காட்டு நண்டு.

சுதந்திரம்


                        சுதந்திரம்
          ---------------

சுதந்திரம் வாங்கித் தந்தார்
மகாத்மா காந்தி
சுதந்திரமாகத் திருடுவதற்கு.


என் சவப்பெட்டி


                      என் சவப்பெட்டி
         --------------------------
எங்கோ ஒரு காட்டில்
ஏதோ ஒரு மரத்தில்
எனக்காக நீ காத்திருக்கிறாய்.

அறையப்படும் ஆணிகளை
தானே ஏற்றுகொண்டு
இந்தச் சிலுவை என்னை சுமக்கும்

உன்னைக் கண்டாலே
பலருக்கு நடுக்கம்
ஆனால் நிச்சயமாக
உன்னோடுதான்
அவர்களின் அடக்கம்.

வேரூண்றி
எனக்காக நீ காத்திருப்பாய்
வேரருந்து பிணமாக நான் வீழும்போது
என்னை தாங்கிக்கொள்ள.

தமிழனிடம் மட்டும்தான்
நீ சமரசமற்று அசிங்கப்பட்டுப் போவாய்
ஏனென்றால் அவன்
அப்போதும் உன்னைப் பார்த்து கேட்பான்
நீ என்ன சாதி மரமென்று.!

என் மரண ஊர்வலத்தில் நீ
என்னை சுமக்கும்
எட்டுக்கால் பூச்சியாவாய்.

எனக்கும் வருத்தம்தான்
விதைக்கப்பட வேண்டிய நீ
காரணமில்லாமல் என்னோடு நீயும்
அன்று புதைக்கப்படுவாய்
என்பதை நினைத்து.

ஆமாம்……………….!
அன்று நடைபெறப்போகும்
மலர்ச்செண்டு மாலை மரியாதையெல்லாம்
வெட்டி வீழ்த்தப்பட்டும்
உறுதியானதும் உபயோகமான
மரக்கட்டையான உனக்கா……………..?
அல்லது…………..
வாழ்ந்தபோதும் சரி வீழ்ந்தபோதும் சரி
யாருக்கும் உபயோகமில்லாது
அழுகிக்கொண்டிருக்கப்போகும்
நாற்ற உடற்கட்டையான எனக்கா…………….?
உனக்கு என்றால் நான் மகிழ்ச்சியடைவேன்.
எனக்கு என்றால் துக்கப்படுவேன்.




பகடைக்காய்


                                பகடைக்காய்
             ----------------------

பகடைக்காயாய் பாஞ்சாலி
அரசியலில் பாலியல் பலாத்காரத்தை
தருமன் தொடக்கி வைத்தான்.

வன்மம்


                          வன்மம்
                    -------------

இயற்கையன்னையின் விநோதங்களை
தன் சிறகுகளில் ஏந்தி
சுதந்திரம் என்ற சொல்லுக்கு
அர்த்தம் தாங்கி
அடடா………. இது என்ன……….
பறக்கும் மலர்ச் செண்டோ…………!
என என்னை வியப்பில் ஆழ்த்தியது
நடு முதுகில் குண்டூசியால் குத்திப்
படுகொலை செய்யப்பட்டு
கண்காட்சிக்காக கண்ணாடிப் பேழைக்குள்
பிணமாகத் தொங்கவிடப்பட்டிருந்த
அந்த வண்ணாத்துப் பூச்சி.



           

தண்டவாளத்தில் எங்களின் வண்டவாளங்கள்


தண்டவாளத்தில் எங்களின் வண்டவாளம்.
---------------------------------------------------------------------------
இந்த நாட்டின் பொருளாதாரம்
பொலிவுடன் நடைபோட்டதே
இந்த தண்டவாளத்தின்
தயவோடுதான்……..!

அதோ பாருங்கள்
அந்த ரயில்தண்டவாளங்களுக்கு
அடியில் இருப்பது
சிலிப்பர் கட்டைகளா………………..?
இல்லை………….இல்லை!
அவை என் முன்னோர்களின்
உடற்கட்டைகள்.

‘’ நாட்டின் செழிப்பிற்கான
என் முன்னோர்களின் உழைப்பு
தன்னல கூலிக்கான பிழைப்பு ‘’ என்று
கேலி செய்தார்கள்.

நாட்டின் பின்புற வாசல் வழியாக
நேற்று வந்தவர்கள்
நீலக்கார்டுகளுடன் ‘’ என்னுடைய நாடு ‘’ என
தேசிய கீதம் பாடிக்கொண்டிருக்கிறார்கள்
ஆனால்……………
கடாரம் கண்ட ராஜ ராஜ சோழனின்
காலம் தொட்டு
இந்த நாட்டின் ஏற்றத்திற்கு
ஏணியாய் இருந்தவனின் சந்ததி
நிரந்தரம் இல்லாத நீர்க்குமிழியாக

வந்தேறிகளெனும் நிந்தனையோடு
சீரழிந்து கொண்டிருக்கிறது.

