Monday, February 13, 2012

தியானம்




        தியானம்
என்னைப் படைத்ததற்கான
இயற்கையன்னையின் நோக்கம்
‘அறம்’
மனிதன் எனக்கு
சூட்டியிருக்கும் பெயர்
உணர்ச்சியில்லா ‘மரம்’

நான் இயற்கையன்னையின்
ஆசீர்வதிக்கும் கை

விதையாய் இருந்தபோது
நானிட்ட பத்மாசனம்
வீழும்வரை அதுவே என்
சிம்மாசனம்


என் இலைகளைத் தின்றுதான்
ஓசோன் சிலந்தி
உயிர்வாழ்கிறது.

சித்தார்த்தன் என்ற மனிதன்
என் நிழலைத் தேடிவந்தான்
புத்தனாவதற்கு

வண்டுகள்
என் மகரந்தங்களை கவர்ந்தன.
பறவைகள்
இனப்பெருக்கம் செய்தபின்
என்னைக் குப்பைத்தொட்டியாக்கிவிட்டு
பறந்து போயின.
பூச்சிகள்
இரவும் பகலும்
ஓயாமல் என்னோடு பேசின
என் மௌனமொழி புரியாத
அந்த அப்பாவிப் பூச்சிகள்
கோபமுற்று
சமயத்தில் என்னை ஏசின.
மனிதர்களின் மூதாதையர்கள்
என்பதாலோ.....என்னவோ....!
என் கனிகளைத் தின்றுவிட்டு
குரங்குகள் என்மீதமர்ந்து
கூத்தாடின.

சிரசாசனம் செய்தபடி
யோகநித்திரையில் ஆழ்ந்துபோகும்
வௌவால்களுக்கும்
கண்களை உருட்டியவாறு
நித்தியமும்
நிட்டையில் மூழ்கிவிடும்
பறவைச் சித்தர்களான
கோட்டான்களுக்கும்
நான் குருசேத்திரமாவேன்.


மரங்கொத்திகள்
என் அகத்திலும் புறத்திலும் உள்ள
முதுகெழும்பில்லா
புழுக்களை மட்டும் அகற்றி
நான் நானாக இருக்கும்படியாக
என்னை பரிசுத்தப்படுத்தும்
தீவிரவாதம் இல்லாத
தீர்க்கதரிசிகள்.

அவைகள் எங்களுக்கான
அலகு தேர்ந்த
அறுவை சிகிச்சை நிபுணர்கள்.

இந்தப் புள்ளினங்கள்
எங்களின் இனவிருத்திக்கான
விதைகளை சுமக்கும்
வாடகைத் தாய்மார்கள்.


என் கிளைகளிலிருந்து
உதிர்ந்து பறக்கும் அந்த
சிறகுகள் முளைத்த பூக்கள்
பூமியெங்கும் எச்சமிட்டு
எங்களின் எண்ணிக்கையை மட்டுமல்லாது
தங்களுக்கான புண்ணியத்தலங்களையும்
பெருக்கிய பெருமையோடு
அப்பறவைகள் எங்களின் உறவுகளாக
என் கிளைவந்தடைகின்றன.

ஆனால் மனிதனோ..........!
என் எதிர்கால சொத்துக்களான
வித்துக்களை
தன் வீட்டுச் சமையலறையின்
அடுப்பிலே சுட்டு
இரசாயனம் நிரம்பிய
அவனின் வயிற்றிலே இட்டு
தன் நவீன கழிவறையின்
மலச் சட்டியிலே விட்டு
அலம்பிவிடுகிறான்.
எங்களின் வருங்கால சந்ததிகளை
அழித்து விடுகிறான்.

இப்படித்தான்...........
உலகத்தில் வாழ்ந்த பல உயிரினங்களை
மனிதன்
விளையாட்டு எனும் பேரில்
வேட்டையாடிக் கொன்றுவிட்டான்
இன்னும் பலவற்றை
பாவம் புண்ணியம் புனிதம் என்றும்
மதம் வேதம் வெங்காயமென்றும்
கதறிக் கண்ணீர் விட்டுக் கொண்டே
சுட்டுத் தின்று விட்டான்.

நிலம்வாழ் பச்சை முகிலாள் என்று
எனக்கு மற்றொரு பெயருண்டு
கார்மேகம் என்பவன்
என் காதலன்
காலம் கனியும் போதெல்லாம்
என்னொடு அவன் கூட வருவான்
நாங்கள் காதல் செய்வோம்
அப்போது நாங்கள்
ஒன்றினையும் போகத்தின் உச்சகட்டத்தில்
இட்டுக்கொள்ளும் முத்தங்களின் தெறித்த
எச்சில் துமிகளைத்தான்
மனிதன்
மழை என்கிறான்.

