Tuesday, November 20, 2012

என் கல்லறை


                          என் கல்லறை
           ----------------------

நீ என் தாய்
உன் வீங்கிய வயிற்றுக்குள்
நான் உன் சேய்.

கலவி செய்யாது
கரு சுமக்காது
என் உருவைத் தாங்கும்
என் கன்னித் தாய்.

உன் நெற்றியில்
திலகமாக என் பெயர்.

நிரந்திரமான விலாசத்தில்
இந்த மயானத்தில்
என் சயனம்.

முதன் முதலாக
சாதியில்லாத தமிழனாய்
எனது அருகில் உறங்க வருவான்
இன்னொரு தமிழன்.

சூரியனும் சந்திரனும்
தூங்காத நட்சத்திரங்களும் இல்லாத
அமாவாசை வானம்
என்னைப் பேணும்.

என் அம்மாவின் கருவை
மறுபடியும் உருவாய் தாங்கும்
என் மாற்றாந்தாய் நீ.

முழுமையாக போர்த்தப்பட்ட
மண் போர்வைக்குள்
நான் சிலையாக.

ஐம்புலன்களையும் அடக்கிய
அசேதனத்தால் மட்டுமே சாத்தியமானது
இந்த என் தியானம்.

 

















No comments:

Post a Comment