Wednesday, October 31, 2012

தோட்டப்புற ஆயாக்கொட்டகைகள்


தோட்டப்புற ஆயாக்கொட்டகைகள்.
--------------------------------------------------------------



இங்குதான்……………………!
அந்த சஞ்சிகாலத்திலிருந்து
இரப்பர் தோட்டங்கள்
செம்பனைத் தோட்டங்களாக
பரிணாம வளர்ச்சியடைந்த
கொஞ்சகாலத்திற்கு முன்பு வரை

பாட்டாளிகளுக்கு பிறந்துவிட்ட பாவத்திற்காக
தோட்டப்புறங்கள்தோறும் தோற்றுவிக்கப்பட்ட
குழந்தைகளுக்கான
சின்னச் சின்ன சிறைச்சாலைகள்.

எதிர்காலத் தமிழ்க் கூலிகளுக்கான விதைகள்
இந்த பாத்திகளில்தான்
மிகப் பத்திரமாகவும்
நாஜித்தன உத்திகளோடும்
பதியன் போடப்பட்டது.

இந்த முடைநாற்ற முழையில்தான்
ஒரு இனத்தின் எதிர்காலம்
முளையிலேயே கிள்ளியெறியப்பட்டு
முடமாக்கப்பட்டது.

சிலுவையில் அறையப்படாமலேயே
இந்த சின்னச் சின்ன யேசுக்கள்
சித்திரவதை செய்யப்பட்டு
செத்துச் செத்து
ஒவ்வொரு நாள் காலையிலும்
உயிர்த்தெழுந்தார்கள்.

‘’சொக்கரா’’ என்றழைக்கப் பட்ட
வருங்கால குழந்தைத் தொழிலாளர்களுக்காகவும்
எதிர்கால தோட்டப் பாட்டாளிகளுக்காகவுமான
அறுவடைக்கு
காலனித்துவ காலாடிகளும்
அவர்களுக்குப்பின்
உள்நாட்டுக் கில்லாடிகளும் தோற்றுவித்த
நாற்(ற)றுப் பண்ணைகள்.

இந்த கூட்டுக்குள் புகுந்த லார்வாக்கள்
பரிணாம வளர்ச்சியடைந்து
சிறகுகளோடு பட்டாம்பூச்சிகளாக
சுதந்திரமாக பறப்பதற்கு பதில்
கூட்டுப்புழுக்களாகவே
குறுகிப்போயின.

ஏய்க்கப்பட்ட ஏழைகளாகவும்
உரிமைகளை இழந்த கோழைகளாகவும்
வாழ்வதற்கான அடிப்படை பயிற்சிகள்
இந்த ‘நர்ஷரி’யில்தான்
பச்சைப் பாலகர்களுக்கு பயிற்றுவிக்கப் பட்டது

இரப்பர் தோட்ட முதலாளிகளின்
பகட்டிற்கும் பந்தாவிற்குமான
பட்டாடைகள் நெய்வதற்கான
பட்டுப்புழுக்களை இங்கே
தொட்டில் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள்.




Sunday, October 28, 2012

E . P . F.எனும் நோவாவின் படகு.


E . P . F . எனும் நோவாவின் படகு
----------------------------------------------------------------

முதுமைக் காலம் என்பது
தேய்பிறைதான்…………!
அது ஒரு வினாக்குறி என்பதும்
உண்மைதான்……..!
ஆனாலும்………………..
அதை ஆச்சர்யக் குறியாக மாற்றும் வித்தை
உன் கையிலும் பையிலும் இருக்கிறது

இப்போதெல்லாம் நீ
பாதிப் புத்தனாகியிருப்பாய்
ஞானமடைந்தல்ல……….!
மனத்தளவில் ஊனமடைந்து.

இப்பொழுதெல்லாம்
வீட்டில் உள்ளவர்களுக்கு
கொசுத் தொல்லையை விட
உன் இருமல்
பெரும் சல்லையாக இருக்கும்.

இந்தி சினிமாவின் தாக்கத்தாலும்
அது தரும் தற்காலிக ஊக்கத்தாலும்
உன் மகன் உன்னை
என் உயிருக்கு உயிரான
‘’ தில்பர் ‘’ என்பான்
உன் சேமநிதிப் பணம் கரைந்த பிறகு
போய்விடு வெல்பர் என்பான்.

தொழிலாளர் சேமநிதிப் பணம்…………
அது உன் இறுதி காலத்திற்கான
தர்ப்பணம்
அதை காக்கத் தவறினால்
நீ ஆவாய் நடைப்பிணம்.

கல்விக்கு என்றால்
அதிலிருந்து அள்ளிக்கொடு
ஆனால்…….
வளர்ந்த உன் பிள்ளைகளின்
கேளிக்கைக்கு கெஞ்சிக் கேட்டாலும்
கிள்ளியும் கொடுக்காதே.