தண்டவாளங்களிலிருந்து
காணாமல் போன
கரிய ரயில் இஞ்ஜினைப் போல
காணாமல் போய்விட்டது
இனத்தின் மேன்மைக்கான
தென்னிந்திய தொழிலாளர் நிதி போன்ற
தடயங்கள்.

உலகப் பந்து
ஈவிரக்கமில்லா இரத்தக் காட்டேரிகளின்
கால்களுக்கிடையில் சிக்கிச் சிதைந்து கொண்டிருந்த
அந்த இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில்
ஜப்பானிய ராணுவக் காதகர்களின்
துப்பாக்கி முனையில் நிர்மாணிக்கப்பட்ட
சயாம் பர்மா மரண ரயில் பாதையில்
படுகொலை செய்யப்பட்ட
என் ஆயிரக்கணக்கான மூதாதையர்களின்
மறைக்கப்பட்ட வரலாற்றைப் போலவும்
பதுக்கப்பட்ட அவர்களின்
உயிருக்கும் துயருக்குமான இழப்பீட்டைப் போலவும்
பிடுங்கியெறியப்பட்டு விட்டது
ரிஷிமூலமான என் பாட்டனும் பூட்டனும்
படாத பாடுபட்டுத் தோற்றுவித்த
‘’மலாயன் ரயில்வே’’ யின்
கருவில் உருவான
முதல் ரயில் தண்டவாளப் பாதையான
‘’தைப்பிங் டு போர்ட் வெல்ட்’’ எனும்
நதிமூலம். 

மேய்ப்பர்கள் என்றும் மீட்பர்கள் என்றும்
தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள்
ஏய்ப்பவர்களாகி
இந்த அப்பாவி ஆடுகளின்
நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும்
மேய்ந்து விட்டார்கள்.





இந்த இரு தண்டவாளங்களைப் போல்
சாதி எனும் பிரிவால்
இணையமுடியாமல் எங்கள் இனம்.
ஒன்றை ஒன்று ஒட்டாமல்
நீண்டுகொண்டே போகும் பயணமாக
எங்களின் துன்பங்கள்.

இந்த தண்டவாளங்களைப்போலவே
வறுமையெனும் ஆணிகளால்
இறுக அறையப்பட்டு
பலர் எங்கள் மேல் பயணம் செய்ய
தேய்ந்து கொண்டே போகிறோம்.







என் கல்லறை


                          என் கல்லறை
           ----------------------

நீ என் தாய்
உன் வீங்கிய வயிற்றுக்குள்
நான் உன் சேய்.

கலவி செய்யாது
கரு சுமக்காது
என் உருவைத் தாங்கும்
என் கன்னித் தாய்.

உன் நெற்றியில்
திலகமாக என் பெயர்.

நிரந்திரமான விலாசத்தில்
இந்த மயானத்தில்
என் சயனம்.

முதன் முதலாக
சாதியில்லாத தமிழனாய்
எனது அருகில் உறங்க வருவான்
இன்னொரு தமிழன்.

சூரியனும் சந்திரனும்
தூங்காத நட்சத்திரங்களும் இல்லாத
அமாவாசை வானம்
என்னைப் பேணும்.

என் அம்மாவின் கருவை
மறுபடியும் உருவாய் தாங்கும்
என் மாற்றாந்தாய் நீ.

முழுமையாக போர்த்தப்பட்ட
மண் போர்வைக்குள்
நான் சிலையாக.

ஐம்புலன்களையும் அடக்கிய
அசேதனத்தால் மட்டுமே சாத்தியமானது
இந்த என் தியானம்.

 

















தண்டவாளத்தில் எங்களின் வண்டவாளங்கள்


தண்டவாளத்தில் எங்களின் வண்டவாளம்.
---------------------------------------------------------------------------
இந்த நாட்டின் பொருளாதாரம்
பொலிவுடன் நடைபோட்டதே
இந்த தண்டவாளத்தின்
தயவோடுதான்……..!

அதோ பாருங்கள்
அந்த ரயில்தண்டவாளங்களுக்கு
அடியில் இருப்பது
சிலிப்பர் கட்டைகளா………………..?
இல்லை………….இல்லை!
அவை என் முன்னோர்களின்
உடற்கட்டைகள்.

‘’ நாட்டின் செழிப்பிற்கான
என் முன்னோர்களின் உழைப்பு
தன்னல கூலிக்கான பிழைப்பு ‘’ என்று
கேலி செய்தார்கள்.

நாட்டின் பின்புற வாசல் வழியாக
நேற்று வந்தவர்கள்
நீலக்கார்டுகளுடன் ‘’ என்னுடைய நாடு ‘’ என
தேசிய கீதம் பாடிக்கொண்டிருக்கிறார்கள்
ஆனால்……………
கடாரம் கண்ட ராஜ ராஜ சோழனின்
காலம் தொட்டு
இந்த நாட்டின் ஏற்றத்திற்கு
ஏணியாய் இருந்தவனின் சந்ததி
நிரந்தரம் இல்லாத நீர்க்குமிழியாக

வந்தேறிகளெனும் நிந்தனையோடு
சீரழிந்து கொண்டிருக்கிறது.

