Thursday, February 10, 2011

ஒப்பாரி

பாட்டாளிகளாகவே இந்நாட்டில்
பலதலைமுறைகளாக பாடுபட்டும்
பொருளாதார ரீதியில் கேடுகெட்டுப்போன
ஒருதமிழச்சியின் உள்ளக் குமுறலை
அள்ளிக் கொட்டும் ஒப்பாரிப் பாடல் இது.

இவள் பெற்ற ஆண்பிள்ளைகள் இருவர்
மறுக்கப்படும் வாய்ப்புக்களாலும்
மறைக்கப்படும் உரிமைகளாலும்
தன்னம்பிக்கையையும் தன்முனைப்பையும் இழந்த
தற்குறியாகிறார்கள்.
இவர்களின் தற்காலிகம் என எண்ணும்
தப்பித்துக்கொள்ளும் மனப்பான்மை இவர்களுக்கு
தப்பானதையெல்லாம் கற்பித்துக் கொடுக்கிறது.

போதைப்பொருள்
இவர்கள் போகக்கூடாத ஊருக்கெல்லாம்
பாதை காட்டுகிறது.
இவர்களின் கல்லாமையும் இல்லாமையும்
செல்லாக்காசாய் இவர்களைக் கேவலப்படுத்துகிறது.
சிறுபான்மை என்ற அடையாளம்
இவர்களின் பிறவியையே சிறுமைப்படுத்துகிறது.

குடும்பத்தின் திருமகள்
எனப் போற்றி வளர்த்த ஒரே மகள்
ஒழுக்க நெறிகளை பெற்றோர்கள் அவளுக்கு
ஓதாத காரணத்தினால்
அழுக்கேறிய உள்ளம் அவளை
வழுக்கி விழச் செய்கிறது
அவள் இங்கு
பிழைக்கவந்த ஒரு பொறுக்கியிடம்
தன் கற்பைப் பறிகொடுத்த சிறுக்கியாகிறாள்.

இந்த பரிதாபத்திற்கும் பச்சாதாபத்திற்கும் உரிய
மலேசியத் தமிழச்சியின் கணவன்
நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லவன்தான்
ஆனால்...............
வலியதுவே வாழும்  எனும் மந்திரமறிந்த
வல்லவனாக இல்லாததால்
வாழ்க்கைப் பாதையில் சறுக்கி விழுந்து
ஊனமாகிப் போனவன்.

கடமையுணர்வோடுதான் அவன் தன்
குடும்பத்திற்குக் கடனாற்றினான்
ஆனால்...........!
பாராபட்சமான தடைகளும்
ஓரங்கட்டிய முறைகளும் அவனை
ஐந்தாண்டுத் தவணைமுறையில்
தரித்திரத்திற்கு தாரைவார்த்துக் கொடுத்தது.

மற்றவர்களுக்கு முன்னால் அவன்
மனிதனாக மட்டும் வாழ மல்லாடினான்.
அதற்காக அவனுடைய இனத்திற்கென ஒதுக்கிய
தோட்டப்புறமெனும் பாலைவனத்தில் பயிரிட்டான்
பலன்.................!
அவனின் வியர்வையே அவனுக்கு
விஷமாகிப் போனது..........!

அதற்கு மருந்தாக அவன் அருந்திய மது
அவனையே விருந்தாக்கிக் கொண்டது.
குடியை முதலில் அவன் குடித்தான்
இறுதியில் குடி அவனையே குடித்தது.
மரணம் முற்றுப் பெறாத அவனின் கதையை
இடையிலேயே முடித்தது.

அவளின் ஊனோடும் உயிரோடும்
ஒட்டியிருந்த கணவனும்
அவளுடனான வாழ்க்கை ஒப்பந்தத்திலிருந்து
காலாவதியாகி
உலக உறவை வெட்டிக் கொண்டபோது
வான் நோக்கி வாடிய பயிராய்
அவளின் இமைக்கரைகளில்
கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டோட
வயிற்றிலும் மார்பிலும் அடித்துக் கொண்டே
இப்படிக் கதறிப் புலம்புகிறாள்..........................