அந்த நிதி
உன் ஊழிக்காலத்தில்
உன்னைக் கரை சேர்க்க உதவும்
நோவாவின் படகு.

பணம் என்ற ஊன்றுகோளை
நீ பற்றியிருந்தால் மட்டுமே
சுற்றமும் உறவும் உன்னை
சுற்றி கும்மியடித்து கூத்தாடும்
நீதான் தெய்வமென தேவாரம் பாடும்.
புரிந்து கொள்.

பச்சைப் பசேலென்று
நீ பச்சையத்தோடு
தழைத்திருந்த காலத்தில்
உன்னைத் தொற்றியிருந்த
புழுக்கள் கூட
நீ இல்லாதவனாகிவிட்டால்
அந்த ஈனப் புழுக்கைகளுக்கும்
நீ பொல்லாதவனாகிவிடுவாய்.

ஒரு காலத்தில்
நீ தான் இந்த வீட்டின்
தானைத் தளபதி
இந்த குடும்பத்தை காத்த
எல்லா வல்லமையும் படைத்திருந்த
தயாநிதி
என்பதைத் தெரிந்திருந்தும்
வாசலில் ஊதியமில்லா
செக்யூரிட்டியாகவும்
உன் வாரிசுகளான
ஆசைப் பிள்ளைகள் பெற்ற
பாசக் கிள்ளைகளின்
ஆயாவாகவும் ஆகிப்போன
உன்னைப் பார்த்துக் கேட்பார்கள்
“வீட்டில் யாரும் இல்லையா..? “ என்று.
இப்படியாக
நீ இருந்தும் இல்லாதவன் என்பதை
சொல்லாமல் சொல்வார்கள்.

உன் தொழிலாளர் சேமநிதிப் பணம்
உன் அந்திம காலத்தில்
உனக்கு அடைக்கலம் கொடுக்கும்
சத்திரம்
ஆகவே…….பத்திரம்…….பத்திரம்……
உன் சேம நிதிக்கான பத்திரம்.

Monday, October 22, 2012

அகதி முகாம்


மிருகக் காட்சி சாலைதான்
பலவந்தமாக மனிதர்கள்
அகதி முகாம்.

கழிவை நீக்கு




கல்லின் உள்ளே
கண்கவரும் சிலை
கழிவை நீக்கு

புல்லாங்குழல்


நான் முத்தமிட்டதும்
சிணுங்கியவாறு இசைக்கிறது
என் புல்லாங்குழல்.

சுதந்திர தின விழா


சுதந்திர தின விழா.
வருடந்தோறும் தொலைத்து விடுவதால்
மறுபடியும்.

மழை


எவ்வளவு உயர்ந்த நீர்வீழ்ச்சி.....!
வானத்திற்கும் பூமிக்குமாய்
மழை

நொஸ்டல்ஜியா


துங்கு காலப் பள்ளிப் படிப்பு
மறக்க முடியவில்லை
மலாக்கா பரமேஸ்வரனை.

அம்மா...........அம்மா.........அம்மா.




அம்மா.
அகரத்தில் துவங்கும் நீயே
என் ஆதிபகவன்.

எனக்காகவே உனக்குள் ஒரு
கிரகத்தை உருவாக்கினாய்.....!
கருவாக்கி உருவாக்கி
மனிதன் எனும் நிறைவாக்கிய
கருவறை என்ற கர்ப்பக்கிரகம்.
ஆகவே............
நீதான் என் கண்கண்ட தெய்வம்.

பிறக்கும் போதே
இறை என் நாக்கில்
எழுதி வைத்த மறை
" அம்மா "

நீ எழுதிய கவிதை நான்.
பிறகு.........!
கவிதையே மூன்றே எழுத்தில் எழுதிய
முதல் கவிதை
" அம்மா "

இந்தப் பிரபஞ்சத்தின் பிரஜையாக
என்னை நீ பிரசவித்த போது
நான் பாடிய தேசிய கீதம்
" அம்மா "

தொப்புள் கொடியை
வெட்டிப் பிரிக்கும் வரை
நீ வேறு நான் வேறு இல்லை.
அப்போது நம் உறவைச் சொல்ல
உலகில் எந்த மொழியிலும்
வார்த்தைகள் இல்லை..!

பத்து மாதங்களாக பத்தியம் இருந்து
இரவு பகலாக உன் உயிரெனும் உளியால்
என் உடலைச் செதுக்கி
உன் ஆவியை என்னுள்
பத்திரமாய் பதுக்கி
மனிதனாய் என்னை இந்த பூமிக்கு
அர்ப்பணித்த என் அம்மா.........
நீதான் என் பிரம்மா.

