Friday, April 1, 2011

ரு தோட்டப்புறக் குயிலின் சோக கீதம்

(யாப்பிலக்கணம் எனக்கு முழுமையாக அறிமுகமில்லாத காலம். வெறும் கேள்வி ஞானத்தின் துணையோடு தப்பும் தவறுமாக நான் எழுதிய என் முதல் கவிதை. நான் பெற்ற என் முதல் குழந்தை. மதிப்பிற்குரிய புலவர்களே தயை கூர்ந்து அந்த குழந்தையின் மழலை மொழியில் சொற்குற்றமோ இலக்கணக் குற்றமோ காணாதீர்கள். மன்னித்தருளுங்கள்.)


சாமக்கோழி கூவுமுன்னே கண்வி ழித்து
தரித்திரத்தை உணவாக சமைத்து வைத்து
சாமக்காரன் குரலுக்கு பதில ளித்து
தவறாமல் பெரட்டினிலே பெயர்கொ டுத்து
நாமணக்க மகவுகளை அணைத்துக் கொஞ்சி
நாற்றமிகு ஆயாக்கொட் டகையில் விட்டு
தாமதமின் றிரப்பர்மரக் காடு நோக்கி
சஞ்சலத்துடன் விடிவதற்குள் ஓட வேண்டும்.

பன்றிகளும் பாம்புகளும் வாழும் காட்டில்
படிகள்கொண் டஏணிதனை தூக்கிக் கொண்டு
பன்னிரண்டு அடிகளுக்கும் உயரே உள்ள
பால்வெட்டுக் கோடுகளை சீவி எந்தன்
கண்களிலே வடிகின்ற கண்ணீ ரைப்போல்
கசிந்துருகும் நொய்வப்பால் சேக ரித்து
ஊணுடம்பு நோகிடவே சுமந்து என்னை
உருக்குலைக்கும் பணிதன்னை முடிக்க வேண்டும்.

நிரையினிலே குறையேதும் இருந்து விட்டால்
துரைமுன்னே நடுநடுங்கி நிற்க வேண்டும்
குறைகண்ட கிராணியாரின் கூவ லுக்கு
குலைநடுங்கி குறுகித்தான் குனிய வேண்டும்
புரையோடிய புண்வாழும் புழுவைப் போல
பொய்யான பிழைப்பிற்கு உழைக்க வேண்டும்
கரைதனிலே வீழ்ந்துவிட்ட மீனைப் போல
கலங்கித்தான் தினம்நானும் சாக வேண்டும்.

காட்டோடு தீராது எந்தன் தொல்லை
கணவனெனும் குடிகாரன் தினமும் என்னை
வாட்டிடுவான் வதைத்திடுவான் வம்பு பேசி
மக்களையும் மிதித்திடுவான், கேடு தரும்
சீட்டாட்டம் ஆடிடுவான், பாடு பட்ட
சில்லரைகள் அத்தனையும் தீர்த்தொ ழிப்பான்
கூட்டினிலே சிறைபட்ட பறவை யாக
கொடுமையிலே வாழ்கின்றேன் என்ன செய்வேன்.

நிம்மதியாய் படுத்துறங்க படுக்கை யில்லை
நினைவறிந்து வயிறாற உண்ட தில்லை
அம்மணமாய் அலையுமெந்தன் குழந்தை கட்கு
அணிவதற்கு நல்லஆடை ஏது மில்லை
நம்பிவந்த கணவனெனும் பாவி யாலே
நலமேதும் எனக்கிங்கு வாய்க்க வில்லை
இம்மையிலே எனக்கிந்த தொல்லை தீர
எமனான ‘’பாராகுவாட்’’ தானோ எல்லை….!

(பாராகுவாட் = கொடிய களைக்கொல்லி விஷம் )

Friday, March 11, 2011

மதங்கொண்ட மனிதர்கள்


எல்லோருக்கும் பொதுவான இறைவன் பெயரால்
இதயமற்றோர் இயக்குகின்ற மதக்கல வரங்கள்
வள்ளலவன் அருளாலே வந்து தித்த
மாந்தர்களுக் கெதிரான இனப்படு கொலைகள்
சொல்லொண்ணாக் கொடுமைகளை இழைத்தே உலகை
சூறையாடும் கொடியோரே ஒன்றை உணர்வீர்
செல்லாத உயிர்களென நினைத்தி ருந்தால்
செகத்திலவன் பல்லினத்தைப் படைத்திருப் பானா….?

