Sunday, July 19, 2015

தோட்டப்புற ஆயாக்கொட்டகைகள்

வானளாவிய கன்னிக் காடுகளே நாடாக
மலாயா.
அதற்கு மலைநாடு என்று
மற்றொரு பெயருண்டு.
சொர்க்கத்தின் வாசலான அதற்கு
சுவர்ண பூமியென்ற
சுகமான பெயரும் உண்டு.

தங்களின் துரைத்தன வாழ்வுக்கு
ஆப்ரிக்க ஆசிய நிலக்கோடுகளை
தங்களின் எல்லைக் கோடுகளாக
மாற்றிக்கொண்ட வெள்ளையர்களின்
காலாடித்தனமான காலணித்துவ ஆட்சி
மலாயாவில்
காலூன்றியிருந்த காலம்

ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தி ஏழாம் ஆண்டு
மலாயாவிற்கான நிரந்திர
வசந்த காலத்தை தோளில் சுமந்தபடி
ஒரு தேவ தூதனைப்போல்
இம்மண்ணில் வந்திறங்கினான்.
ஹென்றி நிக்கலஸ் ரிட்லி எனும்
ஆங்கிலேய தாவரவியல் நிபுணன்.

அவன்
இரப்பரின் எதிர்கால ஏற்றத்தை
அறிந்து வைத்திருந்த
தீர்க்கதரிசி.

அதன் அருமை பெருமைகளை
அகிலத்துக்குச் சொன்ன
தத்துவஞானி.

இந்த “ கித்தா “ மரத்துச் சித்தன்
பிரேசில் நாட்டின் அமேசான் காடுகளில்
பதுங்கி வாழ்ந்திருந்த
ஒன்பது இரப்பர் விதை வாமனர்களை
தன்னுடன் கடத்தி வந்திருந்தான்..

அவர்களை
கோலகங்சாரின் ராஜ வீதியில்
குடிவைத்தான்.

அந்த ஒன்பது வாமனர்களே
இந்நாட்டின் ரப்பர் உற்பத்திக்கு
ரிஷிமூலமானார்கள்.

ரிட்லியின் கருவில் உருவான
அந்த மந்திர வித்துக்களின் வழித்தோன்றல்கள்
தமிழர்களின் அயராத உழைப்பாலும்
தங்களின் பிறப்புரிமையான மனித உரிமைகளை
தாரைவார்த்த அர்ப்பணிப்பாலும்
நாடெங்கும் இலட்சக்கணக்கில்
விஸ்வரூபம் எடுத்து நின்றன.

ஓங்கி வளர்ந்திருந்த
மலாயாவின் பெருங்காடுகள்
நாட்டிற்கு பெருஞ் செல்வத்தை
வாரி வழங்கிய
ரப்பர் தோட்டக் காடுகளாக மாறின.
நாட்டில் கரைபுரண்டோடிய
பொருளாதார காட்டாற்று வெள்ளத்திற்கு
இந்த இரப்பர் மரங்களே
நதிமூலம் ஆயின.


சின்னச் சின்ன குன்றுகளில்
நந்தவனத்தோடு
வெள்ளைக்கார துரையின் குடும்பத்திற்கு
அழகிய பங்களாக்கள் உருவாகியிருந்த வேளையில்
தோட்டப் பாட்டாளிகளின்
குழந்தைகள் காப்பகமெனும் பெயரில்
கூலி லயங்களுக்கு மத்தியில்
மாட்டுக் கொட்டகைகள்
கட்டியிருந்தார்கள்.  


இந்தக் கொட்டகைகள்
தோட்டப்புற கூலிகளுக்கு பிறந்துவிட்ட
குற்றத்திற்காக
இரப்பர் தோட்டப்புறங்கள்தோரும் தோற்றுவிக்கப்பட்ட
குழந்தைகளுக்கான
சின்னச் சின்ன சிறைச்சாலைகள்.