தண்டவாளங்களிலிருந்து
காணாமல் போன
கரிய ரயில் இஞ்ஜினைப் போல
காணாமல் போய்விட்டது
இனத்தின் மேன்மைக்கான
தென்னிந்திய தொழிலாளர் நிதி போன்ற
தடயங்கள்.

உலகப் பந்து
ஈவிரக்கமில்லா இரத்தக் காட்டேரிகளின்
கால்களுக்கிடையில் சிக்கிச் சிதைந்து கொண்டிருந்த
அந்த இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில்
ஜப்பானிய ராணுவக் காதகர்களின்
துப்பாக்கி முனையில் நிர்மாணிக்கப்பட்ட
சயாம் பர்மா மரண ரயில் பாதையில்
படுகொலை செய்யப்பட்ட
என் ஆயிரக்கணக்கான மூதாதையர்களின்
மறைக்கப்பட்ட வரலாற்றைப் போலவும்
பதுக்கப்பட்ட அவர்களின்
உயிருக்கும் துயருக்குமான இழப்பீட்டைப் போலவும்
பிடுங்கியெறியப்பட்டு விட்டது
ரிஷிமூலமான என் பாட்டனும் பூட்டனும்
படாத பாடுபட்டுத் தோற்றுவித்த
‘’மலாயன் ரயில்வே’’ யின்
கருவில் உருவான
முதல் ரயில் தண்டவாளப் பாதையான
‘’தைப்பிங் டு போர்ட் வெல்ட்’’ எனும்
நதிமூலம். 

மேய்ப்பர்கள் என்றும் மீட்பர்கள் என்றும்
தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள்
ஏய்ப்பவர்களாகி
இந்த அப்பாவி ஆடுகளின்
நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும்
மேய்ந்து விட்டார்கள்.





இந்த இரு தண்டவாளங்களைப் போல்
சாதி எனும் பிரிவால்
இணையமுடியாமல் எங்கள் இனம்.
ஒன்றை ஒன்று ஒட்டாமல்
நீண்டுகொண்டே போகும் பயணமாக
எங்களின் துன்பங்கள்.

இந்த தண்டவாளங்களைப்போலவே
வறுமையெனும் ஆணிகளால்
இறுக அறையப்பட்டு
பலர் எங்கள் மேல் பயணம் செய்ய
தேய்ந்து கொண்டே போகிறோம்.







Monday, November 5, 2012

நண்டு


                                    நண்டு
இருநூறு ஆண்டுகள் வரலாறாம் நமக்கு  - நாட்டில்
இருபது இலட்சம் இதுவரை கணக்கு
எருமைபோல் எதிர்கால இலக்கினில் பொறுப்பு – காச
இருமலாய் நமக்குள்ளே எத்தனை பிணக்கு.

ஆயிரக் கணக்கான ஆலயங்கள் இங்கே – அவை
ஊட்டிய நன்னெறி ஒழுக்கங்கள் எங்கே!
கோவின் இல்லம் கேளிக்கைக் கூடமானது – இனம்
கூனலாகி இந்த நாட்டில் ஊனமானது.

இனம்மொழி நலம்காக்க சங்கங்கள் கண்டோம் – சாதி
சனம்குலம் கோத்திரம் அவற்றிலும் கொண்டோம்
குணம்தவிர பணம்பகட்டு அங்கேயும் உண்டு – தனி
மனிதவழி பாட்டிற்கு துதிபாடும் தொண்டு.

வீழ்ச்சியுற்ற இனம்நிமிர கனல்தெறிக்கும் கூட்டங்கள் –  அதன்
விரைவான மீட்சிக்கு தீர்வுகளாய் திட்டங்கள்
வாழ்க்கையின் தரம்உயர வரியோரின் வேட்டல்கள் – வாரி
வழங்கியவர் வயிறெரிய காட்டுவதோ நட்டங்கள்.

நெடுஞ்சாலை நிறுத்தங்களில் பளிங்குக் கழிவறைகள் – நாட்டில்
நெடிந்துயர்ந்த கோபுரங்களாய் வியாபாரக் கருவறைகள்
ஏழ்மையைத் தந்துஓய்ந்த தோட்டப்புறத் தொழிற்துறைகள் – அங்கு
இனத்தைப்போல் பொலிவிழந்த வாரிசுகளின் வகுப்பறைகள்.

தேர்ந்தெடுத்து வைப்பதற்குமுன் தரத்தைப்பாரு – பின்
தேராதவன் என்றுணர்ந்தால் குறைகளைக் கூறு
தெரிந்திருந்தும் அறியாதவன்போல் இருந்தாய் இங்கு – அதனால்
பறிபோன காக்கையின் வடையானது உன்பங்கு.

ஒற்றுமையே மற்றவரின் பலம்இந்த நாட்டில் – நம்மின
ஊடல்களும் உரசல்களும் நாறுதுதினம் ஏட்டில்
மற்றவர்களின் மாண்புக்கு சான்றுகள் பலஉண்டு – இங்கு
நம்மினத்திற் குவமையோ காண்டா காட்டு நண்டு.