அல்லாவின் அருட்புதல்வர் அன்னல் நபியும்
அன்னைமேரி ஈன்றெடுத்த தேவ மகனும்
எல்லாஉயி ரினங்களையும் அன்பால் வென்று
இரட்சிக்க வேண்டுமென்ற புத்த பிரானும்
தொல்லுலகைக் காப்பதர்க்கு தூதர் களாக
தோன்றியநற் சித்தர்களும் தீவிர வாதம்
நல்லதென்று சொல்லவில்லை இருந்தும் கெட்ட
நாசகாரப் பேய்களுக்கே னிந்த பேதம்.

இறைவன்திருப் பாதத்தைத் தொழுதிடும் கைகள்
ஏந்துவதோ கொலைக்கருவி; இறைவன் புனித
மறையோதும் நாவினிலே நஞ்செ தற்கு
மானுடத்தின் மாண்பதனைக் கொல்வ தற்கா!
இரைதேடும் கழுகைப்போல் இரக்க மின்றி
எளியோரை வதைக்கின்றீர்; பாழாய்ப் போன
முறைகெட்ட கொள்கைக்காய் இயற்கை கொண்ட
மூலத்தை அழிக்கின்றீர் முறையா சொல்வீர். 

தீவிரவா தப்போக்கால் பைத்தியம் பிடித்தோர்
தெளிவடைய வையத்தில் வைத்தியம் இல்லை
ஈவிரக்க மில்லாதார் நெஞ்சம் தன்னில்
இறையருளும் நிச்சயமாய் சுரப்ப தில்லை
தீவினையில் உழன்றோர்கள் எவரும் உலகில்
சிறப்போடு வாழ்ந்ததாக வரலா ரில்லை
பாவிகளை இறைவனவன் இரட்சித் ததாக
பாரிலுள்ள எம்மதமும் சொல்ல வில்லை.

மதமென்றும் இனமென்றும் சமய மென்றும்
மறையென்றும் குறைதீர்க்கும் சடங்குக ளென்றும்
நிதமிங்கு மாந்தரிடை நிந்தனை வளர்த்தே
நீக்கமற நிறைந்திருக்கும் இறையின் புகழை
வதம்செய்யும் மனிதர்களே ஒருசொல் கேளீர்
மதவாதப் போதனையின் நோக்க மெல்லாம்
அதம்செய்தே ஆண்டவனை அடைய அல்ல
அறம்செய்தே மானுடத்தைக் காப்ப தற்கே.
கொடிமலர்


தொப்புள் கொடியோடிணைந்து
ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிறவிகள்
என் அம்மாவும் நானும்.
அனைத்துலக அகதிகள்


குரங்கைப்போல் மரக்கிளையில் வாழ்ந்தோ ருக்கும்
குகைகளிலே குடித்தனம்தான் செய்தோ ருக்கும்
அரைதனிலே இலையுடுத்தி அரைகுறை யாக
அம்மணத்தை மறைத்துலகில் திரிந்தோ ருக்கும்
வரைமுறையே இல்லாது விலங்கைப் போலே
வாழ்ந்துலகில் வழித்தோன்றல் தந்தோ ருக்கும்
வரலாற்றுக் குறிப்போடு வளநா டுண்டு
வருங்காலச் சந்ததிக்கு எதிர்கா லமுண்டு.

ஐக்கியநாட் டுச்சபையில் அவருக் கெல்லாம்
அங்கீகா ரம்உண்டு ஆசன முண்டு
எக்கணமும் அவரினத்திற் கூறு நேர்ந்தால்
ஏனென்று கேட்பதற்கு நாதி யுண்டு
அகங்குளிர அவரின்தாய் மொழியை நாட்டில்
அரியணையில் அமர்த்திவழி பாடு செய்ய
இகமதிலே எத்தடையும் அவருக் கில்லை
ஏந்தியதாய் மணிக்கொடியே அவரின் எல்லை.