பூகோளத்தின் திருக்கோலத்தை
அழித்து அலங்கோலப்படுத்த
கழிவுகளிலிருந்து உருவெடுத்த
கரியமிலவாயுவெனும் ஆலகால விஷத்தை
ஆயுதமாக ஏந்தி
அனுதினமும் போர்தொடுக்கும்
சாகாவரம் பெற்ற சாத்தானை
ஓயாமல் விழுங்கும்
பச்சையப் பூதம் நான்.

பூதலத்தின் வளிமண்டலக் கடலை
சதா கடைந்து கொண்டிருக்கும்
மரமத்து நான்.



அதில் பொங்கியெழும்
ஜட பிராணவாயுக்களின்
கலவையான அமிர்தத்தை
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
பாராபட்சமில்லாமல் பகிர்ந்து வழங்கும்
அமுத சுரபி நான்.

நானிலத்தைப் பேணிக் காப்பதற்காக
இயற்கையன்னை தன் கையிலேந்தியிருக்கும்
அட்சய பாத்திரம் நான்.

ஆனால்............!
லோகாயதவாத நோய் பீடித்த
மனிதன்...........
என்னைத் தன் பிச்சைப்பாத்திரமாக்கினான்.
தேக்கு சந்தனம் என்றும்
தரமான சரக்கு என்றும்
எங்களை எச்சில் பாத்திரமாக்கினான்.

எங்களின் எதிர்கால விருத்திக்கான
வித்துக்களின் கருவறையான
காய்களையும் கனிகளையும்
சுமக்கும் காலங்களில்
இவர்களின் கல்லடிகள் பட்டு
காயப்பட்பட்டிருக்கிறோம்.
முற்றிலும் சூறையாடப்பட்டு
மூளிகளாக்கப்பட்டிருக்கிறோம்.

எங்களின் கனிகளிலிருந்து
சாற்றைப் பிழிந்தும்
எங்களின் இளமைக்கும் வளமைக்கும்
மூலாதாரமான குருத்துக்களின்
குருதியைக் கரந்தும்
மது செய்கிறான்
மனிதன் தன் மாண்புக்கு எதிரான
விதி செய்கிறான்.

வெட்டிச் சிதைத்துக் கொண்டிருப்பது
எங்களின் அடிமரத்தையல்ல
அவனுடைய எதிர்காலச் சந்ததிகளின்
அடித்தளத்தை என்பதை
அறியாதவனாய் இருக்கிறான் மனிதன்.
அவனுக்கு எதிரான
இயற்கையின் சீற்றத்தை
சீதோஷ்ண நிலையின் குற்றம் என்றும்
சூழியல் ஆபத்தை
சுற்றுச் சூழலின் மாற்றம் என்றும்
மழுப்புகிறான் மனிதன்.

வசந்த காலம் ..............
அது நான் வஞ்சிக்கப்படும் காலம்
அது என் வருத்தம்.........!

பூவும் பிஞ்சுமாய் பூத்துக் குழுங்கி
நான் ஆடும் நடனத்திற்கு
பொருத்தமில்லா விருத்தம்.

இலையுதிர் காலம்..........
என்னில் இயற்கை செய்யும்
திருத்தம்.........!

அது...........
எல்லாம் உதிர்த்து
நான் வெறும்கட்டையாய் நிற்கும்
யோக நிட்டை.

என் அந்த வெறும் கோலம்
நான் சும்மா இருக்கும் காலம்
என் நிம்மதியான நிகழ்காலம்.

அது.............
முற்றும் துறந்த நிலையிலான
என் ஒற்றைக் கால் தவம்.

சப்தமில்லாமல் இந்தப் பூமியின்
கடைசி மரம் விழும்போது
கலியுகம் முடியும்..........!
அதன்பின்..........

இப்புவனத்தில் மனிதனில்லாத
புது யுகம் விடியும்.









   












      



 


Friday, April 1, 2011

ரு தோட்டப்புறக் குயிலின் சோக கீதம்

(யாப்பிலக்கணம் எனக்கு முழுமையாக அறிமுகமில்லாத காலம். வெறும் கேள்வி ஞானத்தின் துணையோடு தப்பும் தவறுமாக நான் எழுதிய என் முதல் கவிதை. நான் பெற்ற என் முதல் குழந்தை. மதிப்பிற்குரிய புலவர்களே தயை கூர்ந்து அந்த குழந்தையின் மழலை மொழியில் சொற்குற்றமோ இலக்கணக் குற்றமோ காணாதீர்கள். மன்னித்தருளுங்கள்.)

