Tuesday, November 27, 2012

வயிற்றெரிச்சல்


                               வயிற்றெரிச்சல்

திருக்குறள் கண்டவன் தமிழ்மறை கொண்டவன்
திசைமாறிப் போகுதல் முறையா ?
அருந்தமிழ்த் தாயினை ஐயமுடன் நிந்தனை
செய்தலும் சிதைத்தலும் சரியா ?
தருவாகி உலகினில் தலைமாந்த னாகவே
தரணியில் பிறந்ததுன் இனமே
மருவான மாக்களாய் மாந்தரில் புழுக்களாய்
மயங்கியே மாய்வதேன் தினமே !

உலகெலாம் உதைவாங்கி உருவத்தில் பிழையாகி
ஒடுங்கிய ஆமைபோ லானாய்
பழைமையில் மூழ்கி வளமையில் தேய்ந்து
இனத்திற்கு பாரமாய் ஆனாய்
மலமெனத் திகழ்ந்தோரும் மாந்தாராய்க் கடைத்தேற
மறைபொரு ளோதிய தமிழா !
சிலந்தியின் வலையிலே சிறைபடத் தாவியுன்
சிறகினை விரிப்பது முறையா ?

அடிமையாய் வாழ்வதில் அடிதாங்கி யாவதில்
அடிமாட்டை நீ;வென்று விட்டாய்
குடிகார னாகியே குடிகெடுத் தழிவதில்
குக்கலாய் உருமாறிப் போனாய்
மடிதனில் ஏழ்மையை மாண்பெனத் தாங்கியே
மாண்டிடப் பிறந்தவன் நீயே
இடிதாங்கி போலவே மிடிமையில் வாழ்கிறாய்
ஏழ்மைதான் உனக்கு விதியா !



No comments:

Post a Comment