Saturday, December 15, 2012

சங்கத் தமிழன்


                             சங்கத் தமிழன்
           --------------------------

நாடற்ற தமிழனுக்கு நம்பிக்கை ஊட்டுதற்கு
நாடெங்கும் சங்கங்கள் உண்டு – அதில்
நாடகக் காட்சியில் நாட்டியக் காரிபோல்
நாட்டியம் ஆடிடும் தொண்டு.

சாதிக் கொருசங்கம் சாதிக்க அமைத்திட்டு
சார்பவர் அதனிலோர் அங்கம் – அது
பாதிக்கும் என்றுநாம் பாங்குடன் சொன்னாலே
பண்ணுவார் காண் – மானபங்கம்.

மொழிஇனம் காத்திட முத்தமிழ் தொண்டர்கள்
முடுக்குவர் தனிமன்ற மொன்று – பின்
பலிகடா போலவே பழிகொண்ட குண்டராய்
பலியிடுவர் தமிழை கொன்று.

தடியெடுத்  தவனெல்லாம் தண்டலாய் ஆனதால்
தமிழினத் தராத்தரம் தேய்ந்தது – பொய்யாக
நடிப்பவ னெல்லாம் நாயகன் ஆனதால்
தறிகெட்டுத் தமிழினமே சாய்ந்தது.

நாற்காலிக் காகவே நடைபெறும் போரிலே
நாற்;காலி யாவான் நம்தோழன் – பதவிப்
போராட்ட முடிவிலே கிழிந்த இயக்கத்தை
மூடிவைக்க வருவான் காலன்.

மொழிவளம் பொதுநலம் காப்பதற் காகவே
முளைத்தது நம்மியக்கம் என்பார் – பின்
பலிகிடா போலவே பதவிக்கும் பட்டத்திற்கும்
பலியிட்டு அதனைத் தின்பார்.

அழகான பொன்னாடை ஆளுயர மலர்மாலை
ஆள்அம்பு சேனையென அங்கங்கள் – நாட்டில்
பாழ்பட்டுக் கொண்டிருக்கும் சமுதாய வீதியிலே
படுகுழிக ளாயிந்த சங்கங்கள்

முதல்இடை கடையென முச்சங்கம் கண்டவன்
மொழிஇனம் காத்திட்டான் அன்று – வெறும்
பதவியைப் பிடித்திட பலசங்கம் கண்டிங்கு
பழிதனை ஏற்கிறான் இன்று..

No comments:

Post a Comment