சாமக்கோழி கூவுமுன்னே கண்வி ழித்து
தரித்திரத்தை உணவாக சமைத்து வைத்து
சாமக்காரன் குரலுக்கு பதில ளித்து
தவறாமல் பெரட்டினிலே பெயர்கொ டுத்து
நாமணக்க மகவுகளை அணைத்துக் கொஞ்சி
நாற்றமிகு ஆயாக்கொட் டகையில் விட்டு
தாமதமின் றிரப்பர்மரக் காடு நோக்கி
சஞ்சலத்துடன் விடிவதற்குள் ஓட வேண்டும்.

பன்றிகளும் பாம்புகளும் வாழும் காட்டில்
படிகள்கொண் டஏணிதனை தூக்கிக் கொண்டு
பன்னிரண்டு அடிகளுக்கும் உயரே உள்ள
பால்வெட்டுக் கோடுகளை சீவி எந்தன்
கண்களிலே வடிகின்ற கண்ணீ ரைப்போல்
கசிந்துருகும் நொய்வப்பால் சேக ரித்து
ஊணுடம்பு நோகிடவே சுமந்து என்னை
உருக்குலைக்கும் பணிதன்னை முடிக்க வேண்டும்.

நிரையினிலே குறையேதும் இருந்து விட்டால்
துரைமுன்னே நடுநடுங்கி நிற்க வேண்டும்
குறைகண்ட கிராணியாரின் கூவ லுக்கு
குலைநடுங்கி குறுகித்தான் குனிய வேண்டும்
புரையோடிய புண்வாழும் புழுவைப் போல
பொய்யான பிழைப்பிற்கு உழைக்க வேண்டும்
கரைதனிலே வீழ்ந்துவிட்ட மீனைப் போல
கலங்கித்தான் தினம்நானும் சாக வேண்டும்.

காட்டோடு தீராது எந்தன் தொல்லை
கணவனெனும் குடிகாரன் தினமும் என்னை
வாட்டிடுவான் வதைத்திடுவான் வம்பு பேசி
மக்களையும் மிதித்திடுவான், கேடு தரும்
சீட்டாட்டம் ஆடிடுவான், பாடு பட்ட
சில்லரைகள் அத்தனையும் தீர்த்தொ ழிப்பான்
கூட்டினிலே சிறைபட்ட பறவை யாக
கொடுமையிலே வாழ்கின்றேன் என்ன செய்வேன்.

நிம்மதியாய் படுத்துறங்க படுக்கை யில்லை
நினைவறிந்து வயிறாற உண்ட தில்லை
அம்மணமாய் அலையுமெந்தன் குழந்தை கட்கு
அணிவதற்கு நல்லஆடை ஏது மில்லை
நம்பிவந்த கணவனெனும் பாவி யாலே
நலமேதும் எனக்கிங்கு வாய்க்க வில்லை
இம்மையிலே எனக்கிந்த தொல்லை தீர
எமனான ‘’பாராகுவாட்’’ தானோ எல்லை….!

(பாராகுவாட் = கொடிய களைக்கொல்லி விஷம் )

Friday, March 11, 2011

மதங்கொண்ட மனிதர்கள்

எல்லோருக்கும் பொதுவான இறைவன் பெயரால்
இதயமற்றோர் இயக்குகின்ற மதக்கல வரங்கள்
வள்ளலவன் அருளாலே வந்து தித்த
மாந்தர்களுக் கெதிரான இனப்படு கொலைகள்
சொல்லொண்ணாக் கொடுமைகளை இழைத்தே உலகை
சூறையாடும் கொடியோரே ஒன்றை உணர்வீர்
செல்லாத உயிர்களென நினைத்தி ருந்தால்
செகத்திலவன் பல்லினத்தைப் படைத்திருப் பானா….?

அல்லாவின் அருட்புதல்வர் அன்னல் நபியும்
அன்னைமேரி ஈன்றெடுத்த தேவ மகனும்
எல்லாஉயி ரினங்களையும் அன்பால் வென்று
இரட்சிக்க வேண்டுமென்ற புத்த பிரானும்
தொல்லுலகைக் காப்பதர்க்கு தூதர் களாக
தோன்றியநற் சித்தர்களும் தீவிர வாதம்
நல்லதென்று சொல்லவில்லை இருந்தும் கெட்ட
நாசகாரப் பேய்களுக்கே னிந்த பேதம்.

