Wednesday, February 23, 2011

கரையேறாத கடல் ஆமைகள்

தோட்டப் புறங்களில் தொடங்கிய வாழ்க்கையில்
தொழில்வளம் சேர்த்துத் தந்தோம் – தேசம்
செழித்திடத் தோள்கள் கொடுத்தோம்
காட்டைத் திருத்தியே தோட்டங்கள் செய்தோம்
கடலளவு செல்வம் விளைத்தோம் – ஆனால்
கரையேற மறந்து விட்டோம்.

ஒற்றுமை இல்லாத இனமான தால்இங்கு
உரிமைகளை இழந்து விட்டோம் – நாங்கள்
ஓட்டாண்டி யாகி விட்டோம்.
கற்றது கையளவே  யானாலும் அதன்படி
நிற்க மறந்து விட்டோம் – நியாயத்தில்
நிலைக்கத் தவறி விட்டோம்.

திருக்குறள் சொன்னதை திருமூலன் தந்ததை
தெருப்பலகை யாக்கி வைத்தோம் – முதுமக்கள்
தாழியில் பூட்டி வைத்தோம்
ஆரியன் காட்டிய அழிவான பாதையை
ஆகமம் வேதம் என்றோம் – இன
அழிவிற்கு வழி வகுத்தோம்.

கலைகலாச் சாரத்தில் சீரிய பண்பாட்டில்
பிழைகளை செழிக்க விட்டோம் – சினிமாக்
களைகளை தழைக்க விட்டோம்
மூளையை முடமாக்கி மோழையாய் நமைமாற்றும்
வழக்கத்தின் வழி நடந்தோம் – மூடப்
பழக்கத்தின் தடம் கிடந்தோம்.

நாளை நமதெனும் நம்பிக்கை விடுத்து
இன்றே நமதெனப் பாடுவோம் – நம்
இதயத்தில் புத்தொளி ஏற்றுவோம்
ஏழை சமூகமெனும் இழிவினைப் போக்குவோம்
ஏற்றம்தரும் ஒழுக்கங்கள் பேணுவோம் – நம்
இளையோர்க்கு நல்வழி காட்டுவோம்.
பழிசுமக்கும் மாபலிகள்

பாவம் அவர்கள்………….!
அவர்களை
குறுகிய மனப்பான்மை உடையவர்களென்று
குறை சொல்லாதீர்கள்
அவர்கள்…………
மற்றவர்கள் நிறைவான வாழ்க்கையுடன்
நிமிர்ந்து நிற்க வேண்டுமென்பதற்காக
தங்களின் தன்னலமற்ற உழைப்பை
அவர்களுக்கு
தானமாகத் தாரைவார்த்துவிட்டு
அதற்கு காணிக்கையாக
அவர்கள் தந்த
சாபங்களையும் சோகங்களையும்
தங்களின் முதுகில் சுமந்து சுமந்தே
கூனர்களாகிப் போனவர்கள்.

தன்மானமற்றவர்கள் என்று அவர்களைத்
தவறாக எடைபோடாதீர்கள்.
வலிந்து தரப்பட்ட வறுமையெனும்
காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டோடும்போது
வேறுவழியின்றி
தங்களைத் தற்காத்துக்கொள்ள
தலைவணங்கும் நாணல்களைப் போல
பல தலைமுறைகளாக
சுரண்டப் பட்டு சுரண்டப்பட்டே
சூடுதாங்காமல் சுருண்டுபோனவர்கள்.

அவர்கள் தங்களுக்குள்
ஒற்றுமையில்லாதவர்கள் என்று
ஓலமிடாதீர்கள்.
அவர்கள்…….
தங்களுடைய கனவுகளையெல்லாம்
தங்களின் கண்களே
கவர்ந்து கொண்டதால்
தவறான தப்பெண்ணத்தால்
இமைகளின்மேல் கோபங்கொண்டு
இமைப்பதையே விட்டுவிட்டவர்கள்.

நண்டுகளை உவமை காட்டி
அவர்களை
நையாண்டி செய்யாதீர்கள்.
அவர்கள்…………
அவர்களை ஆளவேண்டுமென்று
ஆசைப்பட்டவர்களுக்கெல்லாம்
தங்களின் வேர்களையே
விழுதுகளாகத் தந்த விபீஷணர்கள்.