ஞாலத்தின் முதல்உயிராய் நலமே தோன்றி
நாகரிகம் படைத்தோனாய் வையம் தன்னில்
கால்பதித்தான் கலைபடைத்தான் என்ப தற்கு
கல்தோன்றி மண்தோன்றா காலம் தோன்றி
ஆல்போன்று விரிந்ததமிழ்க் குடியே என்னும்
ஆய்வாளர் கூற்றிற்கு அர்த்தம்; ஆனால்
வாலறிவர் போற்றியஇத் தமிழ னுக்கு
வையத்தில் நாடில்லை என்னே விந்தை..!

தாய்நாடு என்றொன்று இருந்தி ருந்தால்
தரணியெலாம் தரித்திரனாய் வதைபடு வானா..?
சிறுபான்மை மக்களென நாடுகள் தோறும்
சீரழிந்து சிறப்பிழந்து உதைபடு வானா..?
வாயில்லாப் பூச்சிகளாய் வாழ்நா ளெல்லாம்
வற்றாமல் உழைத்துப்பிறர் உயர்வுக் காக
தேய்ந்ததுதான் மிச்சம்பிறர் இவனின் வாழ்வை
சீர்செய்தார் என்பதெல்லாம் சுத்தப் பொய்யே.

அரைவயிற்றுக் கஞ்சிக்குப் பிழைப்பைத் தேடி
அயல்நாடு சென்றாலும் அங்கே யும்தன்
புரையோடிய புண்ணான சாதி தன்னை
புதுப்பித்துப் போற்றுகின்ற புத்தி யால்தான்
சிறைவாழ்க்கை வாழ்கின்றார் என்னி னத்தார்
சிதைந்தஇன மாகைந்த நானி லத்தில்
கறையான களங்கத்தை கொள்கை யென்றே
கடைபிடித்த தால்வீழ்ந்தார் உண்மை யன்றோ..!

உலகப்பொது மறையென்று புவியோர் போற்றும்
ஒப்பிலாத தமிழ்மறையாம் குறள்நெறி நின்று
தளராத உறுதியுடன் தமிழ்நிலம் காத்து
தமிழினத்தைப் பிளக்கின்ற சாதி யென்னும்
குலநாசச் சதிதன்னை முறிய டித்து
குற்றமிலாத் தலைமையிலே தமிழி னத்தின்
நலன்நாடி ஒருங்கூடி உழைத்தி ருந்தால்
நானிலத்தில் மூத்தகுடி வென்றி ருக்கும்.

Tuesday, March 8, 2011

பெருங்காயம்


உழைத்துத் தேய்ந்த தமிழர்களேஊர்
உலகுக்கு உழைத்த தோழர்களே
களைத்து இளைத்து காய்ந்ததனால்தோல்
கருத்துப் போன மனிதர்களே.

தோட்டத்தில் நம்மின வனவாசம்அது
தொல்லைகள் நிறைந்த சிறைவாசம்
ஊட்டமில் லாசமு தாயமாக நம்மை
உருக்குலைத்த சதிநாசம்.

உள்ளத்தில் சிறிதும் கள்ளமில்லைஉன்
உழைப்பினில் துளியும் வஞ்சமில்லை
எல்லாத் திறமையும் இருந்தும் நீஇங்கு
எந்தத் துறையிலும் உயரவில்லை.

தொலைநோக் கில்லா நிகழ்காலம்உன்
தோல்விக்கு அதுவே நதிமூலம்
பிழைதனைக் கழிதலுன் நிலையானால்இங்கு
பிறந்திடும் உனக்கினிப் பொற்காலம்.

வறுமையே வாழ்க்கை என்றானால்வெறும்
வாய்ச்சவ டாலே விதியானால்
இருபது இருபதில் சமுதாயம்அது
கடலில் கரைத்த பெருங்காயம்.
துவா உன் பண்பாடு………….?


தமிழன் ஒருவன் செத்துக் கிடக்கிறான்
தாலி அறுத்தவள் நொந்து தவிக்கிறாள்
     அங்கு எதற்கடா சூதாட்டம்
      தின்னும் தீனிக்கேன் போராட்டம்.

உன்னவன் பிணமாய் ஓய்ந்து கிடக்கிறான்
உடன்பிறந்தவன் அழுது துடிக்கிறான்
       உற்றவன் வைப்பது ஒப்பாரி
        உனக்கேன் அங்கு கச்சேரி.