இறைவன்திருப் பாதத்தைத் தொழுதிடும் கைகள்
ஏந்துவதோ கொலைக்கருவி; இறைவன் புனித
மறையோதும் நாவினிலே நஞ்செ தற்கு
மானுடத்தின் மாண்பதனைக் கொல்வ தற்கா!
இரைதேடும் கழுகைப்போல் இரக்க மின்றி
எளியோரை வதைக்கின்றீர்; பாழாய்ப் போன
முறைகெட்ட கொள்கைக்காய் இயற்கை கொண்ட
மூலத்தை அழிக்கின்றீர் முறையா சொல்வீர். 

தீவிரவா தப்போக்கால் பைத்தியம் பிடித்தோர்
தெளிவடைய வையத்தில் வைத்தியம் இல்லை
ஈவிரக்க மில்லாதார் நெஞ்சம் தன்னில்
இறையருளும் நிச்சயமாய் சுரப்ப தில்லை
தீவினையில் உழன்றோர்கள் எவரும் உலகில்
சிறப்போடு வாழ்ந்ததாக வரலா ரில்லை
பாவிகளை இறைவனவன் இரட்சித் ததாக
பாரிலுள்ள எம்மதமும் சொல்ல வில்லை.

மதமென்றும் இனமென்றும் சமய மென்றும்
மறையென்றும் குறைதீர்க்கும் சடங்குக ளென்றும்
நிதமிங்கு மாந்தரிடை நிந்தனை வளர்த்தே
நீக்கமற நிறைந்திருக்கும் இறையின் புகழை
வதம்செய்யும் மனிதர்களே ஒருசொல் கேளீர்
மதவாதப் போதனையின் நோக்க மெல்லாம்
அதம்செய்தே ஆண்டவனை அடைய அல்ல
அறம்செய்தே மானுடத்தைக் காப்ப தற்கே.
கொடிமலர்

தொப்புள் கொடியோடிணைந்து
ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிறவிகள்
என் அம்மாவும் நானும்.
அனைத்துலக அகதிகள்

குரங்கைப்போல் மரக்கிளையில் வாழ்ந்தோ ருக்கும்
குகைகளிலே குடித்தனம்தான் செய்தோ ருக்கும்
அரைதனிலே இலையுடுத்தி அரைகுறை யாக
அம்மணத்தை மறைத்துலகில் திரிந்தோ ருக்கும்
வரைமுறையே இல்லாது விலங்கைப் போலே
வாழ்ந்துலகில் வழித்தோன்றல் தந்தோ ருக்கும்
வரலாற்றுக் குறிப்போடு வளநா டுண்டு
வருங்காலச் சந்ததிக்கு எதிர்கா லமுண்டு.

ஐக்கியநாட் டுச்சபையில் அவருக் கெல்லாம்
அங்கீகா ரம்உண்டு ஆசன முண்டு
எக்கணமும் அவரினத்திற் கூறு நேர்ந்தால்
ஏனென்று கேட்பதற்கு நாதி யுண்டு
அகங்குளிர அவரின்தாய் மொழியை நாட்டில்
அரியணையில் அமர்த்திவழி பாடு செய்ய
இகமதிலே எத்தடையும் அவருக் கில்லை
ஏந்தியதாய் மணிக்கொடியே அவரின் எல்லை.

ஞாலத்தின் முதல்உயிராய் நலமே தோன்றி
நாகரிகம் படைத்தோனாய் வையம் தன்னில்
கால்பதித்தான் கலைபடைத்தான் என்ப தற்கு
கல்தோன்றி மண்தோன்றா காலம் தோன்றி
ஆல்போன்று விரிந்ததமிழ்க் குடியே என்னும்
ஆய்வாளர் கூற்றிற்கு அர்த்தம்; ஆனால்
வாலறிவர் போற்றியஇத் தமிழ னுக்கு
வையத்தில் நாடில்லை என்னே விந்தை..!

தாய்நாடு என்றொன்று இருந்தி ருந்தால்
தரணியெலாம் தரித்திரனாய் வதைபடு வானா..?
சிறுபான்மை மக்களென நாடுகள் தோறும்
சீரழிந்து சிறப்பிழந்து உதைபடு வானா..?
வாயில்லாப் பூச்சிகளாய் வாழ்நா ளெல்லாம்
வற்றாமல் உழைத்துப்பிறர் உயர்வுக் காக
தேய்ந்ததுதான் மிச்சம்பிறர் இவனின் வாழ்வை
சீர்செய்தார் என்பதெல்லாம் சுத்தப் பொய்யே.

