Tuesday, November 20, 2012

நண்டு


                                                    நண்டு
                     ---------

இருநூறு ஆண்டுகள் வரலாறாம் நமக்கு – நாட்டில்
இருபது இலட்சம் இதுவரை கணக்கு
எருமைபோல் எதிர்கால இலக்கினில் பொறுப்பு _ காச
இருமலாய் நமக்குள்ளே எத்தனை பிணக்கு.!

ஆயிரக் கணக்கான ஆலயங்கள் இங்கே – அவை
ஊட்டிய நன்னெறி ஒழுக்கங்கள் எங்கே.?
கோவின் இல்லம் கேளிக்கைக் கூடமானது – இனம்
கூனலாகி இந்த நாட்டில் ஊனமானது.

இனம்மொழி நலம்காக்க சங்கங்கள் கண்டோம் – சாதி
சனம்குலம் கோத்திரம் அவற்றிலும் கொண்டோம்
குணம்தவிர பணம்பகட்டு அங்கேயும் உண்டு – தனி
மனிதவழி பாட்டிற்கு துதிபாடும் தொண்டு.

வீழ்ச்சியுற்ற இனம்நிமிர கனல்தெரிக்கும் கூட்டங்கள் – அதன்
விரைவான மீட்சிக்கு தீர்வுகளாய் திட்டங்கள்
வாழ்க்கையின் தரம்உயர வரியோரின் வேட்டல்கள் – வாரி
வழங்கியவர் வயிறெரிய காட்டுவதோ நட்டங்கள்.

நெடுஞ்சாலை நிறுத்தங்களில் பளிங்குக் கழிவறைகள் – நாட்டில்
நெடிந்துயர்ந்த கோபுரங்களாய் வியாபாரக் கருவறைகள்
ஏழ்மையைத் தந்துஓய்ந்த தோட்டப்புறத் தொழிற்துறைகள் – அங்கு
இனத்தைப்போல் பொலிவிழந்த வாரிசுகளின் வகுப்பறைகள்.

ஆதரவும் அறிவுரையும் இல்லாத படிப்பு – அதனால்
ஆக்கமான துறைகளிலே இல்லைஒரு பிடிப்பு
சாதனைகள் இல்லாத தலைமுறையின் நொடிப்பு – இதை
அறிந்திருந்தும் அரசியலில் நம்மவர்களின் நடிப்பு.

தேர்ந்தெடுத்து வைப்பதற்குமுன் தரத்தைப்பாரு – பின்
தேராதவன் என்றுணர்ந்தால் குறைகளைக் கூறு
தெரிந்தும் அறியாதவன்போல் இருந்தாய் இங்கு – அதனால்
பறிபோன காக்கையின் வடையானது உன்பங்கு.

ஒற்றுமையே மற்றவரின் பலம்இந்த நாட்டில் – நம்மின
ஊடல்களும் உரசல்களும் ‘ நாறுது’ தினம் ஏட்டில்
மற்றவர்களின் மாண்புக்கு சான்றுகள் பலஉண்டு – இங்கு
நம்மினத்திற் குவமையோ காண்டா காட்டு நண்டு.

No comments:

Post a Comment