Friday, March 11, 2011

அனைத்துலக அகதிகள்


குரங்கைப்போல் மரக்கிளையில் வாழ்ந்தோ ருக்கும்
குகைகளிலே குடித்தனம்தான் செய்தோ ருக்கும்
அரைதனிலே இலையுடுத்தி அரைகுறை யாக
அம்மணத்தை மறைத்துலகில் திரிந்தோ ருக்கும்
வரைமுறையே இல்லாது விலங்கைப் போலே
வாழ்ந்துலகில் வழித்தோன்றல் தந்தோ ருக்கும்
வரலாற்றுக் குறிப்போடு வளநா டுண்டு
வருங்காலச் சந்ததிக்கு எதிர்கா லமுண்டு.

ஐக்கியநாட் டுச்சபையில் அவருக் கெல்லாம்
அங்கீகா ரம்உண்டு ஆசன முண்டு
எக்கணமும் அவரினத்திற் கூறு நேர்ந்தால்
ஏனென்று கேட்பதற்கு நாதி யுண்டு
அகங்குளிர அவரின்தாய் மொழியை நாட்டில்
அரியணையில் அமர்த்திவழி பாடு செய்ய
இகமதிலே எத்தடையும் அவருக் கில்லை
ஏந்தியதாய் மணிக்கொடியே அவரின் எல்லை.

ஞாலத்தின் முதல்உயிராய் நலமே தோன்றி
நாகரிகம் படைத்தோனாய் வையம் தன்னில்
கால்பதித்தான் கலைபடைத்தான் என்ப தற்கு
கல்தோன்றி மண்தோன்றா காலம் தோன்றி
ஆல்போன்று விரிந்ததமிழ்க் குடியே என்னும்
ஆய்வாளர் கூற்றிற்கு அர்த்தம்; ஆனால்
வாலறிவர் போற்றியஇத் தமிழ னுக்கு
வையத்தில் நாடில்லை என்னே விந்தை..!

தாய்நாடு என்றொன்று இருந்தி ருந்தால்
தரணியெலாம் தரித்திரனாய் வதைபடு வானா..?
சிறுபான்மை மக்களென நாடுகள் தோறும்
சீரழிந்து சிறப்பிழந்து உதைபடு வானா..?
வாயில்லாப் பூச்சிகளாய் வாழ்நா ளெல்லாம்
வற்றாமல் உழைத்துப்பிறர் உயர்வுக் காக
தேய்ந்ததுதான் மிச்சம்பிறர் இவனின் வாழ்வை
சீர்செய்தார் என்பதெல்லாம் சுத்தப் பொய்யே.

அரைவயிற்றுக் கஞ்சிக்குப் பிழைப்பைத் தேடி
அயல்நாடு சென்றாலும் அங்கே யும்தன்
புரையோடிய புண்ணான சாதி தன்னை
புதுப்பித்துப் போற்றுகின்ற புத்தி யால்தான்
சிறைவாழ்க்கை வாழ்கின்றார் என்னி னத்தார்
சிதைந்தஇன மாகைந்த நானி லத்தில்
கறையான களங்கத்தை கொள்கை யென்றே
கடைபிடித்த தால்வீழ்ந்தார் உண்மை யன்றோ..!

உலகப்பொது மறையென்று புவியோர் போற்றும்
ஒப்பிலாத தமிழ்மறையாம் குறள்நெறி நின்று
தளராத உறுதியுடன் தமிழ்நிலம் காத்து
தமிழினத்தைப் பிளக்கின்ற சாதி யென்னும்
குலநாசச் சதிதன்னை முறிய டித்து
குற்றமிலாத் தலைமையிலே தமிழி னத்தின்
நலன்நாடி ஒருங்கூடி உழைத்தி ருந்தால்
நானிலத்தில் மூத்தகுடி வென்றி ருக்கும்.

No comments:

Post a Comment