Sunday, October 28, 2012

E . P . F.எனும் நோவாவின் படகு.


E . P . F . எனும் நோவாவின் படகு
----------------------------------------------------------------

முதுமைக் காலம் என்பது
தேய்பிறைதான்…………!
அது ஒரு வினாக்குறி என்பதும்
உண்மைதான்……..!
ஆனாலும்………………..
அதை ஆச்சர்யக் குறியாக மாற்றும் வித்தை
உன் கையிலும் பையிலும் இருக்கிறது

இப்போதெல்லாம் நீ
பாதிப் புத்தனாகியிருப்பாய்
ஞானமடைந்தல்ல……….!
மனத்தளவில் ஊனமடைந்து.

இப்பொழுதெல்லாம்
வீட்டில் உள்ளவர்களுக்கு
கொசுத் தொல்லையை விட
உன் இருமல்
பெரும் சல்லையாக இருக்கும்.

இந்தி சினிமாவின் தாக்கத்தாலும்
அது தரும் தற்காலிக ஊக்கத்தாலும்
உன் மகன் உன்னை
என் உயிருக்கு உயிரான
‘’ தில்பர் ‘’ என்பான்
உன் சேமநிதிப் பணம் கரைந்த பிறகு
போய்விடு வெல்பர் என்பான்.

தொழிலாளர் சேமநிதிப் பணம்…………
அது உன் இறுதி காலத்திற்கான
தர்ப்பணம்
அதை காக்கத் தவறினால்
நீ ஆவாய் நடைப்பிணம்.

கல்விக்கு என்றால்
அதிலிருந்து அள்ளிக்கொடு
ஆனால்…….
வளர்ந்த உன் பிள்ளைகளின்
கேளிக்கைக்கு கெஞ்சிக் கேட்டாலும்
கிள்ளியும் கொடுக்காதே.

அந்த நிதி
உன் ஊழிக்காலத்தில்
உன்னைக் கரை சேர்க்க உதவும்
நோவாவின் படகு.

பணம் என்ற ஊன்றுகோளை
நீ பற்றியிருந்தால் மட்டுமே
சுற்றமும் உறவும் உன்னை
சுற்றி கும்மியடித்து கூத்தாடும்
நீதான் தெய்வமென தேவாரம் பாடும்.
புரிந்து கொள்.

பச்சைப் பசேலென்று
நீ பச்சையத்தோடு
தழைத்திருந்த காலத்தில்
உன்னைத் தொற்றியிருந்த
புழுக்கள் கூட
நீ இல்லாதவனாகிவிட்டால்
அந்த ஈனப் புழுக்கைகளுக்கும்
நீ பொல்லாதவனாகிவிடுவாய்.

ஒரு காலத்தில்
நீ தான் இந்த வீட்டின்
தானைத் தளபதி
இந்த குடும்பத்தை காத்த
எல்லா வல்லமையும் படைத்திருந்த
தயாநிதி
என்பதைத் தெரிந்திருந்தும்
வாசலில் ஊதியமில்லா
செக்யூரிட்டியாகவும்
உன் வாரிசுகளான
ஆசைப் பிள்ளைகள் பெற்ற
பாசக் கிள்ளைகளின்
ஆயாவாகவும் ஆகிப்போன
உன்னைப் பார்த்துக் கேட்பார்கள்
“வீட்டில் யாரும் இல்லையா..? “ என்று.
இப்படியாக
நீ இருந்தும் இல்லாதவன் என்பதை
சொல்லாமல் சொல்வார்கள்.

உன் தொழிலாளர் சேமநிதிப் பணம்
உன் அந்திம காலத்தில்
உனக்கு அடைக்கலம் கொடுக்கும்
சத்திரம்
ஆகவே…….பத்திரம்…….பத்திரம்……
உன் சேம நிதிக்கான பத்திரம்.

No comments:

Post a Comment