Thursday, November 29, 2012

கண்ணீரைப் பன்னீராய் மாற்றுவோம்


கண்ணீரைப் பன்னீராய் மாற்றுவோம்.
தோற்றுவிட்டோம் என்பதுவும் உண்மைதான்அதற்காக
துயர்கொண்டு துவண்டுமனம் வெம்பலாமா
போற்றும்படி நம்நிலைமை இல்லைதான்அதற்காக
தூற்றும்படி தரம்தாழ்ந்து போகலாமா
சாலைகள் சமைத்தோம் வீதிகள் அமைத்தோம்
விபத்துக்களே நமக்கு விதியாயினஇனி
பாலையில் விதைக்கும் பகுத்தறிவில்லா
பழக்கத்தை வழக்கத்தை புதைப்போம்.

இருள்சூழ்ந்த எதிர்காலம் உண்மைதான்அதற்காக
ஈசலா,நாம் இழிவாகச் சாவதற்கு
வறுமைநமை வாட்டுவதும் உண்மைதான்அதற்காக
மண்புழுவா வெந்தணலில் நோவதற்கு
காடுகள் திருத்தி தோட்டங்கள் செய்தோம்
கேடுகள்தான் நம்மைவந்து சேர்ந்தனஇன
சாடுவோம் நம்மை வீழ்த்திய விசைகளை
தேடுவோம் வெற்றியின் திசைகளை.

நாதியில்லை நமதுகுறை கேட்பதற்குஅதற்காக
நலம்கெட்டு தெருவோரம் வாடலாமா
நீதியில்லை நமதுநிலை மாற்றுதற்குஅதற்காக
நெறிதவறி முறைகெட்டு வாழலாமா
காலைமாலை இரவுபகல் உழைத்தும் நல்ல
வேலைவந்து சேராது களைத்தோம்இனி
நாளை நமதெனும் கனவை கலைத்து
இன்றெ நமதெனப் பாடுவோம்.

வாழ்க்கையிலே வளமில்லை உண்மைதான்அதற்காக
வழிமாறி தடம்புரண்டு வீழலாமா
ஏழ்மையிலே உழல்கின்றோம் உண்மைதான்அதற்காக
ஊழ்வினைதான் எனநம்பி ஓயலாமா
தன்னலம் துறந்து தளரா துழைத்தோம்
இன்னல்களே நம்மைவந்து சேர்ந்தனஇனி
கொண்டதே கோலமெனும் கோணலை அழிப்போம்
கண்ணீரைப் பன்னீராய் மாற்றுவோம்.



No comments:

Post a Comment