அம்மா..........
எனக்கு நினைவிருக்கிறது......!
எனக்காக நீ பாடிய
யாப்பிலக்கணத் தாலாட்டு.
என்னை நீ சீராட்டிப் பாராட்டிய
அந்த ஆராட்டிலிருந்து சிந்தியவைதான்
இன்று நான் யாத்துப் பாடும்
தமிழ்ப் பாட்டு.

நீ என் உச்சி முகர்ந்த போதுதான்
என்னுள் உறங்கிக் கிடந்த
சச்சிதானந்தம் உயிர்த்தெழுந்தது.

பத்து மாதச் சிலுவையிலிருந்து
நீயும் நானும் உயிர்த்தெழுந்தோம்.
அதன் பின் நான்
புன்னகைக்கவும் அழவும் மட்டுமே தெரிந்த
சின்னஞ்சிறு புத்தனானேன்.
நீ என் போதி மரமானாய்.

என்னுடைய அவதாரத்திற்காக
நீ கூட்டுப் புழுவானாய்.
உன்னிலிருந்து நான்
பட்டாம்பூச்சியானேன்.

மரத்திற்கு மரண தண்டனை..


ஏசுபிரான்
ஒருமுறைதான் உயிர்நீத்தார்.
எனக்கு இது இரண்டாவது முறை....!
சிலுவை வடிவில்.

சவம்


ஒரு பூவைப் பறிக்கும் போது
நட்சத்திரங்களெல்லாம்
நடுங்குவது இருக்கட்டும்.........!
அப்போது..........
உன் உயிரே அதிர்வதை நீ
உணர்ந்திருக்கிறாயா ..........?
இல்லையென்றால் நீ
இறந்து போனவன்.

மழை


தண்ணீர் நூலைக் கொண்டு
தைக்கிறது மழை ஊசி
வரட்சியால் கிழிந்துபோன
நிலமகளின் மேலாடையை.

பிரார்த்தனை


மனிதன் : கருணையே வடிவான ஆண்டவனே.......!
ஏழை எளியோரிடம் இரக்கமுள்ள இறைவா....!
சிறுபான்மை இனத்தவனாக 
சீரழியும் என்னை
பேரினவாதியாக்கு..........

இறைவன் : சரி.....அப்படியே அருளினேன்.

மனிதன் : அடேய் ஆண்டவனே...........
எங்களின் பேரினவாத ஆதிக்கத்தை
அவ்வப்போது எதிர்த்து
எங்களை பீ(பே)திக்குள்ளாக்கும் இந்த
சிறுபான்மையினரை ஒழித்துக்கட்ட வேண்டும்
என்னை அரசியல்வாதியாக்கு..........

கடவுள் காணாமல் போனார்.

சாதிப் பிரச்சாரம்


சின்ன கவுண்டர் திரையில் காண்க
தேவர் மகன் விரைவில் வருவான்
வெளிநாட்டுத் தமிழனை கெடுப்பதற்கு.

மகஜர்




"சிறுபான்மை இனத்தவனாகி
சீரழிவதிலிருந்து காப்பாற்ற
தயவு செய்து
தடுத்து நிறுத்துங்கள் என் பிறப்பை" என்று
என்னை மன்றாடி கெஞ்சிக்கொண்டிருக்கிறான்
இன்னும் பிறக்காத என் பேரன்.

குறி


ஏந்திய துப்பாக்கிகளோடு
ராணுவ அணிவகுப்பு
எதிரே மக்கள்.

இரவு


உறங்கும் சூரியனுக்கு
கருப்புப் போர்வை
இரவு.

எச்சரிக்கைப் பலகை


உயிர்த்தெழ வேண்டாமென
கர்த்தருக்கு உத்தரவு
சிலுவையில் ஏசு பிரான்

நாள்காட்டி

சரிதான்........மூடுலே......

இதுநாள்வரை என்ன கிழித்தாய்...?.
இளக்காரமாய் என்னை பார்த்து சிரித்தது
நாள்காட்டி.

GOOD MORNING


மலர்ச்சியோடு காத்திருக்கின்றன
என் வீட்டு மலர்ச்செடிகள்
வாடி வதங்கி துயிலெழும் எனக்கா

ஆயாக்கொட்டகைகள் எனும் நரகக்குழிகள்


          

இங்குதான்……………
அந்த சஞ்சி காலத்திலிருந்து
இரப்பர் தோட்டங்கள்
செம்பனைத் தோட்டங்களாக
பரிணாம வளர்ச்சியடைந்த
கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை
நாடெங்கும் நாறிக்கொண்டிருந்தது
இந்த ஆயாக்கொட்டகைகள் எனும்
தோட்டப் பாட்டாளிகளின் குழந்தைகளுக்கான
குழந்தை வளர்ப்புப் பண்ணையான
நரகக் குழிகள்.

சிலுவையில் அறையப்படாமலேயே
சித்திரவதை செய்யப்பட்டு
ஒவ்வொரு நாளும் உயிர்த்தெழுந்தார்கள்
அந்த சின்ன சின்ன யேசுக்கள்.

