Sunday, July 19, 2015

தோட்டப்புற ஆயாக்கொட்டகைகள்

வானளாவிய கன்னிக் காடுகளே நாடாக
மலாயா.
அதற்கு மலைநாடு என்று
மற்றொரு பெயருண்டு.
சொர்க்கத்தின் வாசலான அதற்கு
சுவர்ண பூமியென்ற
சுகமான பெயரும் உண்டு.

தங்களின் துரைத்தன வாழ்வுக்கு
ஆப்ரிக்க ஆசிய நிலக்கோடுகளை
தங்களின் எல்லைக் கோடுகளாக
மாற்றிக்கொண்ட வெள்ளையர்களின்
காலாடித்தனமான காலணித்துவ ஆட்சி
மலாயாவில்
காலூன்றியிருந்த காலம்

ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தி ஏழாம் ஆண்டு
மலாயாவிற்கான நிரந்திர
வசந்த காலத்தை தோளில் சுமந்தபடி
ஒரு தேவ தூதனைப்போல்
இம்மண்ணில் வந்திறங்கினான்.
ஹென்றி நிக்கலஸ் ரிட்லி எனும்
ஆங்கிலேய தாவரவியல் நிபுணன்.

அவன்
இரப்பரின் எதிர்கால ஏற்றத்தை
அறிந்து வைத்திருந்த
தீர்க்கதரிசி.

அதன் அருமை பெருமைகளை
அகிலத்துக்குச் சொன்ன
தத்துவஞானி.

இந்த “ கித்தா “ மரத்துச் சித்தன்
பிரேசில் நாட்டின் அமேசான் காடுகளில்
பதுங்கி வாழ்ந்திருந்த
ஒன்பது இரப்பர் விதை வாமனர்களை
தன்னுடன் கடத்தி வந்திருந்தான்..

அவர்களை
கோலகங்சாரின் ராஜ வீதியில்
குடிவைத்தான்.

அந்த ஒன்பது வாமனர்களே
இந்நாட்டின் ரப்பர் உற்பத்திக்கு
ரிஷிமூலமானார்கள்.

ரிட்லியின் கருவில் உருவான
அந்த மந்திர வித்துக்களின் வழித்தோன்றல்கள்
தமிழர்களின் அயராத உழைப்பாலும்
தங்களின் பிறப்புரிமையான மனித உரிமைகளை
தாரைவார்த்த அர்ப்பணிப்பாலும்
நாடெங்கும் இலட்சக்கணக்கில்
விஸ்வரூபம் எடுத்து நின்றன.

ஓங்கி வளர்ந்திருந்த
மலாயாவின் பெருங்காடுகள்
நாட்டிற்கு பெருஞ் செல்வத்தை
வாரி வழங்கிய
ரப்பர் தோட்டக் காடுகளாக மாறின.
நாட்டில் கரைபுரண்டோடிய
பொருளாதார காட்டாற்று வெள்ளத்திற்கு
இந்த இரப்பர் மரங்களே
நதிமூலம் ஆயின.


சின்னச் சின்ன குன்றுகளில்
நந்தவனத்தோடு
வெள்ளைக்கார துரையின் குடும்பத்திற்கு
அழகிய பங்களாக்கள் உருவாகியிருந்த வேளையில்
தோட்டப் பாட்டாளிகளின்
குழந்தைகள் காப்பகமெனும் பெயரில்
கூலி லயங்களுக்கு மத்தியில்
மாட்டுக் கொட்டகைகள்
கட்டியிருந்தார்கள்.  


இந்தக் கொட்டகைகள்
தோட்டப்புற கூலிகளுக்கு பிறந்துவிட்ட
குற்றத்திற்காக
இரப்பர் தோட்டப்புறங்கள்தோரும் தோற்றுவிக்கப்பட்ட
குழந்தைகளுக்கான
சின்னச் சின்ன சிறைச்சாலைகள்.

“ சொக்கரா “ என்றழைக்கப்பட்ட
எதிர்கால குழந்தைத் தொழிலாளர்களுக்கான
அறுவடைக்கு
காலனித்துவ காலாடிகளும்
அவர்களுக்குப்பின்
உள்நாட்டுக் கில்லாடிகளும்
தோட்டங்கள் தோறும் தோற்றுவித்த
நாற்(ற)றுப் பண்ணைகள்.

எதிர்காலக் கூலிகளுக்கான விதைகள்
இந்தப் பாத்திகளில்தான்
மிகப் பத்திரமாகவும்
நாஜித்தன உத்திகளோடும்
பதியன் போடப்பட்டது.

