Tuesday, November 20, 2012

என் சவப்பெட்டி


                      என் சவப்பெட்டி
         --------------------------
எங்கோ ஒரு காட்டில்
ஏதோ ஒரு மரத்தில்
எனக்காக நீ காத்திருக்கிறாய்.

அறையப்படும் ஆணிகளை
தானே ஏற்றுகொண்டு
இந்தச் சிலுவை என்னை சுமக்கும்

உன்னைக் கண்டாலே
பலருக்கு நடுக்கம்
ஆனால் நிச்சயமாக
உன்னோடுதான்
அவர்களின் அடக்கம்.

வேரூண்றி
எனக்காக நீ காத்திருப்பாய்
வேரருந்து பிணமாக நான் வீழும்போது
என்னை தாங்கிக்கொள்ள.

தமிழனிடம் மட்டும்தான்
நீ சமரசமற்று அசிங்கப்பட்டுப் போவாய்
ஏனென்றால் அவன்
அப்போதும் உன்னைப் பார்த்து கேட்பான்
நீ என்ன சாதி மரமென்று.!

என் மரண ஊர்வலத்தில் நீ
என்னை சுமக்கும்
எட்டுக்கால் பூச்சியாவாய்.

எனக்கும் வருத்தம்தான்
விதைக்கப்பட வேண்டிய நீ
காரணமில்லாமல் என்னோடு நீயும்
அன்று புதைக்கப்படுவாய்
என்பதை நினைத்து.

ஆமாம்……………….!
அன்று நடைபெறப்போகும்
மலர்ச்செண்டு மாலை மரியாதையெல்லாம்
வெட்டி வீழ்த்தப்பட்டும்
உறுதியானதும் உபயோகமான
மரக்கட்டையான உனக்கா……………..?
அல்லது…………..
வாழ்ந்தபோதும் சரி வீழ்ந்தபோதும் சரி
யாருக்கும் உபயோகமில்லாது
அழுகிக்கொண்டிருக்கப்போகும்
நாற்ற உடற்கட்டையான எனக்கா…………….?
உனக்கு என்றால் நான் மகிழ்ச்சியடைவேன்.
எனக்கு என்றால் துக்கப்படுவேன்.




No comments:

Post a Comment