Tuesday, March 1, 2011

சிகிரெட் பு()கை

சமயம் வாய்க்கும் போதெல்லாம்
என் பேனாவின் இருக்கையில் அமர்ந்துகொண்டு
என் சிந்தனையைச் சீராக்குவதாகக் கூறி
என்னைச் சிதைத்துக் கொண்டிருக்கிறாய்

என் விரல்களில்
நீ படியவிட்டிருக்கும் காவி நிறம்
அது நீ எனக்கு எழுதும்
மரண சாத்திரம்.

இந்த வேள்வி
சுடுகாட்டிலே என் உடல்
நடத்தப்போகும் தீக்குளிப்பிற்கு
ஒரு ஒத்திகையோ……!

இந்தத் துப்பாக்கி
விசையை முடுக்கியவுடன்
என்னையே சுடுகிறது.

இந்த ஊத்குழல்
என் வாயை
அடுப்பங்கரை எனக் கருதி
அடிக்கடி அனல்மூட்டிக் கொண்டிருக்கிறது.

இந்த துளைகளில்லாத புல்லாங்குழல்
என் நுண்ணிய நுரையிரலுக்குள்
புகைமேகம் மூட்டி
ஒருதலை ராகமாக
ஒரு பகைராகம் மீட்டிக்கொண்டிருக்கிறது.

புகை கிளம்பும் அளவிற்கு
இந்த ஊதியை ஊதி ஊதி
உறுதிப்படுத்துகிறேன்
என் பரலோகப் பயணச்சீட்டை
பத்திரப் படுத்தியிருக்கும்
காலனின் கவனத்திற்காக.

என் விரலிடுக்கில் இருக்கும்
இந்த வெள்ளைக்கொடி
சமாதானத்திற்கு பதில்
போர்ப் பிரகடனம் செய்கிறது.

காச நோயெனும்
கள்ளக் காதலனோடு
சல்லாபம் செய்ய
இந்த வெள்ளைக்காரி
என்னையே வேகவைத்துக் கொண்டிருக்கிறாள்.

நஞ்சென்று தெரிந்தும்
என் நெஞ்சுக் கூட்டிற்குள்
நான் சேமித்து வைத்திருக்கும்
உன் நிக்கோடின் எனும் கழிவு
எனக்கு நானே தேடிக்கொள்ளும் அழிவு.

ஆலகால விஷமென்று அறிந்தும்
சந்தையில்………………………………….
அழகழகான விளம்பரங்கள்.

ஆகவே……………………
சில்லரையை கரியாக்கி
கல்லறைக்கு வழிகேட்கும்
அன்பும் அனுதாபமுமிக்க
அன்பர்கள் அனைவருக்கும்
அறிவிப்பது என்னவென்றால்
புகை பிடிக்கும் பழக்கம்
புதை குழிக்கு அனுப்பும்
வகை வகையாய் நோய்கள்
வந்து குடியிருக்கும்
பகையெனெத் தெரிந்தும்
பற்ற வைக்கலாமா…..
புகை வடிவில் உன்னுள்
புற்று வைக்குமாமே…….!

No comments:

Post a Comment