இந்த முடைநாற்ற முழையில்தான்
ஒரு இனத்தின் எதிர்காலம்
முளையிலேயே கிள்ளியெறியப்பட்டு
முடமாக்கப்பட்டது.

இந்த கூட்டுக்குள் புகுந்த “ லார்வாக்கள் “
பட்டாம்பூச்சிகளாக பரிணாம வளர்ச்சியடைந்து
சிறகுகளோடு சுதந்திரமாகப் பறப்பதற்கு பதில்
இந்த தோட்டப்புற நரகக் குழியில்
குறுகிப் போயின.

ஏய்க்கப்பட்ட ஏழைகளாகவும்
உரிமைகளை இழந்த கோழைகளாகவும்
வாழ்வதற்கான அடிப்படைப் பாடங்களை
இந்த “ நர்சரியில் “ தான்
பச்சைப் பாலகர்களுக்கு பயிற்றுவித்தார்கள்.

மலமூத்திர நாற்றத்தில்
கொசுக்களுக்கும் ஈக்களுக்கும் மத்தியில்
பிராண வாயுவுக்கு பதில்
கரியமிலவாயுவை சுவாசித்து வாழ்ந்த
அதிசயப் பிறவிகள் இவர்கள்.

இரப்பர் தோட்ட முதலாளிகளின்
பந்தாவிற்கும் பகட்டிற்குமான
பட்டாடைகள் நெய்வதற்கான பட்டுப்புழுக்களை
இங்கேதான்
தொட்டில்கட்டி தொங்க விட்டிருந்தார்கள்.

ஊட்டச்சத்து இல்லாத உணவில்
உயிர்வாழ்வது எப்படியென்றும்
சுத்திகரிக்கப்படாத “ அல்லூர் “ தண்ணீரை
அள்ளிக் குடிப்பது எப்படி என்றும்
மலக்கூடமில்லாமல் எப்படி
மலங்கழிப்பது எப்படியென்றும்
இங்கேதான் அவர்களுக்கு பயிற்சியளித்தார்கள்.

ஒவ்வொரு தரித்திர தீபாவளியன்றும்
இந்த நாற்றக்கொட்டகையில்
அந்த ஏழைக் குழந்தைகள்
அரை நிர்வாணத்துடன்
கையேந்தி நிற்பார்கள்
அங்கே
தேவலோகத்து காந்தர்வ புருஷராக துரையும்
அவரின் தேவலோக அப்சரஸாக மேம்மும்
ஆள் அம்பு சேனைகளாக
கிராணியும் கங்காணிகளும் புடைசூழ
பிரசன்னமாகி
ஏந்திய அவர்களின் கைகளில்
பத்து காசு வீதம் பிச்சையிடுவார்கள்..
அன்று ஏந்திய அந்த கைகளிலிருந்துதான்
எங்களின் இழந்த உரிமைகளில் ஒன்றான
கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத
தென்னிந்திய தொழிலாளர் நிதியை
பறிகொடுத்தோம்.

அதே ஏந்திய கைகளை
இன்றும் ஏந்திக் கொண்டிருக்கிறோம்
ஐந்தாண்டுக் கொருமுறை
கொண்டாடப்படும் தேர்தல் திருவிழாவின்போது
எங்களின் அரசியல்வாதிகள் தரும்
ஆறு கிலோ அரிசிக்கும்

அரை டஜன் மேக்கி மீயிர்கும்.

Saturday, July 18, 2015

வேர்

பூமியில் வதியும் எல்லா உயிர்களும்
இன்புற்றிருக்க வேண்டுமென
ஆசீர்வதிக்கும் ஒற்றைக்கையாக
என்மேல் முளைத்த என் தேவதாரு
நிமிர்ந்து நிற்க
என் பூமித்தாயின் அடிவயிற்றைப் பற்றிய
விரல்களாக நான்.

மண்ணில் புதைந்த
கூர்ம அவதாரமாய்
குப்புற கவிழ்ந்தபடி
நான் கொண்ட ஜீவ சமாதியின்
முடிவில்லா தவத்தின் பயனாக
என் முதுகில் முளைத்தெழுந்த
விருட்சமாக என் வம்சம்.
என் தாழ்வே அதன் வாழ்வு
என் ஈர சமாதியே
அதன் கோபுர வாசல்.

ஐம்பூதங்களின் ஆசியோடு
இயற்கையன்னையின் அங்கீகாரத்தின்
ராஜமுத்திரை நான்.
.
பூவாக பிஞ்சாக
காயாக கனியாக
என் முகவரிகள்.

விதை எனும் சவப்பெட்டியிலிருந்து
உயிர்த்தெழுந்த பிணம் நான்.