அவை……..
கூலிகளுக்கு பிறந்துவிட்ட
குற்றத்திற்கான தண்டனைக்காக
தோட்டப்புறங்கள் தோறும் தோற்றுவிக்கப்பட்ட
குழந்தைகளுக்கான
சின்னச் சின்ன சிறைச்சாலைகள்.

“ சொக்கரா “ என்றழைக்கப்பட்ட
எதிர்கால குழந்தைத் தொழிலாளர்களுக்கான
அறுவடைக்காக
தோட்டங்கள் தோறும்
காலனித்துவ வெள்ளைக் காலாடிகளும்
அவர்களுக்குப்பின்
உள்நாட்டு சீனக் கில்லாடிகளும்
தோற்றுவித்த
நாற்(ற)றுப் பண்ணைகள்.

மலமூத்திர நாற்றத்தில்
கொசுக்களுக்கும் ஈக்களுக்கும் மத்தியில்
அவ்வப்போது
அன்பில்லாத ஆயாக்களின்
அதட்டல்களின் அதிர்ச்சியிலும்
அந்த வாடிய பூமொட்டுகள்
பூக்க முயன்று செத்துப் பிழைத்தன.
பல செத்தே போயின.

எதிர்கால கூலிகளுக்கான விதைகள்
இந்தப் பாத்திகளில்தான்
மிகப் பத்திரமாகவும்
நாஜித்தன உத்திகளோடு
பதியன் போடப்பட்டது.

இந்த முடைநாற்ற முழையில்தான்
ஒரு இனத்தின் எதிர்காலம்
முளையிலேயே கிள்ளியெறியப்பட்டு
முடமாக்கப்பட்டது.

இந்த கூட்டுக்குள் புகுந்த ‘’ லார்வாக்கள் ‘’
பட்டாம்பூச்சிகளாக பரிணாம வளர்ச்சியடைந்து
சுதந்திரமாக பறப்பதிற்கு பதில்
கூட்டுப் புழுக்களாகவே
தோட்டப்புற தொழுவங்களில்
குறுகிப் போயின.
ஏய்க்கப்பட்ட ஏழைகளாகவும்
உரிமைகளை இழந்த கோழைகளாகவும்
வாழ்வதற்கான அடிப்படை பாடங்கள்
இந்த ‘’ நெர்ஷரி ‘’ யில் தான்
அந்த பச்சைப் பாலகர்களுக்கு
பயிற்றுவிக்கப்பட்டது.

ஊட்டச்சத்து இல்லாத உணவில்
உயிர்வாழ்வது எப்படியென்றும்
சுத்திகரிப்பட்ட தண்ணீரில்லாமல்
அசுத்த ‘’ அல்லூர் ‘’ தண்ணீரை எப்படி
அள்ளிக் குடிப்பது என்றும்
மலக்கூடமில்லாததால் தோட்டக்காட்டில்
அம்மணத்தை மறைத்தவாறு
மலங்கழிப்பது எப்படியென்றும்
இங்கேதான் சொல்லிக் கொடுத்தார்கள்.

‘’ கிலிங் ‘’ என்றழைத்த கேலியையும்
வந்தேறிகளெனும் நிந்தனையையும்
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடு
தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை
இங்குதான் சொல்லிக் கொடுத்தார்கள்.


 





அதிசயம் ஆனால் உண்மை


                                       அதிசயம் ஆனால் உண்மை
                ------------------------------------------------



கழிப்பறையில் பாரதியார் படத்தை மாட்டி
களிப்படைந்த கன்னடத்துக் கயவனுக் குத்தன்
மொழிஇனத்தின் மீதான பற்று இந்த
முத்தமிழை விற்றவனுக் கில்லை அதனால்
மொழிஇனத்தின் மானத்தைக் காப்ப தற்கு
முந்துகின்ற அவனைநாம் போற்றவேண் டும்;நம்
மொழிஇனத்தை இழிவுசெயும் எதிரியின் கால்களை
முத்தமிடும் நம்மவனைத் தூற்ற வேண்டும்

வான்புகழும் வள்ளுவனின் புகழைப் போற்ற.
வடித்தார்கள் சிலையொன்றை அவனுக் காக
மானமிகு பெங்களூர்வாழ் தமிழர் ; ஆனால்
மனிதருக்குள்  இனபேதம் கொண்ட அந்த
 கன்னடத்தான் கண்டித்தான் ; எங்கள் ஊரில்
கவின்தமிழுக் கிடமில்லை அதனால் உங்கள்
இனமான வள்ளுவனை மறைப்போம் என்றான்
இரக்கமின்றி சாக்கினிலே மூடி வைத்தான்.