அவர்கள்…………
அசிங்கமானவர்கள் என்று
அருவருப்புக் கொள்ளாதீர்கள்.
அது அழுக்கல்ல…….!
அவர்களின் நிறம்.
இருட்டடிப்பு

....ராமனும் சீதாப்பிராட்டியும்
தெய்வங்களானார்கள்
இலக்குவனும் பரதனும்
இலட்சிய புருஷர்களானார்கள்

அனுமனின் ஆக்ரமிப்பும்
அங்கீகரிக்கப்பட்டது

வாலியின் வதை என்ற பேரிலான
வன்முறையும் நியாயப்படுத்தப்பட்டது.

ராமர் பாலம் கூட இப்போது
சேது சமுத்திரத்திற்கெதிராக
மானபங்க வழக்கொன்றை
பதிவு செய்திருக்கிறது.

வேடவனின் மகனான வால்மீகியின்
தூரிகை வரைந்த
இந்த இதிகாசப் பதிவுகளை
கற்பனை என்று கூறிய
வாயிற்குரிய நாவையும்
நாவிற்குரிய தலைக்கும்
கண்டனம் தெரிவிக்கப்பட்டு
துண்டிக்கப்பட வேண்டுமென்ற
தண்டனையும் அறிவிக்கப்பட்டாகிவிட்டது.
ஆனால்………………………….!
தமிழ் இராவணனின்
இலங்காபுரியின் இறையாண்மை மட்டும்
இன்றுவரை இருட்டடிப்பு செய்யப்படுகிறதே
ஏன்………………………….
தமிழனின் அடையாளம் அங்கே
தட்டுப்படுவதினாலா……………………..!
கிழக்கு விடியுமா?

அட………என்னாத்தெ செய்வது கடவுளேஇங்கு
இவனோட வாழவும் முடியலே
நல்லதைச் சொன்னா மொறைக்கிறான்இவன்
ஞாயத்தைக் கேட்டால் குரைக்கிறான்
பள்ளத்தைத் தனக்கே தோண்டுறான்இந்த
பாருக்கு பாரமாய் வாழ்கிறான் – (அட……..)

நஞ்சைப் பாலுன்னு குடிக்கிறான்அதை
நஞ்சுன்னு சொன்னா வெடிக்கிறான்
வஞ்சகரின் சூழ்ச்சியில் தேய்கிறான்இவன்
வாயில்லாப் பூச்சியாக வாழ்கிறான். (அட….)

பதவிக்காக இனத்தையே விற்கிறான்கொடும்
பாவிக்கு பல்லக்கு தூக்குறான்
உதைப்பவனைக் கண்டால் மிரளுறான்இவன்
ஓணானைப் போல நிறம் மாறுறான்    (அட…..)

நல்லதைச் சொல்லவும் முடியல்லேஅதை
நாசுக்காய் சொன்னாலும் ஏறலே
கிள்ளினால் அழக்கூடத் தெரியல்லேஇவன்
கிழக்கெப்போ விடியுமுன்னு புரியல்லே.   (அட…..).

வீரம்
வீர விளையாட்டாம்.........வீர வீரவிளையாட்டு...........
ஏன்.........சிங்கம் புலிகளுடன் ஆடுங்களேன்.......
ஜல்லிக்கட்டுக் காளை காரித்துப்பியது.
விடுதலை

அடிமைத்தளை அறுத்து
விடுதலையானது
அறுந்த செருப்பு.
திகாசச் சதியும் இக்கால விதியும்

நாங்கள்
கடலைக் கடைந்தோம்
அமிர்தத்தை அபகரித்துக் கொண்டு
எங்களுக்கு
ஆலகால விஷத்தை மட்டும் கொடுத்தார்கள்.

பாலங்கள் அமைக்க நாங்கள்
பாறைகள் சுமந்தோம்
ஆனாலும்………………..
அவர்களால் நாங்கள்
வானரங்கள் என்று
வர்ணிக்கப்பட்டோம்

சத்ரியர்களுக்கு மட்டுமே
சகல வித்தைகளும் என்றார்கள்
அதனால்
வில்லாக நாங்களே வளைந்து
நம்பிக்கையோடு நாணேற்றினோம்
அதற்காக
அவர்கள் எங்களின்
விரல்களைப் பிடுங்கிக் கொண்டார்கள்.