மண் சமாதிதான் என் கருவறை.
என் ஜனனமும் மரணமும் அங்குதான்
ஆனாலும் நான்
இறந்தாலும் உயிர்த்தெழும்
அழியா வரம் பெற்றவன்
என் எல்லா கனிகளின்
இருண்ட விதைகளிளெல்லாம்
விழித்திருப்பேன்
கரிய வானில் ஒளிரும்
நட்சத்திரங்களைப் போல.

என் சமாதியையே ஞான பீடமாக்கி
அதன் மீது சித்தார்த்தன் அமர்ந்தான்
சித்தார்த்தன்
பகவான் புத்தன் ஆனான்
நான் புனிதனானேன்.

பூமிச் சமுத்திரத்தில் பதுங்கியிருக்கும்
அமிர்தத்தை கடைந்தெடுக்கும்
மந்தாரமலையாக
என் ஆணீவேர்.
வாசுகியாக நான்

பச்சையம் போர்த்திய
சுயநலப் பச்சோந்திகளாய்
என் கிளைகளில் வந்தமரும்
புல்லுருவிகள் போல
என்னை சூழ்ந்து களியாட்டம் போடும்
ரம்பைகளாய் ஊர்வசிகளாய்
என்னை இரையாக்கக் காத்திருக்கும்
கரையான்கள்.
அந்த நிர்வாணக் கவர்ச்சியில் மதிமயங்கி
நான் அவற்றை ஆரத்தழுவினால்
என் தவம் கலையும்
இதுநாள் வரை நான் கட்டி எழுப்பிய
என் சாம்ராஜ்ஜியம்
எரிந்து சாம்பலாகும்.


Saturday, December 15, 2012

சங்கத் தமிழன்


                             சங்கத் தமிழன்
           --------------------------

நாடற்ற தமிழனுக்கு நம்பிக்கை ஊட்டுதற்கு
நாடெங்கும் சங்கங்கள் உண்டு – அதில்
நாடகக் காட்சியில் நாட்டியக் காரிபோல்
நாட்டியம் ஆடிடும் தொண்டு.

சாதிக் கொருசங்கம் சாதிக்க அமைத்திட்டு
சார்பவர் அதனிலோர் அங்கம் – அது
பாதிக்கும் என்றுநாம் பாங்குடன் சொன்னாலே
பண்ணுவார் காண் – மானபங்கம்.

மொழிஇனம் காத்திட முத்தமிழ் தொண்டர்கள்
முடுக்குவர் தனிமன்ற மொன்று – பின்
பலிகடா போலவே பழிகொண்ட குண்டராய்
பலியிடுவர் தமிழை கொன்று.

தடியெடுத்  தவனெல்லாம் தண்டலாய் ஆனதால்
தமிழினத் தராத்தரம் தேய்ந்தது – பொய்யாக
நடிப்பவ னெல்லாம் நாயகன் ஆனதால்
தறிகெட்டுத் தமிழினமே சாய்ந்தது.

நாற்காலிக் காகவே நடைபெறும் போரிலே
நாற்;காலி யாவான் நம்தோழன் – பதவிப்
போராட்ட முடிவிலே கிழிந்த இயக்கத்தை
மூடிவைக்க வருவான் காலன்.

மொழிவளம் பொதுநலம் காப்பதற் காகவே
முளைத்தது நம்மியக்கம் என்பார் – பின்
பலிகிடா போலவே பதவிக்கும் பட்டத்திற்கும்
பலியிட்டு அதனைத் தின்பார்.

அழகான பொன்னாடை ஆளுயர மலர்மாலை
ஆள்அம்பு சேனையென அங்கங்கள் – நாட்டில்
பாழ்பட்டுக் கொண்டிருக்கும் சமுதாய வீதியிலே
படுகுழிக ளாயிந்த சங்கங்கள்

முதல்இடை கடையென முச்சங்கம் கண்டவன்
மொழிஇனம் காத்திட்டான் அன்று – வெறும்
பதவியைப் பிடித்திட பலசங்கம் கண்டிங்கு
பழிதனை ஏற்கிறான் இன்று..

Thursday, November 29, 2012

கண்ணீரைப் பன்னீராய் மாற்றுவோம்


கண்ணீரைப் பன்னீராய் மாற்றுவோம்.
தோற்றுவிட்டோம் என்பதுவும் உண்மைதான்அதற்காக
துயர்கொண்டு துவண்டுமனம் வெம்பலாமா
போற்றும்படி நம்நிலைமை இல்லைதான்அதற்காக
தூற்றும்படி தரம்தாழ்ந்து போகலாமா
சாலைகள் சமைத்தோம் வீதிகள் அமைத்தோம்
விபத்துக்களே நமக்கு விதியாயினஇனி
பாலையில் விதைக்கும் பகுத்தறிவில்லா
பழக்கத்தை வழக்கத்தை புதைப்போம்.