கன்னடத்துக் பைங்கிளியென சரோஜா தேவியை
கதாநாயகி யாய்போற்றி சரணம் பாடி
பொன்பொருளும் மாளிகையும் பேரும் புகழும்
பொங்கித்தான் தின்பதற்கு கறியும் சோறும்
பண்போடும் பரிவோடும் தந்த தெல்லாம்
பாசமுள்ள தமிழ்சினிமா ரசிகன் ஆனால்
தண்ணீரின் பங்கீட்டுக் கெதிராய் அங்கே
சதிகாரி போட்டவேடம் தெரியும் தானே !

தென்னிலங்கைத் தீவினிலே நம்மி னத்தை
திட்டமிட்டு அழிக்கின்றான் சிங்க ளத்தான்
கண்ணெட்டும் தூரத்தில் வாழு கின்ற
கருவாட்டை போலுணர்ச்சி யற்ற அந்த
தென்னாட்டு தமிழனுக்கோ சிந்தை யெல்லாம்
சீரழிக்கும் தமிழ்ச்சினிமா மேலும் அந்த
வண்ணத்திரை நிழலுக்கு கட்அவுட் வைத்து
வார்க்கின்றான் பாலாபி ஷேக மெல்லாம்.

அடைகாத்து அவனினத்தை தமிழ கத்தான்
ஆதரித்து காக்கின்றான் இருந்தும் கூட
விடம்கொண்ட நெஞ்சத்தால் கன்னடத்தான்
விரோதம்ஏன் கொள்கின்றான் தமிழர் மீது
படவுலகில் சிறைபட்டுப் போன இந்த
பைந்தமிழனுக் கவன்தானே ‘’ சூப்பர்ஸ் டாரு ‘’
விடையேதும் தெரியாமல் விழிக்கின் றோம்யாம்
விடைதெரிந்தோர் தயைகூர்ந்து செப்பு வீரா !

(கடந்த 25.11.2007 ம் நாள் மலேசிய நண்பன் எனும் தினசரியில்
தண்ணீர் பங்கீட்டின் காரணமாய் கோபம் கொண்டு பாரதிப்
புலவனின் படத்தை கழிப்பறையில் மாட்டி தங்களின் தமிழின
வெறுப்பை காட்டிய கன்னடக்காரர்களின் செயல் கண்டு மனம்
கொதித்து நான் எழுதி வெளிவந்த கவிதை)

Sunday, October 21, 2012

சே குவேரா


                                       
                                         சே குவேரா
                   _____________
ஆதிக்கவாதிகள்
உன்னை ஒரு
சிறு தீப்பொறி என நினைத்தார்கள்
ஆனால் நீ எரிமலை என்பதை
அவர்கள் அறியாதவர்களாக இருந்தார்கள்.

உன் கண்களைப் பிடுங்கினார்கள்
ஆனால் இப்போது
உலக மக்களின் பார்வையெல்லாம்
உன் மீதுதான்.

உன்னை சிதைத்துப் புதைத்தவர்கள்
திகைத்துப் பதைத்துக் கொண்டிருக்கிறார்கள்
உலக மக்களின் மனத்தில் நீ
மறுபிறவியாய் மலர்ந்திருப்பதைக் கண்டு.

உனக்கெதற்கு கல்லறை………………?
உன் எதிரிகள் அவர்களையும் அறியாமல்
புதைத்தார்கள் உன்னை
உலக மக்களின் மனங்களில்.

நீ செத்து விட்டதாக
உன் எதிரிகள் நினைத்தார்கள்
ஆனால் அந்த அநியாயக்காரர்கள்
அறிந்திருக்க மாட்டார்கள்
நீ உலக மக்களின் சொத்தாய் இருப்பாயென்று…!
            

தண்டவாளத்தில் எங்களின் வண்டவாளம்



தண்டவாளத்தில் எங்களின் வண்டவாளம்.
---------------------------------------------------------------------------
இந்த நாட்டின் பொருளாதாரம்
பொலிவுடன் நடைபோட்டதே
இந்த தண்டவாளத்தின்
தயவோடுதான்……..!

அதோ பாருங்கள்
அந்த ரயில்தண்டவாளங்களுக்கு
அடியில் இருப்பது
சிலிப்பர் கட்டைகளா………………..?
இல்லை………….இல்லை!
அவை என் முன்னோர்களின்
உடற்கட்டைகள்.

‘’ நாட்டின் செழிப்பிற்கான
என் முன்னோர்களின் உழைப்பு
தன்னல கூலிக்கான பிழைப்பு ‘’ என்று
கேலி செய்தார்கள்.