சாமந்திபூ பறிச்சி வெச்சேன்
சரம் கோர்த்து முடியலையே
பூமாலை கட்டி வெச்சேன்
பூமிக்குத் தாங்கலையேஎன்ராசா
காலையிலே வெச்ச பொட்டு
காயலையே வெய்யில் பட்டு
நாளை உனக்கில்லை யின்னு
நடந்தாயோ என்னை விட்டு.

பட்டுவேட்டி தொவைச்சி வெச்சேன்
பன்னீரில் நனைச்சி வெச்சேன்
சட்டையிலே ஒத்த ரோசா
சாட்சிக்கென குத்தி வெச்சேன்என்ராசா
நீ, பாடையிலே போவதற்கா
பாவிநான் பாடுபட்டேன்
கோடையில வாடி பட்டக்
கொடிபோல கேடு கெட்டேன்

மூத்த தலைமுறையில் நாட்டுக்கு
முதுகொடிஞ்ச எம்பாட்டன்
சேத்து வெச்சதெல்லாம்
சிதையிலிடப் போதவில்லே- பாவி
மிச்சமா வெச்சதெல்லாம்
மெத்தனமா இருந்து கெட்ட
பிச்சாண்டி என்னெப் பெத்த
பேரு இல்லா எங்கப்ப னைத்தான்.

மல்லிகைப்பூ மாலைகட்டி
மந்தி கையில் கொடுத்த தைப்போல்
அல்லிப்பூ ஆரங்கட்டி
அடுப்பின்மேல் வைத்ததைப் போல்என் அத்தா
துப்புக்கெட்ட எங்கப்பனுக்கு
தொடப்பக் கட்டையாய் தேய்ஞ்சு
பத்துப் புள்ள பெத்துபோட்டு
பாடையில போய்ச்சேந்தா.

கள்ளத்தன மேதுமில்லே
காமத்துக்கு காதலில்லே
வல்லவங்க நல்லவங்க
வாழ்த்து கூற எங்களுத்தில்என் ராசா
தாலிக்கொடி கட்டி என்னை
தாரமுன்னு கைப்புடிச்சே
மூலியென ஆவதற்கா
மூனுபுள்ள நானு பெத்தேன்.

பத்துமாதம் சுமந்து பெத்த
பாவிமகன் மூத்த புள்ள
பெத்தகடன் தீர்ப்பா னுன்னு
பேதைநான் நம்பவில்லேஅவனுக்கு
புடுஜெயிலு புதுசில்லே
பூலாவ் ஜெர்ஜா பெருசில்லே
வடுவாயென் வயிற்றினிலே
வந்துதித்தான் பாவி புள்ளெ

வாரியெனை அணைத்திடவே
வாய்க்கரிசி போட்டிடவே
மாரியாத்தா கொடுத்தா ளுன்னு
மகளொருத்தியை நானுபெத்தேன்என் ராசா
பொத்திவெச்ச நம்மகளோ
பொழைக்க வந்த பொரம்போக்கை
நம்பியே நலமிழந்தே
நாசமாகிப் போனாளே.

கடைகோட்டி புள்ளையின்னு
கருத்தாய் நான் வளர்த்த புள்ளே
தடைபோட்ட குத்தமெல்லாம்
தருதலையாய் செய்யிரானாம்ஐயோ நான்
அடைகாத்த முட்டையெல்லாம்
அழுகித்தான் போனதய்யோ
இடைநோவச் சொமந்ததெல்லாம்
எமனாக வாய்த்த தய்யோ.


நாளைந்து தலைமுறையாய்
நாமபட்ட பாட்டையெல்லாம்
பாலையிலே விதைச்சிருந்தா
பயிராய் முளைச்சிருக்கும்ஆண்டவனே
அடுத்து வரும் தலைமுறையை
அய்யோ மனம் நெனைக்கயிலே
சுடுகாட்டு சிதையிருக்கும்
சுடும் பிணமாய் வேகிறதே.

பட்டதுன்பம் போதுமென
பரலோகம் போனவரே
பொட்டச்சி நான் என்ன செய்ய
பொலம்புகிறேன் துக்கத்துலஎன்னய்யா
துணைவேணும் துயர் போக
தூங்க வேணும் ஏக்கத்துல
பொணமாக உன்னவெச்ச
புதைகுழிக்கு பக்கத்துல.

1 comment: