குப்பைத் தொட்டி
வானம் நிராகரித்த எரிநட்சத்திரமாய்
வீரிட்டலறும் என்னை
எறும்பும் ஈக்களும் மொய்க்கும்
இந்த நாற்றக் கழிவுத் தொட்டியில்
வீசிவிட்டுப் போகும் என்னைப் பெற்றவளே
ஈவு இரக்கம் எனும்
ஈரமான இதயம் அற்றவளே
காம சுகத்திற்காக தெய்வீகத் தன்மையான
தாய்மையை விற்றவளே
சற்றே நில்………………..
நிர்வாணமாக இருந்தேன் நான்
இருந்தும் இல்லாமலும் !
நான் கருவாவதற்கு காரணகர்த்தாவாய்
நீ இருந்ததால்தான்
நான் உருவானேன்.
மாணிக்கத் தொட்டிலில் கிடத்தி
ஆராட்டிச் சீராட்ட வேண்டிய என்னை
குப்பைத் தொட்டியில் துறுத்தி
துன்புறுத்தும் வஞ்சகியே………
அநாதியாக இருந்த என்னை
அநாதையாக்கினாய்.
உன்னையும் என்னையும்
கண்ணியப்படுத்த முடியாதவன் மேல்
உருட்டப்படும் பகடைக்காய் நீயென்பதை
தெரிந்தும் தெரியாதவள் போல்
உருண்டு கொண்டிருந்தாய்
புரிந்தும் புரியாதவள் போல்
புரண்டு கொண்டிருந்தாய்.
உன் சதையின் வெப்பத்தைத்
தணித்துக் கொள்ள
சாக்கடையில் புரண்டு
தப்புச் செய்தவள் நீ…………!
தண்டனை மட்டும் எனக்கா……..?
அது தடைசெய்யப்பட்ட களியாட்டமா…..?
அல்லது பணயமாக என்னை வைத்து
நீ ஆடிய சூதாட்டமா…….?
அது வெற்றிக் கனியைப் பறிப்பதற்காக
நடந்த போராட்டமா…….?
அல்லது உன் காமப் பிணியைத் தணிப்பதற்காக
நடந்த சதிராட்டமா………?
உன் ஈன இச்சையால் விளைந்த
கொச்சைத்தனத்தை மறைப்பதற்காக
ஒரு பாவமும் செய்யாத
பச்சை மண்ணான என்னை
சாக்கடையில் கொட்டிவிட்டுப் போகும்
சண்டாளியே……………..
மாண்புமிகு மாதர்குலத்தில் தோன்றிய நீ
எப்போது பிணந்தின்னும் பேயாய் மாறினாய்..?
விட்டுச் செல்வதற்கும்
வீசி எறிவதற்கும்
எவ்வளவோ இடமிருக்க
நீ ஏன் குப்பைத் தொட்டியை தேர்ந்தெடுத்தாய்.
ஓ……………புரிகிறது
நீயே ஒரு எச்சில் தொட்டி என்பதால்தானே.!
நான் உன் குலதெய்வங்களின்
உயிர்ப்பிரதியாக
உன் கர்ப்பக் கிரகத்தில் பிரசன்னமாகி
உன்னுடைய ஊனோடும் உதிரத்தோடும்
ஒன்றரக் கலந்த
உன் நகல் அல்லவா………..!
பின் ஏன்………..
ஒரு அழிப்பானைப் போல
என் அடையாளத்தை
அழிக்க நினைக்கிறாய்…………!
இலக்கணப் பிழையாக
என்னை எழுதிய குற்றவாளி நீயாகும்போது
உயிர் மெய் எழுத்தான
நான் ஏன் அழ வேண்டும்.?
உன்னைக் காட்டிக் கொடுத்த
எட்டப்பன் என்றா எனக்கு இந்த
கடுந்தண்டனையைக் கொடுத்தாய்..!
அப்படியென்றால்……..
காட்டிக் கொடுக்கக் கூடாத அந்த
கட்ட பொம்மன் யாரம்மா………?
என்னை ஒ(ழி)ளித்து விட்டதாக எண்ணி
ஒளிந்து கொள்பவளே………………
நீ உயிருடன் இந்த உலகில் உலவும்வரை
நான் உன்னோடு இருப்பேன்
உன் மனசாட்சிக் கருவறையுள்
உன்னைப் பழி வாங்கும்
மறு அவதாரமாக…………!
No comments:
Post a Comment