நாட்டின் பின்புற வாசல் வழியாக
நேற்று வந்தவர்கள்
நீலக்கார்டுகளுடன் ‘’ என்னுடைய நாடு ‘’ என
தேசிய கீதம் பாடிக்கொண்டிருக்கிறார்கள்
ஆனால்……………
கடாரம் கண்ட ராஜ ராஜ சோழனின்
காலம் தொட்டு
இந்த நாட்டின் ஏற்றத்திற்கு
ஏணியாய் இருந்தவனின் சந்ததி
நிரந்தரம் இல்லாத நீர்க்குமிழியாக

வந்தேறிகளெனும் நிந்தனையோடு
சீரழிந்து கொண்டிருக்கிறது.

தண்டவாளங்களிலிருந்து
காணாமல் போன
கரிய ரயில் இஞ்ஜினைப் போல
காணாமல் போய்விட்டது
இனத்தின் மேன்மைக்கான
தென்னிந்திய தொழிலாளர் நிதி போன்ற
தடயங்கள்.

மேய்ப்பர்கள் என்றும் மீட்பர்கள் என்றும்
தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள்
ஏய்ப்பவர்களாகி
இந்த அப்பாவி ஆடுகளின்
நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும்
மேய்ந்து விட்டார்கள்.





இந்த இரு தண்டவாளங்களைப் போல்
சாதி எனும் பிரிவால்
இணையமுடியாமல் எங்கள் இனம்.
ஒன்றை ஒன்று ஒட்டாமல்
நீண்டுகொண்டே போகும் பயணமாக
எங்களின் துன்பங்கள்.

இந்த தண்டவாளங்களைப்போலவே
வறுமையெனும் ஆணிகளால்
இறுக அறையப்பட்டு
பலர் எங்கள் மேல் பயணம் செய்ய
தேய்ந்து கொண்டே போகிறோம்.







ஆண்டவனுக்கே அல்வா........!


                                ஆண்டவனுக்கே அல்வா…………..!
             ----------------------------------------------------


அவகாசம் வேண்டும் ஆண்டவனே………..!
பிறவியேனும் பெரும்பிணியை நீக்கவல்ல
உன்பொன்டியை நான் வந்தடையும் நாளை
ஆதாவது என் மகன் எனக்கு
கொள்ளி வைத்து என் சாம்பலை அள்ளியெடுத்து
‘’  தொலைந்தான் துரோகியென ‘’
ஆற்றிலோ அல்லது கடலிலோ கரைக்கும் நாளை
சில ஆண்டுகளுக்கு தள்ளி வைத்தால்
நிலுவையெனும் பெருங்கடலில் தத்தளித்து
என் நிம்மதியைக் கெடுக்கும்
சில கடமைகளெனும் கப்பல்களை
கரைசேர்த்து விடுவேன் அய்யனே…

‘’அடேய்………….மனிதப் பதரே
என் படைப்பில்
நான் அறிந்தே செய்த தவறே…………!
உன் விருப்பத்திற்கு தள்ளிவைப்பதற்கும்
என் கடமைக்கு எதிராய் தடுத்து வைப்பதற்கும்
இது என்ன…….
ஐந்து  வல்லரசுகளின் ஆளுமையிலுள்ள
ஐ(அயோ)க்கிய நாடுகளின் சபையின்
‘’விட்டோ ‘’ அதிகாரம் என்றா நினைத்தாய்.
அல்லது குறை ஆண்மை காரணமாக
இறையாண்மையென்று மூடிமறைப்பதற்கு
இது என்ன முல்லிவாய்க்காலில் நடந்த
இனப்படுகொலையென்றா நினத்தாய் ‘’ என்று
ஐயன் என் மேல்
ஆத்திரம் கொள்வதை அறிவேன் நான்.





சின்னஞ் சிறு வயதிலேயே
நீ பரிசுத்தத்துடன் எனக்குக் கொடுத்த
புனிதமான இதயக் கூட்டில்
சிகிரெட் புகையை பத்திரப்படுத்தினேன்
அதன் விளைவு……………………!
இப்போதெல்லாம் சுவாசம் என்னோடு
அடிக்கடி சூதாட்டமாடுகிறது.

ஊட்டச்சத்து நிறைந்தது என
ஊடகங்களிலிருந்து நாடகங்கள் வரை
விளம்பரப்படுத்தப்பட்ட
கின்னஸ் ஸ்டௌட்டிலிருந்து
நாட்டுச் சரக்கான லாலான் தண்ணிவரையும்
அயல்நாட்டுச் சரக்கான ஓட்காவிலிருந்து
உள்நாட்டுச் சரக்கான ஓராங் துவா வரையும்
அனைத்தும் அறிவோம் யாம்.
அதன் பலன்……………..
ஈரல் இருக்க வேண்டிய இடத்தில்
அது இருந்த அடையாளத்திற்கான
ஒரு கீரல் மட்டும் இருப்பதாக
என்னை பரிசோதித்த மருத்துவர்கள்
மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.

