Saturday, July 18, 2015

வேர்

பூமியில் வதியும் எல்லா உயிர்களும்
இன்புற்றிருக்க வேண்டுமென
ஆசீர்வதிக்கும் ஒற்றைக்கையாக
என்மேல் முளைத்த என் தேவதாரு
நிமிர்ந்து நிற்க
என் பூமித்தாயின் அடிவயிற்றைப் பற்றிய
விரல்களாக நான்.

மண்ணில் புதைந்த
கூர்ம அவதாரமாய்
குப்புற கவிழ்ந்தபடி
நான் கொண்ட ஜீவ சமாதியின்
முடிவில்லா தவத்தின் பயனாக
என் முதுகில் முளைத்தெழுந்த
விருட்சமாக என் வம்சம்.
என் தாழ்வே அதன் வாழ்வு
என் ஈர சமாதியே
அதன் கோபுர வாசல்.

ஐம்பூதங்களின் ஆசியோடு
இயற்கையன்னையின் அங்கீகாரத்தின்
ராஜமுத்திரை நான்.
.
பூவாக பிஞ்சாக
காயாக கனியாக
என் முகவரிகள்.

விதை எனும் சவப்பெட்டியிலிருந்து
உயிர்த்தெழுந்த பிணம் நான்.

மண் சமாதிதான் என் கருவறை.
என் ஜனனமும் மரணமும் அங்குதான்
ஆனாலும் நான்
இறந்தாலும் உயிர்த்தெழும்
அழியா வரம் பெற்றவன்
என் எல்லா கனிகளின்
இருண்ட விதைகளிளெல்லாம்
விழித்திருப்பேன்
கரிய வானில் ஒளிரும்
நட்சத்திரங்களைப் போல.

என் சமாதியையே ஞான பீடமாக்கி
அதன் மீது சித்தார்த்தன் அமர்ந்தான்
சித்தார்த்தன்
பகவான் புத்தன் ஆனான்
நான் புனிதனானேன்.

பூமிச் சமுத்திரத்தில் பதுங்கியிருக்கும்
அமிர்தத்தை கடைந்தெடுக்கும்
மந்தாரமலையாக
என் ஆணீவேர்.
வாசுகியாக நான்

பச்சையம் போர்த்திய
சுயநலப் பச்சோந்திகளாய்
என் கிளைகளில் வந்தமரும்
புல்லுருவிகள் போல
என்னை சூழ்ந்து களியாட்டம் போடும்
ரம்பைகளாய் ஊர்வசிகளாய்
என்னை இரையாக்கக் காத்திருக்கும்
கரையான்கள்.
அந்த நிர்வாணக் கவர்ச்சியில் மதிமயங்கி
நான் அவற்றை ஆரத்தழுவினால்
என் தவம் கலையும்
இதுநாள் வரை நான் கட்டி எழுப்பிய
என் சாம்ராஜ்ஜியம்
எரிந்து சாம்பலாகும்.


No comments:

Post a Comment