Tuesday, November 20, 2012

தண்டவாளத்தில் எங்களின் வண்டவாளங்கள்


தண்டவாளத்தில் எங்களின் வண்டவாளம்.
---------------------------------------------------------------------------
இந்த நாட்டின் பொருளாதாரம்
பொலிவுடன் நடைபோட்டதே
இந்த தண்டவாளத்தின்
தயவோடுதான்……..!

அதோ பாருங்கள்
அந்த ரயில்தண்டவாளங்களுக்கு
அடியில் இருப்பது
சிலிப்பர் கட்டைகளா………………..?
இல்லை………….இல்லை!
அவை என் முன்னோர்களின்
உடற்கட்டைகள்.

‘’ நாட்டின் செழிப்பிற்கான
என் முன்னோர்களின் உழைப்பு
தன்னல கூலிக்கான பிழைப்பு ‘’ என்று
கேலி செய்தார்கள்.

நாட்டின் பின்புற வாசல் வழியாக
நேற்று வந்தவர்கள்
நீலக்கார்டுகளுடன் ‘’ என்னுடைய நாடு ‘’ என
தேசிய கீதம் பாடிக்கொண்டிருக்கிறார்கள்
ஆனால்……………
கடாரம் கண்ட ராஜ ராஜ சோழனின்
காலம் தொட்டு
இந்த நாட்டின் ஏற்றத்திற்கு
ஏணியாய் இருந்தவனின் சந்ததி
நிரந்தரம் இல்லாத நீர்க்குமிழியாக

வந்தேறிகளெனும் நிந்தனையோடு
சீரழிந்து கொண்டிருக்கிறது.

தண்டவாளங்களிலிருந்து
காணாமல் போன
கரிய ரயில் இஞ்ஜினைப் போல
காணாமல் போய்விட்டது
இனத்தின் மேன்மைக்கான
தென்னிந்திய தொழிலாளர் நிதி போன்ற
தடயங்கள்.

உலகப் பந்து
ஈவிரக்கமில்லா இரத்தக் காட்டேரிகளின்
கால்களுக்கிடையில் சிக்கிச் சிதைந்து கொண்டிருந்த
அந்த இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில்
ஜப்பானிய ராணுவக் காதகர்களின்
துப்பாக்கி முனையில் நிர்மாணிக்கப்பட்ட
சயாம் பர்மா மரண ரயில் பாதையில்
படுகொலை செய்யப்பட்ட
என் ஆயிரக்கணக்கான மூதாதையர்களின்
மறைக்கப்பட்ட வரலாற்றைப் போலவும்
பதுக்கப்பட்ட அவர்களின்
உயிருக்கும் துயருக்குமான இழப்பீட்டைப் போலவும்
பிடுங்கியெறியப்பட்டு விட்டது
ரிஷிமூலமான என் பாட்டனும் பூட்டனும்
படாத பாடுபட்டுத் தோற்றுவித்த
‘’மலாயன் ரயில்வே’’ யின்
கருவில் உருவான
முதல் ரயில் தண்டவாளப் பாதையான
‘’தைப்பிங் டு போர்ட் வெல்ட்’’ எனும்
நதிமூலம். 

மேய்ப்பர்கள் என்றும் மீட்பர்கள் என்றும்
தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள்
ஏய்ப்பவர்களாகி
இந்த அப்பாவி ஆடுகளின்
நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும்
மேய்ந்து விட்டார்கள்.





இந்த இரு தண்டவாளங்களைப் போல்
சாதி எனும் பிரிவால்
இணையமுடியாமல் எங்கள் இனம்.
ஒன்றை ஒன்று ஒட்டாமல்
நீண்டுகொண்டே போகும் பயணமாக
எங்களின் துன்பங்கள்.

இந்த தண்டவாளங்களைப்போலவே
வறுமையெனும் ஆணிகளால்
இறுக அறையப்பட்டு
பலர் எங்கள் மேல் பயணம் செய்ய
தேய்ந்து கொண்டே போகிறோம்.







No comments:

Post a Comment