(குறிப்பு :- லாலான் தண்ணி மற்றும் ஓராங் துவா என்பது
மாலேசியாவில் தயாராகும் ஒரு வகை சாராயத்தை
குறிக்கும் வார்த்தைகளாகும்.நாட்டுச் சரக்கு என்றும் சொல்லலாம்)

சூதும் வாதும் வேதனை செய்யாது
சாதனை செய்யும் என சபதம் செய்து
மூன்று இலக்க லாட்டரி கடலிலும்
நான்கு இலக்க நெம்பர் சமுத்திரத்திலும்
மூழ்கி முக்குளித்தேன்.
ஆனால் ஐயகோ………….!
நத்தை வயிற்றில் பிறந்த
முத்துக்களுக்கு பதில்
கூடைகூடையாக வெறும்
கூழாங்கற்களே கிடைத்தன இறைவா………!
ஆனாலும்…….விடா முயற்சி நிச்சயம்
வெற்றியைத் தரும் எனும் நம்பிக்கையோடு
‘’ டோட்டோ ‘’ எனும் போர்க்களத்தில்
வெற்றிக்கனிகளைத் தேடி
‘’ நேட்டோ ‘’ படையெனச் சீறிப்பாய்ந்து
மூர்க்கமாய் போர்தொடுத்தேன்.
ஆனாலும்……. ஐயகோ…… ஆண்டவனே …!
அங்கேயும் என் புறமுதுகு
புழுத்துப்போகுமளவிற்கு புண்பட்டு
வெற்றிக்கனிகளுக்கு பதில்
வெம்பிய கனிகளே கிடைத்தன இறைவா.
முப்பது வயதைக் கடந்துவிட்ட
என் மூத்த மகன்
அமிதாப்பச்சனுக்கு மருமகளாகிப் போன
ஐஸ்வரியாராயைப் போன்ற
அழகியைத்தான் அடைவேனென்று
அடம்பிடிக்கிறான்.
திருமணத்திற்காக காத்திருக்கும் என்னுடைய
மூன்று திருநிறை செல்விகளுக்கு
ஏற்ற திருநிறை செல்வர்களைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
இதுவரை வந்து போன வரன்களெல்லாம்
என்னுடைய கருப்புத்தான்
என் மகள்களுடைய கறுந்தோலுக்குப்
பொறுப்பு என்று கூறி நிராகரித்துவிட்டார்கள்.

‘’ கருப்புதானே தமிழச்சியோட கலரு ‘’ என்று நான்
இனமான உணர்வோடு எடுத்தியம்பினால்
‘’ சினேகா போல சிவப்புதான்
எனக்கு பிடிச்ச கலரு ‘’ என
எதிர்பாட்டு பாடுகிறார்கள் அய்யனே……!

ஏற்கெனவே சதி செய்து கொண்டிருந்த
சாதிவெறியோடு இப்போது
இந்தத் தார் நிறத்துக் கருப்பர்களின்
நிறவெறியும் சேர்ந்து கொண்டு
என்னைப்போன்ற அப்பாக்களை
அல்லல்படுத்துகிறது ஆண்டவனே….!

ஆகவே… ஆண்டவனே………
அகிலத்தின் நாயகனே
ஆபத்பாந்தவனே
என்னைப்போன்ற அநாதைகளின் இரட்சகனே,
உனையன்றி ஓர் அணுவும் அசையாது
உன்னை விட்டால் எனக்கு வேறு திசையேது.

ஆகவே……………
அருள்கூர்ந்து ஆண்டவன்
இன்னும் சில ஆண்டுகளுக்கு
என் ஆயுளை அகலப்படுத்தினால்
நிலுவையாக எனக்கு முன்னால் நின்று
என்னைக் கழுவிலேற்றக் காத்திருக்கும் அந்த
தொடக்கூடாது என்று தெரிந்திருந்தும்
திமிரோடு தொட்டுவிட்ட குறைகளையும்
விட்டுவிடக் கூடாது என்ற விபரம் புரிந்திருந்தும்
விட்டு விட்ட நிறைகளையும்
கட்டங்கட்டமாக ஐந்தாண்டுத் திட்டங்களாக
இருபது அறுபதுக்குள் நிறைவேற்றி
தன்யனாவேன் தயாநிதியே……..



                                                                      


Sunday, October 14, 2012

திருந்துவோம்.....! திருத்துவோம்....!

திருந்துவோம்………….!திருத்துவோம்…………!!
--------------------------------------------------------------------------



பொய்யும் புரட்டும் வேதமாய் ஆனபின்
புரட்சி எப்படி நிகழும் – அறிவு
வரட்சி எப்படி தணியும்
வெய்யர்தம் தலைமையில் நம்மினம் நின்றால்
அரசியல் எப்படி சிறக்கும் – நமக்குள்
ஆற்றல் எப்படி பிறக்கும்.