இருள்சூழ்ந்த எதிர்காலம் உண்மைதான்அதற்காக
ஈசலா,நாம் இழிவாகச் சாவதற்கு
வறுமைநமை வாட்டுவதும் உண்மைதான்அதற்காக
மண்புழுவா வெந்தணலில் நோவதற்கு
காடுகள் திருத்தி தோட்டங்கள் செய்தோம்
கேடுகள்தான் நம்மைவந்து சேர்ந்தனஇன
சாடுவோம் நம்மை வீழ்த்திய விசைகளை
தேடுவோம் வெற்றியின் திசைகளை.

நாதியில்லை நமதுகுறை கேட்பதற்குஅதற்காக
நலம்கெட்டு தெருவோரம் வாடலாமா
நீதியில்லை நமதுநிலை மாற்றுதற்குஅதற்காக
நெறிதவறி முறைகெட்டு வாழலாமா
காலைமாலை இரவுபகல் உழைத்தும் நல்ல
வேலைவந்து சேராது களைத்தோம்இனி
நாளை நமதெனும் கனவை கலைத்து
இன்றெ நமதெனப் பாடுவோம்.

வாழ்க்கையிலே வளமில்லை உண்மைதான்அதற்காக
வழிமாறி தடம்புரண்டு வீழலாமா
ஏழ்மையிலே உழல்கின்றோம் உண்மைதான்அதற்காக
ஊழ்வினைதான் எனநம்பி ஓயலாமா
தன்னலம் துறந்து தளரா துழைத்தோம்
இன்னல்களே நம்மைவந்து சேர்ந்தனஇனி
கொண்டதே கோலமெனும் கோணலை அழிப்போம்
கண்ணீரைப் பன்னீராய் மாற்றுவோம்.



Wednesday, November 28, 2012

தமிழ்த்தாயின் தங்கை


                  தமிழ்த்தாயின் தங்கை

அறிவைப் பெருக்கிட
அன்பை வளர்த்திட
ஔவையின் பாடலப் பாரு – அது
அள்ளித்தரும் பல நூறு – பல
ஐயம்தரும் புதிர்
ஆய்ந்து தெளிந்திட
அருந்தமிழ் தந்த நற்பேறு – அந்த
அன்னையல்லாமல் வேறு யாரு !

கூனிக் குறுகிய
கோழைகள் மத்தியில்
கோபுர மாய்அவர் நின்றார் – மனக்
கூனல் நிமிர்த்தியே வெண்றார் – பலர்
கோடிப் பணத்தினில்
கூடிக் களிக்கையில்
கூழுக்கு மட்டுமே வாழ்ந்தார் – அவர்
கோன்வளர் கொள்அறம் போந்தார்.

சிந்தையை மூடிய
சிந்தியா மாந்தரை
சிந்திக்க செய்யுளைத் தந்தார் – அவர்
திங்களாய் தமிழ்மனம் நின்றார் _ இனம்
ஆடிக் களித்திட
ஆண்டு செழித்திட
ஔவையாய் அவனியில் வந்தார் – பல
ஆயிரம் தத்துவம் ஈந்தார் !

(சாதி இரண்டொழிய வேறில்லை எனும் ஔவையின் செய்யுளை
சாதி வெறியர்கள் கவனிக்கவும்)

தீ


                                             தீ
                 ----

சஞ்சி காலத்தில் அஞ்சி வாழ்ந்த
சஞ்சலம் இன்றும் தொடர்கிறது
நெஞ்சில் வீழ்ந்த பஞ்சத் தீயோ
நிதமும் பற்றி எரிகிறது.

துஞ்சி எழுகிற மஞ்சம் நிலையாய்
துயரச் சந்ததி பெருக்கிறது
பிஞ்சில் பழுத்தே எங்கள் சந்ததி
பஞ்சப் பராரியாய் மடிகிறது

எஞ்சி யிருந்த கொஞ்சப் பெருமையும்
எரிசா ராயத்தில் அழிகிறது
இஞ்சியைத் தின்ற குரங்காய் நம்கதை
இந்த நாட்டில் தொடர்கிறது.

வஞ்சகம் என்று தெரிந்தே சதியில்
வழுக்கி வழுக்கி விழுகிறது
செஞ்சோற் றுக்கடன் தீர்ப்பதைப் போல
கஞ்சியைப் கெஞ்சிப் பெறுகிறது.

மறுபிறவி


                                மறுபிறவி
             -----------------

ஒவ்வொரு விடியலிலும்
விழித்தெழுகிறது
என் பிணம்.