சமயம் வாய்க்கும் போதெல்லாம்
பிரகலாதர்களின் கொம்புகளை
கூர்மையாகச் சீவி விட்டார்கள்
வளர்த்த கிடாக்களாக
மார்பில் பாய்வதற்கு.
ஈறுகெட்ட பெயரெச்சம்

சிவப்புக்கம்பளம் சிறுமைப்பட்டுப்போனது
இரத்தக்கறையைத் துடைக்கும்
கைக்குட்டையானதால்.....!


Friday, February 18, 2011

ரோஜாவின் கண்ணீர்

ஆசிய ஜோதியென அகிலம் போற்றியவரும்
அகிம்சையெனும் போதிமரத்தடியில்
ஞானம் பெற்றவருமான நேருவின் நெஞ்சில்
பூத்திருந்த சிவப்பு ரோஜாவிலிருந்து வடிகிறது............!
ஒரு இனப்படுகொலையில்
ஈவு இரக்கமில்லாமல்
கதறக் கதற வதைக்கப்பட்டு சிதைக்கப்பட்ட
ஈழத்தமிழ்க்குழந்தைகளின்
இரத்தம்.

Wednesday, February 16, 2011

நம்பு தமிழனே நம்பு........!

பஞ்ச வர்ணக் காக்கை ஒன்று
மஞ்சள் நிறப் பாடாக் குயிலுடன்
கூடி வாழ்ந்து குடும்பம் நடத்தி
பெங்குயின் பறவை ஒன்றை ஈன்றது
நம்பு தமிழனே நம்பு!

நாளைக் காலையில் உதிக்கும் சூரியன்
சதுர வடிவில் சந்தன நிறத்தில்
மேகம் இல்லா பச்சை வானில்
மேற்கே தோன்றி வடக்கே மறையும்
நம்பு தமிழனே நம்பு......!

பாலை வனத்தில் பதமாய்க் காய்ந்த
பக்குவ மான மணலைக் கொண்டு
களைப்பு இன்றி கால்களி னாலே
கலைநயத் துடனே கயிரு திரித்தேன்
நம்பு தமிழனே நம்பு!

அவித்த கடலையில் முளைத்த பயிரை
அனுதினம் மேய்ந்து கொழுத்துப் பெருத்த
காதல் செய்யாத எங்கள் வீட்டுக்
காளை மாடு கன்று ஈன்றது
நம்பு தமிழனே நம்பு!

உலகத் தமிழர்கள் ஒன்று கூடி
ஓரினம் நாமெனும் கொள்கையை நாடி
வளமாய் நம்மிடை வளர்ந்திடும் சாதியை
தமிழ்க்குலம் காத்திட தகர்த்தெறிந் தனரே
நம்பு தமிழனே நம்பு!
வாழைமரங்கள்

வாழையடி வாழையாக வாழ்கவென
உங்களை உவமையாக வைத்து
எங்களை எங்கள் இனத்தவர்கள்
வாழ்த்துவதால்தானோ என்னவோ………….
ஒரு தலைமுறையின்
அறுவடையின் அழிவில்தான்
எங்களுக்கான மறுதலைமுறையின்
அறுவடைக்கான
மறுநடவு செய்யப்படுகிறது.

வெயில்தான் உனக்கு உணவு
அது போலவே
வறுமைதான் எங்களுக்கு வாழ்வு.

மலர்களோடு சேர்ந்ததால்
உன் நாரெனும் நரம்பும்
நறுமணம் பெறுகிறதாம்…………!
இப்படிச் சொல்லித்தான்
எங்களையும் ஏமாற்றினார்கள்.



நீங்கள் ஒரே வெட்டில்
வீழ்ந்துவிடும் வழுவில்லாதவர்கள்
ஆனால் எங்களில் பலரோ
வெட்டுவதற்கு முன்பே விழும்
தெளிவில்லாதவர்கள்……….!

உங்களுக்குள்ளே நீங்கள்
வெட்டிக்கொள்(ல்)வதில்லை
ஆனால்………….
நாங்கள் அதைச் செய்கிறோம்.