பணமே இங்கு மனமாய் இருக்கையில்
பண்பு எப்படி பெருகும் – நமக்குள்
அன்பு எப்படி உருகும்.
பிணமாய் இனமே ஆன பின்னாலே
பெருமை எப்படி விளையும் – நம்
வறுமை எப்படி ஒழியும்.

இனமே சாதியில் மூழ்கிக் கிடக்கையில்
ஒற்றுமை எப்படி விளையும் – நம்மினம்
உரிமையை எப்படி அடையும்
குணமே குப்பையாய் ஆன பின்னாலே
குறள்நெறி எங்ஙனம் பரவும் – நற்
கொள்கைகள் எப்படி மருவும்.

குடியும் மடியும் இனத்தை ஆண்டால்
கூடிப் பெருகும் துயரம் – தமிழ்க்
குடிதான் எப்படி உயரும்.
அடிதடி வம்பு வன்முறை வாழ்வெனில்
அடுத்த தலைமுறை கவிழும் – நாட்டில்
நம்மின பெருமை  அவிழும்.



Thursday, October 11, 2012

தன்னலம் கொள் தம்பி



ஏழ்மையிலே நீயிருந்தால் சேற்றில் புரளும்
எருமையும் மதிக்காது; வாழ்க்கைத் தேர்வில்
கீழ்ந்தவனென் றால்உற்ற உறவும் உன்னை
விழிதேங்கும் பீழையென்றே உதறித் தள்ளும்
பாழ்பட்டுப் போகும்உன் பிறப்பு ; வீணாய்
பதராகிப் போகும்உன் எதிர்கா லம்தான்
சீழ்பிடித்த புண்ணாக உன்னை இந்த
சிறுபான்மைத் தமிழ்ச்சமூகம் ஒதுக்கி வைக்கும்.

குணக்குன்றாய் திகழ்கின்றாய் இருந்தும் உன்னை
குதிரைமுட்டை என்கின்றார் ; மனத்தால் கெட்டு
பணக்குன்றாய் உயர்ந்தோரைக் காலைத் தொட்டு
பணிவாகக் கும்பிட்டு ஒடுங்கி நிற்பார்
பணமிங்கு பாதாளம் மட்டு மல்ல
பரலோகம் வரைபாயும் அதனால் தம்பி
தனவந்த னாவதற்கு வழியைப் பாரு
சமுதாயத் தொண்டெல்லாம் பிறகு பார்ப்போம்.

போதுமென்ற மனமிருந்தால் அதனைக் கொண்டு
பொன்செய்யும் மருந்தொன்றைச் செய்ய லாமாம்
ஓதுகின்றார் நம்மினத்தார் இதனைப் போன்ற
உதவாத புண்ணாக்கு வேத மெல்லாம்
காதுகளை மலடாக்கி வறியோ ராக்கும்
காசுக்கு உதவாத இதனைப் போன்ற
தீதுசெய்யும் புண்மொழியை பொன்மொழி யென்றே
சித்தரித்து தன்முனைப்பைக் கெடுத்து விட்டார்.


கஞ்சப்பய லென்றுசொல்லி காய்வான் உன்னை
கருத்துடனே சிக்கனமாய் காசைச் சேர்த்தால்
பஞ்சப்பர தேசியென்பான் அவனே உன்னை
பஞ்சத்தில் நீவரண்டு போனால்; இந்த
நெஞ்சத்தில் விடம்கொண்ட நீசர் தம்மின்
நியாயத்தை நீகேட்க வேண்டாம்; கொண்ட
சஞ்சலங்கள் சங்கடங்கள் தீர வேண்டின்
சகலசௌபாக் கியங்கள்தரும் பணத்தைத் தேடு.

பசையென்று உவமையாகச் சொல்லும் அந்த
பணமென்ற பேறதனைப் பெற்றால் தம்பி
பதவியுடன் பட்டங்கள் பரிவா ரங்கள்
பாராட்டு பொன்னாடை எல்லாம் நீயே
சதமென்று புகழ்பாடி சரணம் பாடும்
தரணியில்;நீ நினைப்பதெல்லாம் நலமே கூடும்
உதவிகோரி தெய்வங்கள் உன்னை நாடும்
உபயம்திருப் பணியென்றே ஊரே தேடும்.

எளியவனென் றால்உன்னை எலியும் எதிர்க்கும்
ஏனென்று கேட்டாலே எட்டி உதைக்கும்
வலியவனென் றால்சீறும் புலியும் மதிக்கும்
வாவென்றால் மண்டியிட்டு வணங்கித் துதிக்கும்
நலிவுபொருளா தாரத்தை ஆட்சி செய்தால்
நல்வாழ்வு மட்டுமல்ல சமுதா யத்தில்
மலிவாகிப் போகும்உன் தன்மா னந்தான்
மதிப்பிழந்து போகும்உன் வாழ்வு தம்பி.