அரைவயிற்றுக் கஞ்சிக்குப் பிழைப்பைத் தேடி
அயல்நாடு சென்றாலும் அங்கே யும்தன்
புரையோடிய புண்ணான சாதி தன்னை
புதுப்பித்துப் போற்றுகின்ற புத்தி யால்தான்
சிறைவாழ்க்கை வாழ்கின்றார் என்னி னத்தார்
சிதைந்தஇன மாகைந்த நானி லத்தில்
கறையான களங்கத்தை கொள்கை யென்றே
கடைபிடித்த தால்வீழ்ந்தார் உண்மை யன்றோ..!

உலகப்பொது மறையென்று புவியோர் போற்றும்
ஒப்பிலாத தமிழ்மறையாம் குறள்நெறி நின்று
தளராத உறுதியுடன் தமிழ்நிலம் காத்து
தமிழினத்தைப் பிளக்கின்ற சாதி யென்னும்
குலநாசச் சதிதன்னை முறிய டித்து
குற்றமிலாத் தலைமையிலே தமிழி னத்தின்
நலன்நாடி ஒருங்கூடி உழைத்தி ருந்தால்
நானிலத்தில் மூத்தகுடி வென்றி ருக்கும்.

Tuesday, March 8, 2011

பெருங்காயம்

உழைத்துத் தேய்ந்த தமிழர்களேஊர்
உலகுக்கு உழைத்த தோழர்களே
களைத்து இளைத்து காய்ந்ததனால்தோல்
கருத்துப் போன மனிதர்களே.

தோட்டத்தில் நம்மின வனவாசம்அது
தொல்லைகள் நிறைந்த சிறைவாசம்
ஊட்டமில் லாசமு தாயமாக நம்மை
உருக்குலைத்த சதிநாசம்.

உள்ளத்தில் சிறிதும் கள்ளமில்லைஉன்
உழைப்பினில் துளியும் வஞ்சமில்லை
எல்லாத் திறமையும் இருந்தும் நீஇங்கு
எந்தத் துறையிலும் உயரவில்லை.

தொலைநோக் கில்லா நிகழ்காலம்உன்
தோல்விக்கு அதுவே நதிமூலம்
பிழைதனைக் கழிதலுன் நிலையானால்இங்கு
பிறந்திடும் உனக்கினிப் பொற்காலம்.

வறுமையே வாழ்க்கை என்றானால்வெறும்
வாய்ச்சவ டாலே விதியானால்
இருபது இருபதில் சமுதாயம்அது
கடலில் கரைத்த பெருங்காயம்.
துவா உன் பண்பாடு………….?

தமிழன் ஒருவன் செத்துக் கிடக்கிறான்
தாலி அறுத்தவள் நொந்து தவிக்கிறாள்
     அங்கு எதற்கடா சூதாட்டம்
      தின்னும் தீனிக்கேன் போராட்டம்.

உன்னவன் பிணமாய் ஓய்ந்து கிடக்கிறான்
உடன்பிறந்தவன் அழுது துடிக்கிறான்
       உற்றவன் வைப்பது ஒப்பாரி
        உனக்கேன் அங்கு கச்சேரி.

இனத்தைச் சேர்ந்தவன் இறந்து கிடக்கிறான்
இறந்தவன் மக்கள் இடிந்து கிடக்கிறார்
         ஏனங்கு உனக்குக் கும்மாளம்
          எடுத்ததற் கெல்லாம் நோப்பாளம்

நம்மவன் வீட்டில் இழவு விழுந்தது
அன்னவன் குடும்பம் அழுது புலம்புது
           அங்குமா உனக்கு அரசியல்
            அடித்துக் கொள்ளும் உரசியல்

மலேசியத் தமிழன் மாண்டு கிடக்கிறான்
மற்ற இனத்தவன் மரியாதை செய்கிறான்
           மதுவுடன் கூடுமுன் கூட்டம்
            மாண்பா அங்குச் சீட்டாட்டம்

அஞ்சலி செலுத்த வேண்டிய வேளையில்
ஐந்தடியில் கூடி அட்டூழியம் செய்கிறாய்
             என்னே உனது அறிவீனம்
              இல்லையா உனக்கு தன்மானம்.