Tuesday, February 15, 2011

தொட்டாச்சிணுங்கியாய் இரு

மறுவாகத் தாழ்வுமனப் பான்மை உந்தன்
மனத்தினிலே உருவானால் உயர்வு இல்லை
பொருளில்லார்க் கிவ்வுலகம் இல்லை என்னும்
பேருண்மை புரிந்தோர்க்கு வானமே எல்லை
உறுதியுடன் முயன்றிட்டால் உன்னால் முடியும்
ஒளியிழந்த இருண்டஉன்கீழ் வானம் விடியும்
வருமானம் உன்வீட்டின் வாசல் தட்டாது
வறுமையென வாடிநின்றால் வளமை கிட்டாது

ஏமாளித் தனமாக வாழ்ந்து விட்டு
எடுப்பார்கைப் பிள்ளையாக இருந்து விட்டு
கோமாளி யானேனே கூறு கெட்ட
குருமுட்டை யானெனெ என்றே ஏங்கும்
காமாலைக் கண்ணாஉன் கருத்தை மாற்று
காசுபணம் சொத்துசுகம் உன்னைத் தேற்றும்
சீமானே கோமானே என்றே உலகம்
பூமாலைப் போட்டுஉனைப் புவியில் போற்றும்.

தொட்டாச்சிணுங் கியைப்போன்று தன்மா னத்தை
தொட்டவுடன் துடித்துணரும் தன்மை வேண்டும்
பட்டென்று வெடிக்கின்ற பட்டா சைப்போல்
பழிவந்தால் அதைத்தீர்க்கத் துடிக்க வேண்டும்
கொட்டக்கொட் டக்குனிந்தது போதும் கொண்ட
கொள்கையிலே இனவுணர்வு வேண்டும் எதிலும்
வெட்டொன்று துண்டிரெண்டு என்றே முடிவில்
விதியமைத்துக் காரியங்கள் முடிக்க வேண்டும்.

தோல்விகளுன் வாழ்வில்தினம் தொடர்ந்து வந்து
தொகைதொகையாய்த் துயரத்தைத் தந்த போதும்
வேள்விகளென் றெண்ணிமனம் துவண்டி டாமல்
வென்றிடுவேன் எனமுழக்கம் செய்வாய்; பிறவியின்
ஊழ்வினையே யானாலும் உறுதி கொண்ட
உள்ளத்தின் உழைப்பாலே உலகை வென்று
வாழ்க்கையெனும் போரினிலே வாகை சூடி
வள்ளுவனின் குறளைப்போல் நிலைக்க வேண்டும்.
கண்ணீரைப் பன்னீராய் மாற்றுவோம்.
தோற்றுவிட்டோம் என்பதுவும் உண்மைதான்அதற்காக
துயர்கொண்டு துவண்டுமனம் வெம்பலாமா
போற்றும்படி நம்நிலைமை இல்லைதான்அதற்காக
தூற்றும்படி தரம்தாழ்ந்து போகலாமா
சாலைகள் சமைத்தோம் வீதிகள் அமைத்தோம்
விபத்துக்களே நமக்கு விதியாயின -  இனி
பாலையில் விதைக்கும் பகுத்தறிவில்லா
பழக்கத்தை வழக்கத்தை புதைப்போம்.

இருள்சூழ்ந்த எதிர்காலம் உண்மைதான்அதற்காக
ஈசலா,நாம் இழிவாகச் சாவதற்கு
வறுமைநமை வாட்டுவதும் உண்மைதான்அதற்காக
மண்புழுவா வெந்தணலில் நோவதற்கு
காடுகள் திருத்தி தோட்டங்கள் செய்தோம்
கேடுகள்தான் நம்மைவந்து சேர்ந்தனஇன
சாடுவோம் நம்மை வீழ்த்திய விசைகளை
தேடுவோம் வெற்றியின் திசைகளை.

நாதியில்லை நமதுகுறை கேட்பதற்குஅதற்காக
நலம்கெட்டு தெருவோரம் வாடலாமா
நீதியில்லை நமதுநிலை மாற்றுதற்குஅதற்காக
நெறிதவறி முறைகெட்டு வாழலாமா
காலைமாலை இரவுபகல் உழைத்தும் நல்ல
வேலைவந்து சேராது களைத்தோம்இனி
நாளை நமதெனும் கனவை கலைத்து
இன்றெ நமதெனப் பாடுவோம்.

வாழ்க்கையிலே வளமில்லை உண்மைதான்அதற்காக
வழிமாறி தடம்புரண்டு வீழலாமா
ஏழ்மையிலே உழல்கின்றோம் உண்மைதான்அதற்காக
ஊழ்வினைதான் எனநம்பி ஓயலாமா
தன்னலம் துறந்து தளரா துழைத்தோம்
இன்னல்களே நம்மைவந்து சேர்ந்தனஇனி
கொண்டதே கோலமெனும் கோணலை அழிப்போம்
கண்ணீரைப் பன்னீராய் மாற்றுவோம்.