இனத்தைச் சேர்ந்தவன் இறந்து கிடக்கிறான்
இறந்தவன் மக்கள் இடிந்து கிடக்கிறார்
         ஏனங்கு உனக்குக் கும்மாளம்
          எடுத்ததற் கெல்லாம் நோப்பாளம்

நம்மவன் வீட்டில் இழவு விழுந்தது
அன்னவன் குடும்பம் அழுது புலம்புது
           அங்குமா உனக்கு அரசியல்
            அடித்துக் கொள்ளும் உரசியல்

மலேசியத் தமிழன் மாண்டு கிடக்கிறான்
மற்ற இனத்தவன் மரியாதை செய்கிறான்
           மதுவுடன் கூடுமுன் கூட்டம்
            மாண்பா அங்குச் சீட்டாட்டம்

அஞ்சலி செலுத்த வேண்டிய வேளையில்
ஐந்தடியில் கூடி அட்டூழியம் செய்கிறாய்
             என்னே உனது அறிவீனம்
              இல்லையா உனக்கு தன்மானம்.
எயிட்ஸ் கிருமிகள்


ஒன்றே குலமென மேடையில் பாடுவான்
ஊருக் குள்ளேதன் சாதியைத் தேடுவான்
நண்டைப் போலநம் உயர்வைத் தடுப்பான்
நாயைப் போலதன் இனத்தைக் கடிப்பான்

இவனைப் போன்ற இழியோ ரால்தான்
ஏற்ற மிகுந்தநம் இனமே சாய்ந்தது.

பொட்டல் நிலமாய் போன நம்மின
பொலிவை மீட்டிட திட்டம் தீட்டினால்
குட்டிச் சுவரென குறுக்கே நிற்பான்
கூடி யிருந்தே குழியும் பறிப்பான்

இவன்தான் இனத்தின் சாபக் கேடு
ஈனப் பிறவி இவனைச் சாடு.

உடல்பொரு ளாவி அனைத்தும் இந்த
ஊன முற்ற இனத்துக் கென்றே
வெட்டிப் பயலிவன் பேசி நடிப்பான்
வெகுவாய் முதலைக் கண்ணீர் வடிப்பான்.

போக்கிரிப் பயலிவன் போக்கை முறித்து
பொல்லாப் பினை,நீ தடுத்து நிறுத்து.

காரண மின்றிக் கைகளைத் தட்டும்
கூறு கெட்டக் கூட்டம் சேர்ந்தால்
சோரம் போயினும் சொத்து சேர்ப்பான்
சோதரன் தலையிலும் மிளகாய் அரைப்பான்.

தன்இனத் தானை சூழ்ச்சியில் வீழ்த்துவான்
தன்னலம் காக்க தாயையும் தூற்றுவான்.

குட்டுப் பட்டுக் குட்டுப் பட்டே
குறுகிப் போன கூனல் பிறவியாய்
இட்டவன் காலில் வீழ்ந்து கிடப்பான்
இறந்தும் பிணமாய் எழுந்து நடப்பான்.

எத்தனை தலைமுறை எல்லாம் மறப்பது
இறந்து இறந்து தினமும் பிறப்பது.
அன்னை திரேசா


மனித நேயத்திற்கே மதம் என்பதேயன்றி
வேறொன்றும் அறியேன் பரமபிதாவே
என்று ஒலித்த
மாதா கோயில் மணியோசை

வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம் வாடி
அவற்றைத் தேற்றித் தேற்றியே
தேய்ந்து போன தெய்வம்.

மறுகன்னத்தில் அறைந்தும் திருப்தியுறாமல்
தொடர்ந்து முதுகில் குத்தியவர்களையும்
மன்னித்து நேசித்த மனித தேவதை.

அட்சய பாத்திரமில்லாமலேயே
அதிசயம் நிகழ்த்திய
மற்றொரு மணிமேகலை.

அன்பைத் தவிர
மண்ணுலகில் மற்றவற்றையெல்லாம்
மனிதகுல தொண்டிற்காக துறந்த
தூய பெண் துறவி.

வீதிச் சிலுவைகளில்
நாதியற்றுக் கிடந்த
சின்னச் சின்ன யேசுக்களின் நாசிகளில்
தன் உயிர்மூச்சை ஊதிவிட்டு
உயித்தெழச் செய்த
கருணைமிகுந்த கன்னித்தாய்

மனிதகுல ஒற்றுமைக்காக
ஒரு மந்திரம் சொன்ன
கனியன் பூங்குன்றனின்
கனிவான மனிதநேயக் கொள்கையை
கல்லடிகளையும் சொல்லடிகளையும் மீறி
கல்கத்தா வீதிகளில் கடைகள் விரித்து
விற்றுத் தீர்த்த வள்ளலாரின் பேத்தி.