“ சொக்கரா “ என்றழைக்கப்பட்ட
எதிர்கால குழந்தைத் தொழிலாளர்களுக்கான
அறுவடைக்கு
காலனித்துவ காலாடிகளும்
அவர்களுக்குப்பின்
உள்நாட்டுக் கில்லாடிகளும்
தோட்டங்கள் தோறும் தோற்றுவித்த
நாற்(ற)றுப் பண்ணைகள்.

எதிர்காலக் கூலிகளுக்கான விதைகள்
இந்தப் பாத்திகளில்தான்
மிகப் பத்திரமாகவும்
நாஜித்தன உத்திகளோடும்
பதியன் போடப்பட்டது.

இந்த முடைநாற்ற முழையில்தான்
ஒரு இனத்தின் எதிர்காலம்
முளையிலேயே கிள்ளியெறியப்பட்டு
முடமாக்கப்பட்டது.

இந்த கூட்டுக்குள் புகுந்த “ லார்வாக்கள் “
பட்டாம்பூச்சிகளாக பரிணாம வளர்ச்சியடைந்து
சிறகுகளோடு சுதந்திரமாகப் பறப்பதற்கு பதில்
இந்த தோட்டப்புற நரகக் குழியில்
குறுகிப் போயின.

ஏய்க்கப்பட்ட ஏழைகளாகவும்
உரிமைகளை இழந்த கோழைகளாகவும்
வாழ்வதற்கான அடிப்படைப் பாடங்களை
இந்த “ நர்சரியில் “ தான்
பச்சைப் பாலகர்களுக்கு பயிற்றுவித்தார்கள்.

மலமூத்திர நாற்றத்தில்
கொசுக்களுக்கும் ஈக்களுக்கும் மத்தியில்
பிராண வாயுவுக்கு பதில்
கரியமிலவாயுவை சுவாசித்து வாழ்ந்த
அதிசயப் பிறவிகள் இவர்கள்.

இரப்பர் தோட்ட முதலாளிகளின்
பந்தாவிற்கும் பகட்டிற்குமான
பட்டாடைகள் நெய்வதற்கான பட்டுப்புழுக்களை
இங்கேதான்
தொட்டில்கட்டி தொங்க விட்டிருந்தார்கள்.

ஊட்டச்சத்து இல்லாத உணவில்
உயிர்வாழ்வது எப்படியென்றும்
சுத்திகரிக்கப்படாத “ அல்லூர் “ தண்ணீரை
அள்ளிக் குடிப்பது எப்படி என்றும்
மலக்கூடமில்லாமல் எப்படி
மலங்கழிப்பது எப்படியென்றும்
இங்கேதான் அவர்களுக்கு பயிற்சியளித்தார்கள்.

ஒவ்வொரு தரித்திர தீபாவளியன்றும்
இந்த நாற்றக்கொட்டகையில்
அந்த ஏழைக் குழந்தைகள்
அரை நிர்வாணத்துடன்
கையேந்தி நிற்பார்கள்
அங்கே
தேவலோகத்து காந்தர்வ புருஷராக துரையும்
அவரின் தேவலோக அப்சரஸாக மேம்மும்
ஆள் அம்பு சேனைகளாக
கிராணியும் கங்காணிகளும் புடைசூழ
பிரசன்னமாகி
ஏந்திய அவர்களின் கைகளில்
பத்து காசு வீதம் பிச்சையிடுவார்கள்..
அன்று ஏந்திய அந்த கைகளிலிருந்துதான்
எங்களின் இழந்த உரிமைகளில் ஒன்றான
கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத
தென்னிந்திய தொழிலாளர் நிதியை
பறிகொடுத்தோம்.

அதே ஏந்திய கைகளை
இன்றும் ஏந்திக் கொண்டிருக்கிறோம்
ஐந்தாண்டுக் கொருமுறை
கொண்டாடப்படும் தேர்தல் திருவிழாவின்போது
எங்களின் அரசியல்வாதிகள் தரும்
ஆறு கிலோ அரிசிக்கும்

அரை டஜன் மேக்கி மீயிர்கும்.

No comments:

Post a Comment