கடமைக்காக. அழுதுவடியும்
அர்ப்பணிப்புக்குப் பெயர் போன
மெழுகுவர்த்தியும் துதித்து வணங்கும்
தூங்கா மணிவிளக்கு.
சீச்சீ..........இந்தப் பழம் புளிக்கும்........!


இனத்திற்கு சேவைசெய்ய இயக்கமொன்று அமைப்பதும்
கனமான பதவிக்காக அதன்கழுத்தை நெரிப்பதும்
பதவிமோகம் பிடித்தோருக்குப் பழகிப் போச்சுண்ணே – அதனால்
பொதுத்தொண்டுன்னா ஊர்வம்புன்னு பயமாய் போச்சுண்ணே

தாய்மொழியை எதிர்ப்பதும் சமயம்பார்த்து துதிப்பதும்
ஆய்வுசெய்வ தாகக்கூறி அதற்குவேட்டு வைப்பதும்
வாய்ச்சவடால் வீரர்களுக்கு வழக்க மாச்சுண்ணே – அதனால்
பொதுத்தொண்டே வேணாமுன்னு வெறுத்துப் போச்சுண்ணே.

விருதுகளே குறிக்கோளாய் வேடமிட்டு அலைவதும்
வறுமையான நம்மினத்தை பெயர்போட விற்பதும்
எங்கும் எதிலும் இந்தநோயே பெருகிப் போச்சுண்ணே – அதனால்
பொதுத்தொண்டே வேணாமுன்னு அலுத்துப் போச்சுண்ணே.

சமுதாய ஒற்றுமைக்கு சங்கமொன்று கூட்டுவார்
சாதியங்கு ஒளிந்திருக்க சந்துபொந்து காட்டுவார்
அமுதத்துல நஞ்சுகலந்து நாசமாச்சுண்ணே – அதனால்
அய்யோ சாமி ஆளவுட்டா போதுன்னாச்சிண்ணே.

பணபலத்தைப் பெருக்குதற்கு இனநலத்தை விற்கின்ற
குணங்கெட்டுப் போனவர்கள் கொள்கைபற்றி பேசுவதால்
பொசுங்கி உள்ளம் பத்திகிட்டு எரிஞ்சிப் போச்சுண்ணே – அதனால்
பொதுத்தொண்டே வேணாமுன்னு சலிச்சிப் போச்சுண்ணே.

Tuesday, March 1, 2011

இடுகாடு

ஆறடி மனித விதைகளை
சடங்கு சம்பிரதாயத்தோடு புதைத்தும்
இது விளையாத பூமி.
பேச்சுரிமை


கா…………….கா…………..கா……………..
காக்கையின் கோரிக்கைகள்
சுதந்திரமான குரலில்.
தனிமனித வழிபாடு

கட்டைவிரலை காணிக்கையாக்குகிறான்
ஏகலைவன்
கற்றுத்தராத வித்தைக்காக!
மானபங்கம்

ராமனின் கால்பட்டு
மீண்டும் எழுந்தாள் அகலிகை
இன்றுவரை இழிவுபட.....!
வீடுபேறு

ஆஹா……………..என் கருவறை
பத்திரமாய் வந்து சேர்ந்தேன்
என் கல்லறை.
றப்புப் பத்திரம்

பிணப்பெட்டியின் மேல்
மலர்ச்செண்டு
சிறுபான்மையினரின் குடியுரிமை.
நானும் என் நகல்களும்

சாம பேத தான தண்டத்திற்கேற்றவாறு
‘’நான்’’ எனும் என்னை
நானே செதுக்கிக்கொள்ளும்
அதிசய சிற்பி நான்.

என் தாயின் கருவறையில்
இருந்தது நானில்லை
அது என் நிஜம்.

அனுதினமும் மறவாமல்
நான் சிரசாசனம் செய்கிறேன்
என் கால்கள்
திருடுபோகாமல் இருக்கின்றனவா
என்பதை தெரிந்து கொள்வதற்காக.

ஒவ்வொரு விடியலிலும்
என் பிணம் விழித்தெழும்.